Thursday, July 24, 2008

சாதிப்போம்

பாதை தெரியுது பார்



எல்லோருடைய மனதிலும் எழுகின்ற எண்ணம் தான் இது ஏதாவது சாதிக்க வேண்டும்,சாதிப்போம் என்பது ஒரு நம்பிக்கை. நம் லட்சியத்தை அடைய வேண்டும் என்ற குறிக்கோள். எதையாவது சாதிக்க வேண்டும் என்பவர்களை விட, எதைச் சாதிக்க வேண்டும் என்ற தெளிவான சிந்தனையுள்ளவர்கள் தாங்கள் தொட வேண்டிய இலக்கை எளிமையாகத் தொடுகின்றார்கள். ஒவ்வொவருக்கும் வெவ்வேறு தளத்தில் அல்லது துறையில் சாதிக்க வேண்டும் அல்லது தடம் பதிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அது எது வேண்டுமானாலும் இருக்கலாம். சிலர் பெரிய பேச்சாளராக, எழுத்தாளராக, கவிஞராக, பொதுநலவாதியாக அவர்களுடைய மனதைப் பொறுத்து அவர்களுடைய எண்ணங்கள் இருக்கும். ஒரு சிலருடைய எண்ணம் அவர்களுடைய தனிப்பட்டவைகளாக இருக்கும். ஒரு சிலருடைய பொதுவான சிந்தனையாக அல்லது ஒரு சமுதாயத்தைச் சார்ந்த சிந்தனையாக இருக்கும்.

தனிப்பட்ட சிந்தனையுள்ளவர்கள், அவர்கள் சாதிக்க வேண்டும் என்று நினைப்பது ஒன்று அவர்களுடைய ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் அல்லது
அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் விதமாக இருக்கும் அல்லது அவர்கள் செய்யும் தொழிலில் புதிதாகச் சாதிக்க வேண்டும் என்பதாக இருக்கும். இவர்களை நாம் எந்தக்குறை சொல்லவும் முடியாது. எனென்றால் அவர்கள் தங்கள் குடும்பத்தின் மீது வைத்திருக்கும் இயற்கையான அன்பின் பிரதிபலிப்பு. இதனால் அவர்கள் எடுக்கும் முயற்சிக்குக் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு முழுமையாக இருக்கும். மனதில் ஒரு உணர்வு இருந்தால்தான் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும். இவர்களை யதார்த்தவாதிகளோடு ஒப்பிடும்போது பரவாயில்லை தானும் , தன் குடும்பமும் மற்றவர்களிடம் இருந்து எதாவது ஒன்றில் தனித்துக் காட்ட வேண்டும் என்பதில் எந்தக் குற்றமும் இல்லை.

பொதுவான ஒரு விஷயத்தில் அல்லது சமுதாயத்திற்காக சாதிக்க வேண்டும் என்பவர்களுக்கு ஆதரவும் இருக்கும் எதிர்ப்பும் இருக்கும். முதலில் அவர்கள் குடும்பத்திலிருந்து எதிர்ப்பு இருக்கும். முதலில் யாருக்கு ஒரு சமுதாயத்திற்காக சாதிக்க வேண்டும் என்ற உணர்வு வரும் என்றால், சமுதாயத்தில் ஒரு தவறு நடக்கும் பொழுது அவனுடைய மனதில்த தட்டிக் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அவர்களால் தான் முடியும். இவர்களுக்கு மன உறுதி அதிகமாகவே இருக்கும். இவர்களின் செயல்களில் நல்லது இருந்தால் ஆதரவு பெருகும். இவர்கள் தங்களுக்குள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து ஒரு குழுவாக செயல்படுவார்கள். இவர்கள் மறைந்தாலும் இவர்களின் செயல்கள் பலருக்கு எடுத்துகாட்டாக இருக்கும்.

ஒரு சிலரின் மனநிலை ஏதோ பிறந்தோம், நம் காலம் முடியும் வரை வாழ்ந்து விட்டு செல்வோம் என்பதில் எந்தப் பொருளும் இல்லை.நாமும் எந்த பிரச்சினைக்கும் செல்லக்கூடாது, நமக்கும் எந்த பிரச்சிசனையும் வரக்கூடாது என்று இருந்தால் , நம்மால் சந்திக்க முடியவில்லை, நாம் சந்திக்கப் பயப்படுகிறோம் என்பதைக் காட்டுகிறது. நம் மீது நம்மை விட வேறு யார் நம்பிக்கை வைக்க முடியும்.

