Thursday, November 20, 2008

அரசியல்வாதிகள் எப்படி உருவாக வேண்டும்.



அரசியல் என்பது ஒரு நல்ல வார்த்தைதான். அரசியலில் நல்ல மனிதர்கள் , பொதுநலவாதிகள் இருக்கும் வரை அது நன்றாகத்தான் இருந்தது. ஆனால் இன்றைய நாகரிகமற்ற அரசியல் வாதிகளால் , மக்களுக்கு அரசியல் என்றாலே முகம் சுளிக்க வைக்கும் வார்த்தையாக உள்ளது. தங்கள் அலுவுலகங்கள் , பணிசெய்யும் இடங்கள் போன்றவற்றில் எல்லாம் ஒருவர் உயர் பதவி பெற்றால், அரசியல் செய்து பதவியைப் பெற்றுவிட்டான் என்று சொல்லுகிறார்கள். அந்த அளவிற்கு அரசியல் என்ற வார்த்தை தரம் கெட்டு போய்விட்டது, காரணம் சில தவறான அரசியல் வாதிகளால்.

இந்த தவறான அரசியல்வாதிகள் எதனால் உருவாகுகிறார்கள் என்று பார்த்தால் , லட்சியத்திற்காகவும் , உரிமைக்காகவும் மற்றும் பொதுநலனுக்காகவும் போராடும் அல்லது பாடுபடும் அரசியல் வாதிகள் இல்லாததுதான் காரணம். அப்படியே அவர்கள் தோன்றினாலும் சில காலத்துக்குள் தங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பெரிய அரசியல் கட்சிகளிடம் விலை போய்விடுகிறார்கள். அல்லது இவன் வளர்ந்துவிட்டால் பெயர் வங்கிவிடுவானோ என்ற காரணத்திற்காக மற்ற அரசியல் கட்சிகள் இவர்கள் மீது அவதூறுகளைப் பரப்பி மற்றும் பொய்யான வழக்குகளைப் புனைந்து , மக்களிடம் நல்ல அரசியல்வாதிகளின் கருத்துகள் சென்று விடாமல் மட்டம் தட்டிவிடுகிறார்கள்.

இவற்றுக்கு எல்லாம் காரணம் எது என்று பார்த்தால் , நம்மை ஆளுகின்ற அரசியல்வாதிகளும் உயர் பதவிகளிலும் இருப்பவர்கள் தாங்கள் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள். உண்மையான கருத்துகளை சொல்பவர்களும் , உரிமைக்காகவும் போராடுபவர்களும் தண்டிக்கப்படுகிறார்கள், ஏனென்றால் ஆட்சி செய்பவர்களுக்கு உண்மை பிடிப்பது இல்லை. நம்மை ஆளுபவர்கள் கொள்ளை அடிப்பவர்களும் , சுயநலவாதிகளாகவும் மற்ற எதையும் பற்றி சிந்திக்காதவர்களாகவும், தங்களின் பதவி சுகத்திற்க்காக இன உணர்வு, மானம், இலட்சியம் எல்லாவற்றையும் இழக்கவும் தயாராக இருக்கின்றார்கள்.

ஒரு சாதரண வேலைக்கு ஆள் தேர்ந்து எடுக்கும் போது அவர்களின் படிப்பு என்ன , அவர்களின் குடும்பப் பின்னணி என்ன? அவர்கள் மீது ஏதும் வழக்கு இருக்கிறதா என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்து தேர்ந்து எடுகிறார்கள். ஆனால் ஒரு நாட்டை ஆளப்போகிற , உயர் அமைச்சர் பதவிகளில் இருக்கப்போகும் அரசியல் வாதிகளுக்கு எந்த ஒரு வரைமுறையும் இல்லை. தங்களின் சாதி செல்வாக்கை வைத்து , பண செல்வாக்கை வைத்து, ஊடகங்களின் மூலமாக மக்களிடம் உள்ள செல்வாக்கை வைத்து அல்லது தங்களின் அடாவடித்தனமான நடவடிக்கைகளை வைத்து எதாவது ஓர் அரசியல் கட்ச்சியில் சேருகிறார்கள் அல்லது ஓர் அரசியல் கட்சியைத் தொடங்குகிறார்கள். இவர்கள் எல்லாம் பதவிக்கு வரும் பொழுது இவர்களிடம் நாம் ஆக்கபூர்வமான செயல்களையும் எதிர்பார்க்க முடியாது.

எந்த தகுதியும் இல்லாத அரசியல்வாதிகளிடம் நாம் உண்மை , நேர்மை லட்சியம் என்று பேசினால் அவர்களுக்குப் புரியாது. அமைச்சர்களாக இருப்பவர்களின் பின்னணிகளை பார்த்தால் அவர்கள் தலைமை வகிக்கின்ற துறைக்கும் எந்த விதமான தொடர்பும் இருக்காது, கல்வி தகுதியும் இருக்காது பிறகு எப்படி இவர்களிடம் நாம் ஒழுங்கான செயல் பாடுகளை எதிர்பார்க்க முடியும். அரசியல் வாதிகளுக்கு அல்லது அமைச்சர்களுக்கு எதாவது குறைந்த பட்சக் கல்வித்தகுதியைக் கட்டாயப்படுத்த வேண்டும் என்று சொன்னால் இதற்கு முன்னால் ஒரு சில படிக்காத மேதைகள் அமைச்சர்களாக இருந்ததை மேற்கோள் காட்டி சாக்கு போக்கு சொல்வார்கள்.

ஓர் அரசியல்வாதி எப்படி உருவாக வேண்டும் என்று பார்த்ததால் அனுபவத்தின் மூலமாகத்தான் வரவேண்டும். தான் சந்திக்கும் பிரச்சனை, ஒரு சமுதாயம் சந்திக்கும் பிரச்சனை அல்லது ஒரு பிரிவினர் சந்திக்கும் பிரச்சனை, ஒரு இனம் சந்திக்கும் பிரச்சனை, செல்லுகின்ற இடங்களில் எல்லாம் சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் செயல்கள், நாட்டிற்க்கு எதிராக நடக்கும் செயல்கள், ஒரு சாதரண குடிமகன் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள், சிறுபான்மை மக்கள் ஆதிக்க சக்திகளால் சந்திக்கும் பிரச்சனைகள் எல்லாம் பார்த்து ஒரு மனிதனின் மனது துடித்து இவர்களுக்காக சாதிக்க வேண்டும் என்று துடித்து ஒருவன் எழுகின்றானோ, அவனிடம் இருந்துதான் உண்மையான ஆக்கபூர்வமான செயல் பாடுகளை எதிர்பார்க்க முடியும். நல்ல செயல்கள் செய்யும் பொழுது பயங்கர எதிர்ப்புகள் பிரச்சனைகள் வரத்தான் செய்யும் அவற்றை எல்லாம் தாண்டித்தான் வரவேண்டும்.

ஒரு நேர்மையான அரசியல்வாதி தன்னுடைய கருத்துகளை , தன்னுடைய உணர்வுகளைச் சொல்லும் பொழுது மக்கள் அவர்களுக்குத் துணை நிற்க வேண்டும் , மக்கள் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும். அப்பொழுதுதான் நாம் இலட்சிய வாதிகளைத் தலைவர்களாகவும் , நேர்மையானவர்களை அமைச்சர்களாகவும் அடையமுடியும். நாமும் நம் நாடும் செழித்து வாழ முடியும்.


""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா