உணர்ச்சி என்பது என்ன?. வெளியில் இருந்து ஒன்று நம்மை எதாவது ஒரு விதத்தில் அதாவது தொடுதல் அல்லது நம் மனதைப் பாதிக்கும்படி நடக்கும் செயல் என்பது உணர்ச்சியாகும். உணர்ச்சி என்பது சில நொடிகள் , சில நிமிடங்கள் அல்லது சில மணித்துளிகள் தான் நீடிக்கும்.உணர்ச்சி என்பது உடலில் ஏற்படும் மாற்றம்.
உணர்வு என்பது ஓர் உணர்ச்சியை உள்வாங்கி கொண்டு அதை அறிவுப் பூர்வமாக சிந்தனை செய்து , நாம் கொடுக்கும் வெளிப்பாடு. உணர்வு நம் மனதில் எப்போதும் ஓடும் ஒரு நிகழ்வு. உணர்வு என்பது மனதில் ஏற்ப்படும் மாற்றம்.
உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவை விட, உணர்ந்து எடுக்கும் முடிவே சிறந்தது என்று ஒரு பொன்மொழி உண்டு.
ஒரு மனிதனுக்கு உணர்ச்சி வேண்டும் இல்லை என்றால் அவன் இறந்தவனுக்குச் சமம். ஆனால் அவன் உணர்ச்சியை வெளிப்படுத்தும் விதம் மற்றவர்களை பாதிக்காதவண்ணமும் , அவனைப் பாதிக்காதவண்ணமுமாக இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு நாம் உடனே எடுக்கும் முடிவு பல பின்விளைவுகளை உண்டாக்கும். அது அவர்களுக்கு மட்டும் பிரச்சனை அல்ல அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் சிரமத்தை உண்டாக்கும். நாம் உணர்ச்சிவசப்பட்டு பேசும் பேச்சு , செய்யும் செயல் மற்றும் எடுக்கும் முடிவு நாம் அதை செய்யும் நேரம் சரி என்று தெரியும் .உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவு மிகக்குறுகிய நேரத்தில் முடிந்து விடும். பின்னால் அந்த செயலை நினைத்துப் பார்த்தல் மிக கொடுமையான முடிவாக இருக்கும். இந்த சில மணித்துளிகள் ஏற்ப்படும் உணர்ச்சிகளால் சில நல்ல செயல்களும் நடைபெறும் , பல தவறான செயல்களும் நடைபெறும்.
உணர்வு என்பது மிக மிக முக்கியமான ஒன்று , எல்லா மனிதர்களுக்கும் உணர்வு இருக்கும் . நம்முடைய உணர்வை யார் மதிக்கின்றார்களோ அவர்கள் நமக்கு மிகப்பெரியவர்களாக தெரிவார்கள். நம்முடைய உணர்வை யாரும் அதாவது நமக்கு உரிமைப் பட்டவர்கள் கூட மதிக்கவில்லை என்றால் நமக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கும். நம் மனதில் தோன்றும் அனைத்துமே உணர்வுதான். நம்முடைய உண்ர்வு மிக மிகச்சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் நம் உணர்வு தெளிவாக, உண்மையாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக பசி என்பது கூட ஓர் உணர்வுதான் , அந்த நேரத்தில் நமக்கு யார் உணவு தர முன்வருகின்றார்களோ அவர்கள் அந்த நேரத்தில் அவர் நமக்குத் மிகப்பெரிய ஆளாக தெரிவார். ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவரும் நம் குடும்ப உறுப்பினர்களுடைய நல்ல ஆரோக்கியமான உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தால் குடும்பம் மிக அமைதியாகவும் , மகிழ்ச்சியாகவும் இருக்கும். ஒரு மனைவி அவள் கணவனுடைய உணர்வை மதிக்க வேண்டும். ஒரு கணவன் அவன் மனைவியுடைய உணர்வுகளை மதிக்க வேண்டும்.ஒருவர் தன்னை போல் மற்றவருக்கும் உணர்வு உண்டு என்பதை உணரவேண்டும். இதில் வீணான தலைக்கனம் காட்டத் தேவை இல்லை. அப்பொழுதான் இல்லறம் மகிழ்ச்சியாக இருக்கும்.
உணர்வும் , உணர்ச்சியும் தனித்தனியாக செயல்பட்டால் பிரச்சனை தான். நம்முடைய ஆரோக்கியமான உணர்வை வெளிப்படுத்த உணர்ச்சி தேவை. உணர்வு மட்டும் தனியாக இருந்ததால் பயனில்லை. உணர்ச்சியின் வெளிப்பாடு உணர்ந்து வெளிவந்தால் பயனுள்ளதாக இருக்கும். உணர்ச்சிவசப்பட்டு குறுகிய நேரத்தில் எடுக்கும் முடிவு , நாம் எடுக்கும் தைரியமான முடிவு என்று நினைத்தால் அது ஒரு முட்டாள்தனம் அதன் பின்விளைவுகள் மிக அதிகமாக இருக்கும் . உணர்ந்து எடுக்கும் முடிவு தாமதமாக இருந்ததாலும் அதன் வெளிப்பாடு சரியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.
வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் மக்களின் உணர்ச்சியுடன் கூடிய உணர்வான போராட்டம் பல வெற்றிகளை தந்திருக்கிறது. நம் குடும்பம் , நாடு , மொழி என்ற உணர்வு இருந்தால்தான் அதன் மேல் ஒரு பற்று வரும். நாம் சாதிக்க வேண்டும் , வாழ்வில் உயர வேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டால் மட்டும் போதாது .அதற்கான உணர்வுடன் திட்டமிட்டு செயல் பட்டால் மட்டுமே சாதிக்கலாம். எனவே உணர்வான உணர்ச்சியுடன் செயல்பட்டால் வாழ்வில் உயரலாம்.
Thursday, September 25, 2008
Tuesday, September 23, 2008
கல்வியும் அறிவும்.
அறிவு என்பது என்ன என்று பார்த்தால் ஒரு செயலைப் புரிந்து கொண்டு அதைத்திறம்பட , யாருக்கும் பிரச்சினை இல்லாமல் சரியான நேர்முறையில் செய்தல் ஆகும். அறிவு என்பது பிறவியிலே எல்லோருக்கும் கொடுக்கப்பட்டதொன்றாகும். அறிவைப் பயன்படுத்தி சரியான அல்லது நேர்மையான முறையில் செயல்பட்டால் நமக்கும் நம்மைச்சுற்றி உள்ளவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். நாம் சிந்திக்கின்றபொழுது அறிவையே பயன் படுத்துகின்றோம். ஒவ்வொரு உயிர்களுக்கும் தேவைக்கு ஏற்ப அறிவு கொடுக்கப் பட்டிருக்கிறது. அதிகப்பட்சமாக மனிதர்களுக்கு ஆறு அறிவு கொடுக்கப்பட்டுள்ளது. நாம் அதைப்பயன் படுத்துகிறோமா , பயன்படுத்தினால் எவ்வழியில் பயன்படுத்துகிறோம்.
கல்விக்கூடம் சென்று கற்றால்தான் அறிவு வருமா என்று கேட்டால் இல்லை. ஏனென்றால் முற்காலத்தில் நம்மை ஆண்டவர்கள் , நம்மை வழிநடத்தியவர்கள் எல்லோரும் கல்வி அதிகம் இல்லாதவர்கள்தான். நம் முன்னோர்கள் படிக்காமலே ஞானிகளாக இருந்தார்கள். எடுத்துக்காட்டாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கரிகால சோழன் கட்டிய கல்லணை இன்றும் எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் பல மாவட்டங்களுக்கு நீர்ப்பாசன வசதியை அளிக்கிறது. அவர்கள் கண்டு பிடித்துக்கூறிய சொன்ன விண்வெளியில் ஒன்பது கோள்கள் உள்ளன என்பதுதான் இன்றைய அறிவியலும் சொல்லுகிறது. அவர்கள் கட்டிய கோட்டைகள், கோவில்கள் ,சுரங்கப்பாதைகள் , பாலங்கள்,ஓவியங்கள் , சிற்பங்கள் இன்றளவும் மிகக்கம்பிரமாக உள்ளன . இப்படியாக பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. என்பது நாம் எவ்வாறு நம்முடைய கவனத்தைச் சிந்தனையைச் செதுக்குகின்றோமோ அதன் படி வளர்கிறது.
கல்வி என்பது நமது அறிவைப்பலப்படுத்த ,சீர்ப்படுத்த அல்லது ஊக்கப்படுத்த உதவுகிறது. ஆனால் இன்று கல்வி கற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள். பழங்காலத்தில் கல்வி அதிகம் கற்காதவர்கள் எழுதிய இலக்கிய இலக்கனாங்களை ஆராய்ந்து இன்று முனைவர் பட்டம் வாங்குகிறார்கள். பழங்காலத்தில் கல்வி அறிவு இல்லாதவர்கள் தெரியாமல் தவறுகள் செய்தார்கள். ஆனால் இன்று கல்வி கற்றவர்கள் தெரிந்தே அனைத்துத்தவறுகளையும் செய்கிறார்கள்.
பழங்காலத்தில் ஆடை இல்லாத காரணத்தினால் ஆடை இல்லாமல் அரை குறையாகத் திரிந்தார்கள் ஆனால் இன்று கற்றவர்கள் நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு அரை குறை ஆடையுடன் செல்கிறார்கள், கலாச்சாரச்சீரழிவு செய்கிறார்கள். குற்றம் செய்கின்றவர்களைக் கணக்கு பார்த்தல் கல்வி கற்றவர்களே அதிகம். தாங்கள் கற்றதினால் வந்த அறிவைத் தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள். கையூட்டு வாங்குபவர்கள் அனைவரும் மிக அதிகமாக கற்றவர்கள் தான். நம் முன்னோர்கள் கட்டிய அனைத்தும் இன்றளவும் நிலைத்து நிற்கும்போது , இன்று கற்ற பொறியாளர்களைக்கொண்டு கட்டும்பொழுது சிறிது காலங்களில் பழுது அடைந்து விடுகிறது.
கல்வி கற்றவர்கள் தங்களின் சுய லாபத்திற்காக அதிகம் கல்வி கற்காதவர்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எந்த ஒரு முன்னேற்றம் அல்லது வளர்ச்சிப்பணிகளுக்குத் தடை செய்கிறார்கள். எடுத்துக்காட்டாக சாலை அகலப்படுத்துதல் போன்ற பணிகள் நடக்கும்பொழுது , அதற்குத் தேவையான நிலம் தேவைப்படும் பொழுது நிலத்துக்கு உரியவர்கள் அதைக்கொடுக்க மறுக்கிறார்கள் நீதிமன்றம் செல்கிறார்கள். இதனால் வளர்ச்சிப்பணிகளின் வேகம் தடைப்படுகிறது. அந்த வளர்ச்சிப்பணி அவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்தாலும் அதைப்பயன்படுத்தி ஏதாவது லாபம் கிடைக்குமா என்று பார்க்கிறார்கள்.
கல்வி கற்று அதிகமாகத் தங்களுடைய அறிவை நேர்மையான பல நல்ல வழிகளுக்குப்பயன் படுத்துகிறவர்கள் இருக்கும் பொழுது , இது போன்ற நல்ல கல்வியைக் கற்றுக் கொண்டு தவறான செயல்களில் ஈடுபடுகிறவர்களால் , கல்வியின் மீது உள்ள நல்ல எண்ணங்கள் தடைபடுகிறது. கற்காத காலத்தில் உள்ள மனிதர்கள் பயன் படுத்திய அறிவை விட இவர்கள் அதிகம் அறிவு பெற்றிருந்தாலும் , இவர்களுடைய நேர்மையில்லாத உழைப்பினால் அது அதிகப்பயனில்லாமல் போகிறது.
கற்ற கல்வியுடன் அறிவைப் பயன்படுத்தினால் அது மக்களுக்குப் பயனுள்ளதாகவும் , மக்களின் வளர்ச்சிக்கும் அதிக உதவியாகவும் இருக்கும்.
Saturday, September 20, 2008
உறவுகளின் கதவுகள் திறக்கட்டும்.
இன்றைய சூழ்நிலையில் நாம் எந்த அளவிற்கு உறவுக்கு அல்லது உறவினர்களுக்கு மதிப்புக் கொடுக்கிறோம் என்று பார்த்தால் மிகவும் குறைவாகவே உள்ளது. அப்படி நாம் மதிப்பு கொடுக்கின்ற உறவுகளைப் பார்த்தால் எதாவது கைம்மாறு கருதியே கொடுக்கிறோம். நாம் பணத்திற்குக் கொடுக்கிற மதிப்பு நம்முடைய இரத்த உறவுகளுக்குக் கொடுப்பதில்லை. பணம் தேடி பல இடங்களுக்குச் செல்கிறோம் ஆனால் உறவைத் தேடி பக்கத்து வீட்டுக்குச் செல்ல யோசிக்கிறோம். எதனால் நாம் இந்த கொடுர சூழ்நிலைக்கு ஆளானோம்? அல்லது தள்ளப் பட்டோம்?. தினசரி செய்திகளில் பணத்தின் மதிப்பைப் பார்ப்பது போல உறவுகளின் நிலைமையும் ஏற்ற இறக்கங்களில் செல்கிறது.
முதலில் உறவுகள் மற்றும் உறவினர்கள் எதற்காக என்று பார்ப்போம். ஒருவர் மற்றொருவருக்கு ஆறுதலாக இருக்கத்தான். நம்முடைய இன்ப மற்றும் துன்ப நிகழ்வுகளில் அவர்களின் பங்கேற்பு அதிகமாக இருக்கும் மற்றும் நம்முடைய இன்ப , துன்பங்களை பரிமாறிக்கொள்ளலாம். உறவினர்கள் ஒர் இடத்தில் வசிக்கும்பொழுது , உறவினர்கள் குழுமி யாருக்காவது சிறு சிறு பிரச்சினைகள் அல்லது அவர்களுக்குத் தேவைகள் ஏற்படும் பொழுது இவர்களின் உறவு உதவியாக இருக்கும்.
நமக்கு என்ன என்ன உறவுகள் உள்ளன ?, அப்பா வழி உறவுகள் அம்மா வழி உறவுகள் , மற்றும் நம் உடன் பிறந்த அண்ணன் ,அக்கா ,தம்பி , தங்கை . நாம் இவர்களுடன் எந்த அளவில் உறவுடன் உள்ளோம் என்பதைப் பார்க்க வேண்டும்.
அதற்கு நம் பெற்றோர்கள் எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்.அவர்கள் அவர்களுடைய உடன் பிறந்தவர்களுடன் எந்த அளவிற்கு உறவு வைத்திருகின்றாகளோ அதே போலத் தான் இருப்பார்கள் அவர்களுடைய பிள்ளைகளும். பெற்றோர்கள் அவர்கள் உடன் பிறந்தவர்களுடன் நல்ல உறவு வைத்திருந்தார்கள் என்றால் அவர்களுடைய குழந்தைகளும் அவர்களுடைய உடன் பிறந்தவர்களிடம் நல்ல உறவு வைத்திருப்பர்.
இக்காலச்சூழ்நிலையில் ஒவ்வொருவரும் வேலை மற்றும் தொழில் ரீதியாகவும் வெவ்வாறு இடத்தில் பிரிந்து இருக்க வேண்டிய கட்டாய நிலைமை உள்ளது . கணவன் ஒர் இடத்தில் மனைவி ஒர் இடத்தில் குழந்தைகள் ஒர் இடத்தில் இப்படியாக வாழ வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ளது. எல்லாம் வாழ்க்கையில் முன்னேற அல்லது நல்ல நிலைமையை அடையவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால். இவர்கள் தங்கள் குடும்ப்பத்தாரிடமும் , உறவினர்களிடம் எந்த அளவிற்கு உறவு வைத்திருப்பார்கள் என்றால் சற்றுக் குறைவாகத்தான் இருக்கும்.
இப்படிப்பட்ட குறைகளை நிறைவு செய்யத்தான் திருவிழாக்கள் , பண்டிகைகள் , சுப நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஏற்படுத்தி உறவினர்களை ஒன்று சேர்த்து மகிழ்வுடன் கொண்டாடினார்கள். இன்று நாம் எந்த அளவிற்கு நம்முடைய நிகழ்ச்சிகளுக்கு உறவினர்களை அழைக்கின்றோம்?. உறவு எந்த நிலைமையில் உள்ளது என்று பார்த்தால் நம்வீட்டில் உள்ள சுப நிகழ்ச்சியின் நன்கொடை ஏடுகளைப் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டிஉள்ளது.
ஏன் உறவுகளைப் பார்த்து கதவுகளை அடைக்கின்றோம்?. எதனால் நாம் சொந்தங்களை பார்த்து மனது வெம்புகிறோம்?. அவர்கள் வந்து உன்னிடம் எதாவது கேட்டு விடுவார்கள் என்றா?.
ஏன் உறவினர்கள்?, எதற்கு உறவுகள்?அவர்கள் எங்களை ஏமாற்றுகிறார்கள் ,
அவர்கள் எங்கள் சொத்தை அபகரிப்பதிலேயே இருக்கிறார்கள். எனவே உறவுகள் தேவை இல்லை. உறவுகளால் பிரச்சினைதான் என்று சொல்லுகிறார்கள்.
நாம் பணத்திற்கும் , சொத்திற்கும் கொடுக்கின்ற மதிப்பை அப்படியே கொஞ்சம் உறவினர்களிடம் கொடுத்துப் பார்த்தால் எந்தப் பிரச்சினைக்கும் வழி இல்லை . மனிதனின் சராசரி ஆயுள் காலம் அறுபது ஆண்டுதான். நமக்குள் இருக்கும் தேவை இல்லாத தலைக்கனங்களை,வீண் பிடிவாதங்கள் மற்றும் வறட்டு கவுரவங்களை விட்டு விட்டு ஒருவருக்கு ஒருவர் நல்ல உறவுடன் வாழும் இந்த குறுகிய காலத்தில் வாழ்ந்து மகிழ்வோம். நம்முடைய எல்லா நல்ல நிகழ்வுகளுக்கும் உறவினர்களை அழைத்து அவர்களுடன் நல்ல உறவுடன் உறவாடி , மகிழ்வுடன் மற்றும் ஆரோக்கியமான உறவுடன் வாழ்வோம். உறவுக்காக நம் கதவுகள் திறந்து இருக்கட்டும் நமது வாழ்க்கை செழுமையாகட்டும். உறவுகளைப் பலப்படுத்துவோம்.
Labels:
domi,
dominic,
dominic raja,
rajagopalaperi,
tamilnadu,
உறவினர்கள்,
உறவுகள்
Thursday, September 11, 2008
அறிவியல் கண்டுபிடிப்பைக் கொஞ்சம் நிறுத்துங்கள்
அறிவியல் மேதைகளே கொஞ்சம் உங்கள் புதிய கண்டு பிடிப்புகளை நிறுத்தி , ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்திரங்களோடு பேசியது போதும் , அவற்றோடு உறவாடியாது போதும்.அறிவியல் கூடத்தை விட்டு வெளியே வாருங்கள். கொஞ்சம் உங்கள் மனைவி , குழந்தைகள் , பெற்றோர்களுடன் உறவாடுங்கள் , இல்லை என்றால் நாங்கள் எல்லோரும் சிறிது காலம் கழித்து ரோபோக்கள் என்று சொல்லப்படும் கணினி எந்திரத்தோடு தொடர்பும் மற்றும் குடும்பம் நடத்த வேண்டிய கட்டாய நிலைமைக்குத் தள்ள பட்டு விடுவோம்.
மனிதன் எந்திரமாக உழைக்கின்றான் , என்ற நிலைமை மாறி,எந்திரம் மனிதனாக மாறி வேலை செய்ய ஆரம்பித்தால் நாம் என்ன செய்வது?, எந்திரம் நம் வேலையைச் செய்தால் நாம் வேற என்ன வேலை செய்வது?, நம் வேலையை எந்திரம் செய்ய ஆரம்பித்தால் , மனிதனின் வேலை வேறு விதமாகத்தான் மாறும் , இதனால் கலாச்சார சீரழிவுகள் தான் நடக்கும், அல்லது தேவை இல்லாத பல பிரச்சினைகள் பிறக்கும். மனிதன் இப்பொழுதே அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்த நாடுகளில் கிட்டதட்ட அறிவியல் கண்டுபிடிப்பு பொருள்களுடன்தான் வாழ்க்கையை நடத்துகிறான்.
குடும்ப உறுப்பினர்களிடம் பேசுவதை விட கணினி முன்பு உட்க்கார்ந்து முகம் தெரியாதவர்களிடம் பேசிப்பொழுதைக் கழிக்கின்றான், பக்கத்தில் இருக்கும் நண்பர்களிடம் பேசுவதை விட தொலைபேசியில் மணிக்கணக்கில் மற்றவர்களிடம் பேசி நேரத்தை வீணாக்குகிறார்கள்.பயணங்களின்போது அருகில் அல்லது உடன் பயணம் செய்பவர்களிடம் பரஸ்பரம் விசாரிப்பதைக் கூட விரும்பாமல் காதில் கருவியை மாட்டிக்கொண்டு தலையை மட்டும் ஆட்டுகிறார்கள், மற்றவர்களைப் பார்த்து புன்முறுவல் செய்யக் கூட மறுக்கின்றார்கள். எல்லா விதமான விளையாட்டுகளையும் கணினி கூடவே விளையாடி முடிக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மனிதனின் தொடர்பை இழந்து , எந்திரங்களோடு தொடர்பை அதிகப்படுத்துகின்றார்கள்.
இதே நிலைமை நீடித்தால் இன்னும் கொஞ்ச நாட்களில் , வீதிகளில் மனிதனுக்குப் பதிலாக ரோபோக்கள்தான் நடமாடும், மனிதன் ரோபோக்களை பயன்படுத்தி விளையாட ஆரம்பித்துவிட்டதால் ரோபோக்களுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டியது இருக்கும்.பல வனவிலங்குகளை ரோபோக்கள் மூலமாகத்தான் தெரிந்து கொள்ள வேண்டியது இருக்கும்.கல்வி அனைத்தும் கணினி மூலம் சொல்லி கொடுக்கப்படுவதால் அவனுக்கு எழுதுவதே மறந்து விடும் நிலைமை உள்ளது. இப்படியாக மனிதனின் வேலை அனைத்தும் சுலபமாக மாறியதால் அவனுடைய சிந்தனைகள் மாறி , அவன் தேவை இல்லாத பல செயல்களைச் செய்து கொண்டு இருக்கின்றான். மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்தையும் கணினிக்குள்ளே பதிவு செய்துவைதுள்ளதால் அவனால் குடும்பம் இல்லாமல் வாழமுடியும் கணினி இல்லாமல் வாழ முடியாது என்ற சூழ்நிலை ஏற்ப்படும்.