எடுத்துக்காட்டாக ஒரு தென்னை மரத்தின் மட்டையை எடுத்துக் கொள்வோம்.
ஒரு தென்னைமட்டையின் ஆயுள் காலம் 6 மாதம் தான், அது மரத்தில் இருக்கும் பொழுது தேங்காயைத் தாங்குகிறது, தேங்காய் பறிக்க செல்லும் மனிதர்களைத் தாங்குகிறது. அது காய்ந்து விழுந்தாலும் அதன் ஓலை பந்தல் போடுவதற்க்குக் கீற்றாகவும், ஓலையிலிருந்து பிரிக்கப்படும் குச்சி துடைப்பானகவும் பயன்படுகிறது. ஆறு மாதமே மரத்தில் இருக்கும் மட்டை விழும் பொழுது ஒரு தடத்தைப் பதிவு செய்கிறது. அந்தத் தடம் கூட மரம் ஏறுவதற்கு வசதியாக உராய்வை ஏற்படுத்துகிறது. ஒரு மனிதனின் ஆயுட்காலம் சராசரியாக 60 ஆண்டு காலம். நாம் எவ்வாறு நம் தடத்தை இந்த சமூதாயத்திற்காக இந்த பூமியில் என்ன பதிவு செய்ய உள்ளோம்?.

Tuesday, July 8, 2008

திண்ணை


திண்ணை என்பது என்ன என்று கேட்டால் இன்றைய சமூகத்தில் பல பேருக்கு த்தெரிவதில்லை. திண்ணை என்பது என்ன ? அதன் பயன் என்ன ! அதனுடைய சமுக பயன்பாடுகள் பற்றிப் பார்ப்போம்.

அமைப்பு:
திண்ணை என்பது ஒரு திண்டு போன்ற அமைப்பு. இது வீட்டின் முன் பகுதியில் பிரதான வாயில் அல்லது தலைவாசல் பகுதியில் உள்ள ஒரு திறந்த வெளி அமைப்பாகும். இது காலைத் தொங்கவிட்டு அமர்வதற்கு வசதியாக இருக்கும்.இன்னொருபுறம் சுவரில் சாய்ந்து இருப்பதற்கு வசதியாக இருக்கும். திண்ணையில் இருக்கும் தூண்கள் வீட்டின் கூரையைத் தாங்கி பிடிப்பதற்கு உதவியாக இருக்கும்.





பயன்:
பழங்காலத்தில் போக்குவரத்து இல்லாத காலகட்டத்தில் மக்கள் கால்நடையாக ஒர் இடத்தில் இருந்து வேறு இடங்களுக்குச் செல்வது வழக்கம்.அந்த நேரங்களில் மக்கள் தங்களைக் கொஞ்சம் இளைப்பாற்றிக் கொள்ள வீதி ஓரங்களில் இருக்கும் எதாவது ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து செல்வார்கள். அல்லது வீட்ற்கு நெருக்கம் இல்லாத நபர்களை உபசரிபதற்க்கும் பயன்படுத்துவார்கள்.
காலையில் வேலைக்குச் செல்லும் மக்கள் மாலையில் தங்களை இளைப்பாற்றி கொள்ளவும் தங்கள் உறவினர்களோடு பேசி மகிழவும் திண்ணையை பயன்ப் படுத்துவார்கள்.

சமுகப்பயன்பாடுகள்:
பழங்காலத்தில் திண்ணையில் பள்ளிக் கூடங்களை நடத்தினார்கள்.ஊரில் உள்ள சிறார்கள் எதாவது ஒர் வீட்டின் திண்ணையில் கூடி குரு அதாவது ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கும் பாடங்களை படிப்பார்கள். இதைத் திண்ணைப் பள்ளிக்கூடம் என்பார்கள்.
ஊரில் எதாவது முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டும் என்றாலும் அல்லது குடும்பங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளை ஊரில் உள்ள ஒரு பெரியவரின் வீட்டுத் திண்ணையில் ஒன்று கூடி முடிவு எடுப்பார்கள்.

