Tuesday, December 14, 2010

சாதி தீ மறையட்டும்.

புயல் என்பது இயற்கையின் கிளர்ச்சி
புரட்சி என்பது உணர்வின் கிளர்ச்சி

புரட்ச்சி என்பது எரிமலைப் போன்றது. அது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உறங்கி கொண்டிருகிறது. அது எப்பொழுதும் வெடிப்பதில்லை. திடீரென ஒருநாள் வெடித்துச் சிதறுகிறது. பல்வேறு நாடுகளில் புரட்சியால் , எரிமலை போல வெடித்துச் சிதறிய நாட்கள் வரலாற்றின் பக்கங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

புரட்சிக்கான காரணமும் , யாரிடமிருந்து யாருக்கு விடுதலை தேவை என்பதும் நாட்டிற்க்கு நாடு, இனத்திற்கு இனம் வேறு படுகிறது. தற்போது தமிழ் மக்களாகிய நாம் சாதி , மத , இன , மூடநம்பிக்கைகளையும் ஒழிக்க ஒரு புரட்சியில் ஈடு படவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்த புரட்சியில் ஈடுபடத்தவறினால் வந்தாரை வாழவைக்கும் தமிழினம் அழிந்து போகும் அபாயம் ஏற்ப்படும்.

கள்ளம் கபடமற்ற குழந்தையிடம் முதன்முதலில் சாதியை புகுத்துவது பள்ளிகூடமாகவே உள்ளது. நீ எந்த சாதியை சார்ந்தவன்? என்று கேட்டு அந்த குழந்தையின் மனதில் சாதித்தீயை பற்ற வைக்கிறார்கள். அறியாமை இருளை அகற்றவேண்டிய கல்விக் கூடங்களே சாதியை நன்கு அறிமுகப்படுத்துகிறது.

பாம்பு புற்றை விட
சாதி சங்கங்களைப் பார்க்கும் போது தான்
பயம் அதிகரிக்கின்றது

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் சங்கம் வைத்து தமிழை வளர்த்துள்ளார்கள். அனால் இருபதாம் நூற்றாண்டு தமிழர்களோ சங்கம் வைத்து சாதியை வளர்க்கிறார்கள். இன்றைய அரசியலோ சாதியை நம்பிதான் உள்ளது. தேர்தலின் வெற்றித் தோல்விகளும் சாதியை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன. சாதிகளை ஒழிக்கப் பாடுபடவேண்டிய அரசியல் வாதிகள் மக்களிடயே சாதி உணர்வை ஊக்குவித்து தங்களுடைய பதவி ஆசைகளை நிறைவேற்றி கொள்கின்றனர்.

கூண்டுக் கிளியின் விடுதலைக்காக
பூனை கிளர்ச்சி செய்ததது - அது
கிளியின் விடுதலைக்கு அல்ல
தன் பசியை நீக்க (கலைஞர்)

இது போல தான் இன்றைய சாதித் தலைவர்கள் . சாதிப் பெயர் கொண்ட சங்கங்கள் அமைப்பதும் , சாதி மக்களுக்காக நன்மை செய்வது போல் நடிப்பதும், அதனை அரசியல் கட்சியாக மாற்றிக் கொள்வதும் , அதனை பயன்படுத்தி பதவிகளை கைப்பற்ற முயற்சிப்பதும் தலைக்குனிய வைக்கும் செயல்களாகும்.

சாதிகள் அன்று முதல் இன்று வரை சமுதாயத்தை அலைக்கழித்து வருகின்றது. சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட பலர் சாதியை எதிர்த்து குரல் எழுப்பி கொண்டே இருக்கிறார்கள் எனினும் சாதி ஒழிந்த பாடில்லை.

சாதிகள் சட்டமயமாக்கப்படிருக்கும் இந்த நாட்டில் ஒரு மனிதன் தன்னை எவ்வாறு அறிமுகப் படுத்தி கொள்வான்?
தான் இந்த சாதியை சார்ந்தவன் என்றா?
தான் இந்த இனத்தை சார்ந்தவன் என்றா?
தான் இந்த மதத்தை சார்ந்தவன் என்றா?

இளைய சமுதாயமே! தமிழ்த்தாயின் வீரப்புதல்வர்களின் விலைமதிப்பற்ற இரத்தம் தேய்ந்து புனிதமடைந்திருக்கும் தமிழ் மண்ணில் இருந்து கொண்டு ஏளனத்திற்குரிய கீழ்த்தரமான வாழ்கை வாழ வெட்கமாக இல்லையா? இன்றைய தலை முறையை எண்ணி புரட்சி பாதையில் நடைபோட உங்கள் மனம் விரும்பவில்லையா? இதையெல்லாம் மறந்தவிட்டு இன்றைய இளைய சமுதாயம் தான் தலைவியாக நினைக்கும் சினிமா நடிகர்களின் பிறந்த நாளுக்கு சுவரொட்டி ஓட்ட விரைந்து கொண்டிருக்கிறது.

இளைய சமுதாயத்தின் சாதிப் பெயரால் தாழிடப்பட்டுள்ள தமிழர்களின் இதயக்கதவுகள் உடைந்து நொறுங்கட்டும். தமிழர்களின் பாமரத்தன்மையும் , அப்பாவித் தனமும் அழியட்டும் , நம் பெயருக்கு பின்னால் உள்ள சாதித்தீ மறையட்டும் , மனித நேயம் வளரட்டும். தமிழினம் செழிக்கட்டும்.

இளைஞனே!
நீ முடங்கி கிடந்தால்
சிலந்தியும் சிறைபிடிக்கும்

நீ பொங்கி எழுந்தால்
எரிமலையும் துணைநிற்கும்

உன்னால் பூமியை
புரட்டவும் முடியும்

உன் எலும்புகள்
தீண்டாமையை உடைக்கட்டும்

உன் பார்வை வீச்சு
மூட நம்பிக்கையை எரிக்கட்டும்

உன் பேச்சால்
தமிழன் சிந்திக்கட்டும்

சீரழிந்த சமுக்கதத்தை சீர்படுத்த
சாவின் விழிம்புவரை தொடரட்டும்
உன் போராட்டம்(கவிதாசன்)

No comments:

Post a Comment