உங்களால் ஆணும் இல்லாமல் , பெண்ணும் இல்லாமல் ஒரு குழந்தையை உருவாக்க முடிகிறது , ஆனால் பந்த பாசங்களை உருவாக்க முடிகிறதா?. ஒரே உயிர் போல் மற்றொரு உயிரை உருவாக்க முடிகிறது.ஆனால், நீங்கள் கண்டுபிடித்த அணு ஆயுதங்களால் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அழிகிறதே அதை உங்களால் காப்பாற்ற முடிகிறதா?.நீங்கள் வாழ்வதற்கு உண்டான பொருள்களைக் கண்டு பிடிப்பதை விட அழிவிற்கு உண்டான பொருள்களையே அதிகமாக உருவாக்குகிறிர்கள் உருவாக்குதிர்கள். ஆனால் அதைப் பயன் படுத்தும் நாடுகள் தற்பாதுகாப்புக்கு என்று சொல்லிக்கொண்டு தங்களிடம் இருக்கும் பத்துப்பேரைப் பாதுகாப்பதாகக் கூறி பல லட்சம் உயிர்களை அழிக்கிறார்கள்.
அறிவியல் அறிஞர்களே ,அறிவியல் மேதைகளே , அறிவியல் விஞ்ஞானிகளே, நீங்கள் கண்டு பிடித்த பல பயனுள்ள கண்டு பிடிப்புகளால்தான் நாங்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாகச் செல்ல முடிகிறது, ஒருவர் மற்றொருவரை எளிதாக தொடர்பு கொள்ள முடிகிறது.நீங்கள் கண்டு பிடித்த பல கண்டுபிடிப்புகள் எங்களுக்குப் பயனுள்ளதாகவும் , பல உண்மைகளைத் தெளிவுபடுத்துவதாகவும் இருந்தது, இருந்தாலும் கண்டுபிடிப்புகள் ஆபத்தானவையாகவே எங்களுக்குத் தெரிகிறது. நீங்கள் தானே சொன்னீர்கள் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று. அந்த இயற்கையான செயலே நின்று விட்டது , இன்னும் குரங்கிலிருந்து மனிதன் தோன்றிக்கொண்டே இருந்தால் , மனிதன் இவ்வுலகில் வாழ முடியுமா?.நீங்கள் செய்வதெல்லாம் செயற்கை தானே , அந்த இயற்க்கை செயலே நின்று விட்டது போல நீங்களும் சிறிது காலம் நிறுத்தி , இயற்கையான செயல்களுக்கு மதிப்பு கொடுங்கள் , அறிவியலைப் பயன்படுத்தி இயற்கையை அழிப்பதை நிறுத்தி கொஞ்சம் வெளிஉலகத்தையும் பாருங்கள்.
முற்காலத்தில் மனிதன் காடுகளில் வனவிலங்குகளோடு வாழ்ந்தான் என்று படித்திருக்கின்றோம், உங்களின் முயற்சியால் இப்பொழுதுதான் மனிதர்களோடு வாழ்கிறோம். உங்களின் முயற்சியை இதோடு நிறுத்திகொள்ளுங்கள் எங்களை எந்திரங்களோடு வாழ விட்டுவிடாதீர்கள்.
Labels:
dominic,
dominic raja,
rajagipalaperi.,
robo,
science,
tamilnadu,
thinnai,
tribes,
அறிவியல்
Monday, September 8, 2008
பொலிவிழந்து வரும் கிராமங்கள்
கிராமங்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது பச்சைப் பசேலென்று தோன்றும் வயல் வெளிகள், விவசாயிகளின் வாகனங்கள், ஆடுகள் , கோழிகள் , மாடுகள் , கருவேல மரங்கள், பசுமையான மரங்கள், கோவில் திருவிழாக்களில் நடை பெறும் பாரம்பரிய நடனங்கள் மற்றும் வில்லுப்பாட்டு ,மிதி வண்டியில் வைத்துச் செய்யும் சிறு வியாபாரங்கள் , வானொலி சத்தங்கள், மண் தெருக்கள் , சிறு குழந்தைகளின் விளையாட்டுச் சத்தங்கள் , தெரு தண்ணீர் குழாய்ச் சண்டைகள், குழுவாகக் கைத்தொழில் செய்யும் பெண்கள் , பெட்டிக் கடைகள் , மாசு இல்லாத இரம்மியமான காற்று, நீரோடைகளில் தண்ணீர் எடுக்கும் பெண்கள் , அன்பான உபசரிப்பு, வைக்கோல் போர்கள், மாலை நேரத்தில் விவசாய வேலைகளை முடித்து விட்டு வந்து உறவினர்களோடும் , குழந்தைகளோடும் பேசி மகிழ்ந்து தங்கள் களைப்பைப் போக்கும் ஆண்கள்,ஊரின் ஒரு மூலையில் குழுவாகக் கூடி நிற்கும் வாலிபர்கள், குடிசைகள் , ஒரு சில பெரிய வீடுகள்,கூட்டுக் குடும்பங்கள் , எப்போதும் நடமாட்டம் மிகுந்த வீதிகள், பிரச்சனைகளைத் தங்களுக்குளே பேசித்தீர்த்துக் கொள்ளுதல். இப்படியெல்லாம் இருந்த கிராமங்கள் இப்பொழுது தங்கள் பொழிவை மெல்ல மெல்ல இழந்து வருகின்றன.