இன்றைய மக்களின் மனநிலையும் திண்ணை காலத்து மக்களின் மனநிலையும்:
இன்றையகாலத்து மக்கள் படிக்கிறார்கள் அறிவு வளர்கிறது நல்லதுதான் ஆனால் அவர்கள் மனநிலை சுருங்குகிறது. அவர்கள் மனநிலை நான்,என் மனைவி குழந்தைகள் என ஒரு குறுகிய வட்டத்துக்குள் வந்து விடுகிறது.அவர்கள் தங்கள் கட்டும் வீடுகளுக்குச் சுற்றுச் சுவர் போடுகிறார்கள் கேட்டால் பாதுகாப்பாக இருக்கும் என்பார்கள் நல்லதுதான்.சுற்றுச் சுவர் போட்டாலே என் அனுமதி இன்றி உள்ள வராதே என்று சொல்லாமல் சொல்வதுதான் பொருள்.இப்பொழுது எந்த வீட்டிலும் திண்ணை வைத்துக் கட்டுவதில்லை கேட்டால் பழங்காலத்தில் போக்குவரத்து இல்லை இப்பொழுதுதான் எல்லாம் இருக்கிறதே வழிபோக்கர்கள் இல்லையே என்று சொல்வார்கள். அல்லது திண்ணை இருந்தால் யாராவது வந்து வெட்டியாகப் பேசிக்கொண்டு இருப்பார்கள் என்பார்கள். ஆனால் அவர்கள் வீட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து நேரத்தை வீணடித்துக் கொண்டு இருப்பார்கள். தங்கள் உறவினர்களிடம் பேசுவதை விடத் தொலைபேசியில் வேறு யாரிடமாவது கதையடித்து கொண்டிருப்பார்கள். வெளியே சென்று பேசினால் யாரும் உதவி கேட்டுவிடுவார்களோ என்று பயப்படுகிறார்கள்.

ஆனால் திண்ணை வீட்டுக் காலத்து தங்கள் கட்டியிருக்கும் வீடு சிறிது என்றாலும் அதில் ஒரு பகுதியை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள திண்ணை வைத்து வீடு கட்டும் பெரிய மனதுக்காரர்களாக இருந்தார்கள்.திண்ணையில் கூடி வெட்டியாகப் பேசிப் பிரச்சனைகளை இழுப்பார்கள் என்று ஒரு வாதம் இருந்தாலும், பொதுவாக திண்ணை என்பது உறவினர்கள் நண்பர்கள் ஒன்று கூடி பேசி மகிழ்ந்து தங்கள் துன்பங்களையும்,பிரச்சினைகளயும் தங்கள் மகிழ்ச்சிகளையும் அனுபவங்களயும் பகிர்ந்து கொள்ளும் உறவின் பாலமாகவே இருந்துள்ளது. இன்று கண்டு பிடிக்கப்படும் புதிய சிந்தனையும், புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளும் திண்ணை காலத்து ஞானிகளின் வாதங்களையும் அவர்களின் சிந்தனையும் மேற்கோள் காட்டியே கண்டுபிடிகபட்டது.திண்ணை காலத்து மக்களிடம் மூடநம்பிக்கை உண்டு என்னும் வாதம் இருந்தாலும் அவர்களின் உண்மையான அன்பான உபசரிப்பாலும் எதையும் எதிர்பார்க்காமல் செய்யும் உதவியினாலும் மூடநம்பிக்கை மறைந்துவிடுகிறது.
பொதுவாக திண்ணை என்பது உறவின் பாலமாகவும், அறிவின் பல்கலைக்கழகமாகவும் இருந்துள்ளது.

குழந்தை மனம் போல் இருக்க வேண்டும் என்றால் குழந்தை போல் நாம் ஆக வேண்டும் என்பது பொருள் அல்ல. அது போல நாம் திண்ணை வீடு கட்டவேண்டும் என்று கட்டாயம் இல்லை அந்தச் சாத்தியக்கூறுகளும் இல்லை. ஆனால் நமது மனநிலையை மாற்றிகொள்வோம். நமது குழந்தைகளையும் அதன்படி வளர்ப்போம்.