Thursday, October 14, 2010

கனவுகளின் கதாநாயகன் அப்துல்கலாம்




சீர்திருத்தத்தின் சிற்பியே
சிந்தனைகளின் சிகரமே
எளிமையின் ஏற்றமே
அறிவின் அரசரே

ராக்கெட் மட்டுல்ல ஏற்றியது - நீ
பாரதத்தின் புகழையும் எங்கள் இலட்சியத்தையும்.

பறைசாற்றி கொள்ளாத பகுத்தறிவுவாதி -நீ
ஏனென்றால் அறிவியல் தமிழன் நீ.

கனவு காணுங்கள் , இலட்சியத்தோடு இருங்கள் என்று
ஈரடிகளால் எங்களை வளைத்த வள்ளுவன் - நீ

முறையான சமுதாயம் அமைய
பள்ளி சிறார்களிடம் சீர்திருத்த கருத்துக்கள்
மூலம் மின்சாரம் பாய்ச்சிய ஐன்ஸ்டின் -நீ

கனவு காணுங்கள் வல்லரசாக மாற்றலாம்
இளஞ்சர்களின் பொறுப்பை உணர்த்தி
வாருங்கள் என்றழைத்த விவேகானந்தர்- நீ

மனித வளம் உள்ள நம் நாட்டின்
மக்கள் சக்தியைச்சீர்படுத்தவேண்டும் என்று
தத்துவங்கள் பொழிந்த சாக்ரடீஸ் - நீ

இயற்கையிடமும் , உன்னை நாடி வருபவர்களிடமும்
கடிதம் எழுதுபவர்களிடமும் அன்பு காட்டும் மனித நேயன் - நீ

நீ எழுதிய அக்னிச் சிறகுகள்
எங்கள் அறியாமையை எரித்தது

நீ எழுதிய எழுச்சித் தீபங்கள்
எங்கள் இலட்சிய திரியைப்பற்றவைத்தது

மன்னர்களும் , பிரபுக்களும் நிர்வாகம் செய்த
குடியரசுத்தலைவர் மாளிகை உன்னால்தான்
மக்கள் மன்றம் ஆனது.

பாராளுமன்றத்தில் நீ எடுத்துக்காட்டிய
மக்கள் நல திட்டங்கள் - அவர்களின்
சுயலாப செயல்பாடுகளால் எடுபடவில்லை.

நீ மாற்ற வேண்டும் என்று நினைத்தாய்
பாரதத்தை வல்லரசாக அமைதிப்பூங்காவாக
ஆனால் சுயலாப அரசியல்வாதிகளால்
உன் முயற்சிக்கு பலன் அளிக்கவில்லை

ஒரு நாள் விடியும் அது உன்னால் முடியும்
என்றழைத்த உன் இளைஞ்ர் கூட்டம் எங்கே?
இதோ மதுக்கடை வாயிலிலும்,வீணான கேளிக்கையிலும்
நடிகர்களின் மாயத்தோற்றத்தில் மயங்கியும் கிடக்கிறது

முடியும் வரை போராடு
உன்னால் முடியும் வரையல்ல
உன் இலட்சியம் நிறைவேறும் வரை -என்று
எங்களின் உணர்வுக்கு உயிர் கொடுத்த கலாமே
உங்களுக்கு எங்களின் சலாம்

நாங்கள் கனவு கண்டால்
நீதான் கனவில் - ஏனென்றால்
அறிவுசார் கருத்து பெட்டகம் நீ
இலட்சிய கோட்பாடுகள் கொண்ட மாமேதை நீ
எங்கள் கனவுகளின் கதாநாயகன் நீ

No comments:

Post a Comment