கிராமங்களில் சிறுவர்கள் பள்ளிக்கூடம் சென்று வந்ததும் , மாலைவேலையில் மற்றும் விடுமுறை நாட்களிலும் காலமுறை விளையாட்டுகளை விளையாடுவார்கள் ,
எடுத்துக்காட்டாக கண்ணாம்மூச்சி,கம்பு குச்சி, நொண்டி அடித்தல் , கயிறு தாண்டுதல் ,பம்பரம் ,கோலிகுண்டு இது போன்ற விளையாட்டுகள் விளையாடப்பட்டன. ஆனால் இப்பொழுது பள்ளி சென்று திரும்பும் சிறார்கள் , தொலைக்காட்சி பெட்டியின் முன்னால் உட்கார்ந்து கொண்டு பொழுதைக் கழிக்கின்றார்கள். கிரிக்கெட் விளையாட்டை மட்டும் விளையாடுகிறார்கள். பழைய விளையாட்டுகளை மறந்து விட்டனர். பெற்றோர்களும் சிறார்களை வெளியே விட மறுக்கின்றனர். குழுவாகக் கைத்தொழில் செய்யும் பெண்களைப் பார்க்க முடியவில்லை, எல்லோரும் படிக்க ஆரம்பித்து விட்டதால் வீட்டில் ஆடு , மாடு , கோழிகள் வளர்ப்பதில்லை . அதை ஓர் இழி செயலாகப் பார்க்கிறார்கள். விவசாயத்தில் வருமானம் இல்லாத காரணத்தினால் , விவசாயம் குறைந்து விட்டது. விவசாய நிலங்கள் வீடுகளாக , வணிக வளாகங்களாக மாற்றப்படுகின்றன.
தெருக்கள் அனைத்தும் சிமெண்ட் தெருக்களாக மாற்றபட்டுவிட்டன , கோவில் திருவிழாக்களில் பழைய பாரம்பரிய நடனங்கள் மற்றும் வில்லுப்பாட்டு இல்லை ஆபாச நடனங்கள் அரங்கேறி வருகின்றன , வரும் உறவினர்களுக்கு அன்பான உபசரிப்பு இல்லை, வானொலி மாறி தொலைகாட்சிச் சத்தங்கள் , கூட்டுக் குடும்பங்கள் குறைந்து தனித் தனியாக வாழ ஆரம்பித்து விட்டனர். மிதிவண்டிகள் குறைந்து மோட்டார் வாகனங்கள் பெருகி உள்ளன . தங்களுடைய சொந்தங்களுக்குளே விட்டுக் கொடுக்கும் அல்லது உதவும் மனப்பான்மை இல்லாமை , எதிர்ப்பார்புகள் பார்த்து அன்பு செலுத்துகிற எண்ணம் ,படித்தவர்கள் எல்லாம் தங்கள் குடும்பங்களை விட்டு நகரங்களுக்குச் சென்று வேலை செய்தல் , வெறிச்சோடிய வீதிகள் இப்படியே கிராமங்கள் நகரத்தனமாக மாறி வருகின்றன.
கிராமங்களில் மாற்றப் பட செயல்கள் பல இருக்கின்றன , கிராமங்கள் வளர்வது நல்லதுதான் , என்றாலும் இங்கு மனதுக்கு நிறைவான காரியங்களும் , மனதுக்கு அமைதியான செயல்களும் பல இருந்தன . எதாவது ஒரு வீட்டில் நல்ல நிகழ்ச்சி என்றால் உறவினர்கள் எல்லாம் அந்த வீட்டில் ஒன்று கூடி தாங்களே சமைத்து விருந்து செய்வார்கள். ஆனால் நகரங்களில் நட்சத்திர உணவகங்களைத் தேட வேண்டியது இருக்கும். இங்கு உறவினர்களோடும் , நண்பர்களோடும் பேசி மகிழ்வதால் கேளிக்கை விடுதிகள் தேவை இல்லை. ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்பதால் மன அழுத்தம் இல்லை எனவே தியான மையங்கள் தேவைப்படுவதில்லை. கடுமையாக உடல் உழைப்பு இருப்பதால் உடற் பயிற்சிக்கூடம் தேவை இல்லை. இப்படியாக பல நல்ல நல்ல பழக்க வழக்கங்கள் இயற்கையாகவே அமைந்து இருந்த கிராமத்தில் மக்களின் ஒரு சில பிடிவாத குணங்களால் கிராமங்கள் தங்கள் தொண்மையை இழக்கின்றன.
நகரங்களில் நமக்கு ஒரு சிறு பொருளைக்கூட பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும் அதுபோலதான் அன்பும் . இது போல கிராமங்கள் மாறிவருகின்றன .
இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் வாழ்கிறது' என்றார் அண்ணல் காந்தி. அந்தக் கிராமங்கள் தான் இந்த நூற்றாண்டுக்குள் அழிந்து விடும் அபாயத்தில் உள்ளன.
இனி வரும் காலங்களில் கிராமச் சூழ்நிலைகள் எல்லாம் திரைப்படங்களில் மட்டும் காணும் நிலைமைக்குத் தள்ளப்பட உள்ளன.
கிராமங்கள் மற்றும் அதன் சூழ்நிலைகள் அழிவது அல்லது மாறுவது ஒவ்வொரு மனிதனின் ஆன்மா அழிவிற்குச் சமம்.அதை நாம் எவ்வாறு ஈடு செய்யப்போகிறோம்?.
Labels:
dominic,
tamilnadu,
tamilnadu villages,
thinnai,
tirunellveli,
village,
villages,
கிராமங்கள்
யாரிடம் கடவுள் ?
கடவுள் என்று ஒருவர் இருக்கின்றாரா? அல்லது இல்லையா? என்ற வாதமும் அப்படி ஒருவர் இருந்தால் யார் உண்மையான கடவுள் என்ற வாதமும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறது. நான் அந்த வாதத்திற்குச் செல்ல விரும்பவில்லை. கடவுள் என்ற ஒருவர் இருந்தால் அவர் யாரிடம் இருப்பார்? அல்லது அவர் எப்படிப் பட்ட மனிதர்களின் மனதில் இருப்பார்? என்று நம் கண் முன்னால் நடக்கும் நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்ததில் கடவுள் யாரிடம் இருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
நான் தொடர் வண்டியில் முன்பதிவு செய்யாத பெட்டியில் பயணம் செய்யும் பொழுது நான்கு பேர் இருக்கும் இடத்தில் இருவர் இருந்து கொண்டனர், இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள். சிறுது நேரத்தில் அவர்கள் இருவரும் யாருடைய கடவுள் உண்மையான கடவுள் என்ற வாதத்தைத் தொடங்கினார்கள், இருவரும் தங்களுடைய புனித நூல்களை எடுத்துக் கொண்டு அதனுள் இருக்கும் வாசகங்களை எடுத்துக்கொண்டு வாதிட்டனர், ஒவொருவரும் தங்களுடைய கடவுள் தான் உண்மையான கடவுள் என்று ஒருவர் மற்றொருவரைச் சம்மதிக்க வைக்க மிகவும் பாடு பட்டனர். பயணம் செய்த நாங்கள் எல்லோரும் இவர்கள் , தங்கள் கடவுளர் மீது எவ்வுளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தோம், சிறிது நேரத்தில் ஒருவர் உட்கார இடம் இல்லாத காரணத்தினால் அவர்கள் அருகில் சென்று அமர முயன்றார் அவர்களோ அவருக்கு இடம் தர மறுத்து விட்டனர். பக்கத்தில் இருத்த முதியவர் அவருடைய இருக்கையில் சிறிது இடத்தை அவருக்கு அமரக் கொடுத்தார், அவர்கள் இருவரும் அவர்களுடைய கடவுளைப் பற்றிப் பேசினார்களே தவிர , அவர்கள் மதம் போதிக்கும் ஒரு சிறிய நெறிமுறையக் கூடப் பின்பற்ற அவர்களுக்கு முடியவில்லை ,என்ன தான் அவர்கள் ,அவர்களுடைய கடவுளைப் பற்றிப் பெருமையாக பேசினாலும் , இந்த முதியவர்க்கு இருந்த நல்ல எண்ணம் அவர்களுக்கு இல்லை என்று பார்க்கும் போது இவர்கள் போலிகள் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.
இப்படியாக ஒவ்வொரு சிறிய செயல்களைப் பார்க்கும் பொழுது இவர்கள் எதற்க்காக கடவுளை வழிபடுகிறார்கள், என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆலயத்துக்குச் செல்கிறார்கள் நன்றாக , மிக பக்தியாக வழிபடுகிறார்கள் ஆனால் வெளியே வந்தால் , தம்மால் முடிந்த உதவிகளைத் தங்களுடைய சொந்தங்களுக்கு செய்ய மறுக்கின்றார்கள்.மற்ற சாதியினரைக் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கிறார்கள்.தங்களுடைய வழிபாட்டுத் தலங்களுக்குப் பெண்கள் செல்ல அனுமதி மறுக்கிறார்கள் மதத்தைப் போதிக்கின்றார்கள் அவர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்திக்கொண்டு உயர் பதவி அடைவதற்கு மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். அவர்களிடம் சாதிய உணர்வைத் தூண்டிவிடுகிறார்கள். ஒரு சாதரண மனிதர்களுக்கு இருக்கும் நல்ல பண்புகள் கூட இவர்களிடம் இல்லை. ஆலயங்களுக்குள்ளே பதவிகளுக்காக அடித்துக் கொள்கிறார்கள்.
பொதுவாக எல்லா மதத்தின் அடிப்படையான கோட்பாடுகளைப் பார்த்தல் அன்பு,அமைதி , அடக்கம் போன்றவை தான் போதிக்கப்படுகிறது. ஆனால் அவற்றைப் போதிக்கின்றவர்களும் , அவற்றைப் பின்பற்றுபவர்களும் அவர்கள் மதம் போதிக்கின்ற நெறிமுறைகளைப் பின்பற்றுகின்றார்களா என்ற பார்த்தால் அது ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது. இப்பொழுது நம் கண் முன்னால் நடக்கும் அனைத்துத் தீவிரவாத செயல்களும் , வன்முறைச் செயல்களும் மதத்தை முன் வைத்த நடக்கின்றன. இப்படி நடப்பதன் மூலம் அவர்களே அவர்கள் மதத்தின் மீது உள்ள நல்ல எண்ணங்களைக் கெடுத்து விடுகிறார்கள்.
இப்படியான போலி மதவாதிகளும், மதத்தின் நல்ல கொள்கைகளை பின்பற்றாதவர்களும் இருக்கின்ற வரைக்கும் கடவுள் யாரிடம் இருக்க முடியும்?. தங்கள் மதங்களின் மீது பற்று இருக்க வேண்டுமே தவிர , வெறி இருந்தால் அது பிரச்சினைகளைத் தான் தூண்டி விடும்.
Labels:
domi,
dominic,
dominic raja,
kadavul,
murugan,
rajagipalaperi.,
religion,
yaar
Friday, September 5, 2008
மதத்தால் மதம் பிடித்து அலையாதீர்.
உலகில் வேறு எந்த நாட்டிற்கும் கிடைக்காத வரப்பிரசாதம் நமது நாட்டிற்க்குக்கிடைத்துள்ளது. எல்லா மதத்தினரும் ஒன்றாகப்பழகும் வாய்ப்பு நமக்குக்கிடைத்துள்ளது.
பொதுவாக மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துவ மதம் அதிகமாக உள்ளது, அரபு நாடுகளில் இஸ்லாம் மதம் அதிகமாக உள்ளது. அவர்களுக்கு மற்ற மதத்தினருடன் அதிக மாக பழக வாய்ப்பு இல்லை. ஆனால் நம் நாட்டில், தோன்றின சைவம், வைணவம் , சீக்கியம், புத்தம் போன்ற மதத்தினருடனும் வெளிநாட்டில் இருந்து வந்து பரவின மதங்களான கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் போன்ற மதத்தினருடனும் பழகும் வாய்ப்பு கிடைத்திருப்பது நமக்குக் கிடைத்த வரமாகும்.
ஆனால் இன்றைய மதத்தலைவர்கள் மதம் என்னும் போர்வையில் தங்களை மூடிக்கொண்டு தங்களின் சுயலாபத்திற்க்காக மக்களைப்பயன் படுத்திக்கொள்கிறார்கள். பொதுவாக மதத்தலைவர்களாக தங்களைக்கூறுபவர்களின் செயல்பாடுகள் தங்கள் மதத்திற்கு எடுத்துக்காட்டாக இல்லை. கிறிஸ்தவர்கள் அதிக மாக உள்ள நாடுகளை கிறிஸ்தவ நாடுகள் என்றும் இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள நாடுகள் இஸ்லாமிய நாடுகள் என்றும் அறிவித்து உள்ளன. ஆனால் அவர்கள் நாட்டில் நடக்கும் வன்முறைகள் ,கலாச்சார சீரழிவுகள் மற்றும் செயல்பாடுகள் அவர்களின் மதத்தின் கோட்பாடுகளை பிரதிபலிக்கும் விதமாக இல்லை.
நம் நாட்டை மதச்சார்பற்ற நாடு என்று சொல்கிறோம். ஒர் ஆய்வின் அடிப்படையில் பார்த்தால் வருடத்திற்கு 10,000 பேர் மதக்கலவரங்களால் கொல்லப்படுகிறார்கள். மதத்தலைவர்கள் மக்களிடம் மத உணர்வைத்தூண்டிவிட்டு அதன் மூலம் அவர்கள் அரசியல் லாபம் அடையப்பார்க்கிறார்கள். எந்த மதக்கலவரத்திலும் எந்த மதத்தலைவரும் பலியானதாக தகவல்கள் இல்லை. அப்பாவி பொது மக்கள் தான் பலியாகிறார்கள். மதக்கலவரங்களால் இறந்து போகும் மக்களின் இரத்தத்தில் இவர்கள் தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். தங்களின் ஆதாயத்திற்காக எபேர்ப்பட்ட பொய்களையும் சொல்லி மத கலவரங்களைத்தூண்டி தங்களின் ஆசையை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.
தங்களைக்கிறிஸ்தவ நாடுகள் என்று அறிவித்துள்ள நாடுகள், பிற நாட்டில் உள்ள எண்ணெய் வளத்திற்காக அல்லது தங்களின் மேலாதிக்கத்திற்காக பிற நாடுகள் மீது போர் தொடுத்து பல லட்சக்கணக்கான உயிர்களைக்கொல்கிறார்கள். அவர்கள் நாட்டில் உள்ள ஆலயங்களில் "உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக" என்ற வார்த்தைகள் ஒலிக்கத்தான் செய்கின்றன.
தங்களை இஸ்லாமிய நாடுகள் என்று அறிவித்துள்ள நாடுகள் புனிதப்போர் என்ற என்று சொல்லிக்கொண்டு தங்கள் மதத்திற்குள்ளேயே இன ரீதியான தாக்குதலை நடத்தி பல்லாயிரகணக்கான உயிர்களைப்பழிவாங்குகிறார்கள் , "இஸ்லாம் இனிய மார்க்கம்" என்று தங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கான சுதந்திரத்தைக்கொடுக்க மறுக்கிறார்கள்.
ஒரு "சிறு உயிருக்குக் கூட துன்பம் விளைவிக்கக் கூடாது " என்று கூறிய புத்தரைப் பின் பற்றித்தங்களைத் துறவிகள் என்று கூறுபவர்கள் , பிற இனத்தின் மீதும் , அவர்களின் புனிதத் தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தி பல உயிர்களை எடுக்கிறார்கள்.
தங்களை இந்து மத சாதுக்கள் என்று கூறுபவர்கள் கையில் வேலோடும் , சூலாயுதங்க டும் இருக்கிறார்கள், தங்களின் பல பெரிய பழைய கோவில்கள் பராமரிப்பு அற்ற நிலையில் இருக்கும் போது , புதிய கோவில் கட்டுவதற்காக மற்ற மதத்தவர்களின் புனித தலங்களை இடிக்கிறார்கள். தங்கள் மதத்திற்குள்ளே இனப் பிரிவை ஏற்படுத்தி இன ரீதியான பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறார்கள்.
எல்லா மதங்களும் இந்த இரத்த வெறியைத்தான் விரும்புகிறதா !
ஒரு சிறிய செயல்களையும் , மத உணர்வைப் பயன்படுத்தி மிகப் பெரியதாக மாற்றி பல உயிர்களைப் பலிவாங்குவதைத்தான் எல்லா மத நம்பிக்கை உடையவர்களும் விரும்புகிறார்களா , எப்படி இந்தக் கொலைவெறியை மனதில் வைத்து கொண்டு இவர்கள் கடவுளை வழிபடுகிறார்கள்.
எல்லா மதமும் அன்பைப் போதிக்கிறது என்று சொல்லிக்கொண்டு அதைப் பின்பற்றுபவர்கள் ஏன் பழிக்குப் பலியை விரும்புகிறார்கள்.
மதத்தால் மதம் பிடித்து அலையாமல் நமது சுய சிந்தனையுடன் , மற்றவர்களையும் நம்மை போல் நினைத்து மகிழ்வுடன் வாழ்வோம்.
Labels:
dominic,
raja,
rajagopalaperi,
religion,
thinnai,
tirunellveli
Subscribe to:
Posts (Atom)