Tuesday, September 23, 2008

கல்வியும் அறிவும்.




அறிவு என்பது என்ன என்று பார்த்தால் ஒரு செயலைப் புரிந்து கொண்டு அதைத்திறம்பட , யாருக்கும் பிரச்சினை இல்லாமல் சரியான நேர்முறையில் செய்தல் ஆகும். அறிவு என்பது பிறவியிலே எல்லோருக்கும் கொடுக்கப்பட்டதொன்றாகும். அறிவைப் பயன்படுத்தி சரியான அல்லது நேர்மையான முறையில் செயல்பட்டால் நமக்கும் நம்மைச்சுற்றி உள்ளவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். நாம் சிந்திக்கின்றபொழுது அறிவையே பயன் படுத்துகின்றோம். ஒவ்வொரு உயிர்களுக்கும் தேவைக்கு ஏற்ப அறிவு கொடுக்கப் பட்டிருக்கிறது. அதிகப்பட்சமாக மனிதர்களுக்கு ஆறு அறிவு கொடுக்கப்பட்டுள்ளது. நாம் அதைப்பயன் படுத்துகிறோமா , பயன்படுத்தினால் எவ்வழியில் பயன்படுத்துகிறோம்.

கல்விக்கூடம் சென்று கற்றால்தான் அறிவு வருமா என்று கேட்டால் இல்லை. ஏனென்றால் முற்காலத்தில் நம்மை ஆண்டவர்கள் , நம்மை வழிநடத்தியவர்கள் எல்லோரும் கல்வி அதிகம் இல்லாதவர்கள்தான். நம் முன்னோர்கள் படிக்காமலே ஞானிகளாக இருந்தார்கள். எடுத்துக்காட்டாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கரிகால சோழன் கட்டிய கல்லணை இன்றும் எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் பல மாவட்டங்களுக்கு நீர்ப்பாசன வசதியை அளிக்கிறது. அவர்கள் கண்டு பிடித்துக்கூறிய சொன்ன விண்வெளியில் ஒன்பது கோள்கள் உள்ளன என்பதுதான் இன்றைய அறிவியலும் சொல்லுகிறது. அவர்கள் கட்டிய கோட்டைகள், கோவில்கள் ,சுரங்கப்பாதைகள் , பாலங்கள்,ஓவியங்கள் , சிற்பங்கள் இன்றளவும் மிகக்கம்பிரமாக உள்ளன . இப்படியாக பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. என்பது நாம் எவ்வாறு நம்முடைய கவனத்தைச் சிந்தனையைச் செதுக்குகின்றோமோ அதன் படி வளர்கிறது.

கல்வி என்பது நமது அறிவைப்பலப்படுத்த ,சீர்ப்படுத்த அல்லது ஊக்கப்படுத்த உதவுகிறது. ஆனால் இன்று கல்வி கற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள். பழங்காலத்தில் கல்வி அதிகம் கற்காதவர்கள் எழுதிய இலக்கிய இலக்கனாங்களை ஆராய்ந்து இன்று முனைவர் பட்டம் வாங்குகிறார்கள். பழங்காலத்தில் கல்வி அறிவு இல்லாதவர்கள் தெரியாமல் தவறுகள் செய்தார்கள். ஆனால் இன்று கல்வி கற்றவர்கள் தெரிந்தே அனைத்துத்தவறுகளையும் செய்கிறார்கள்.

பழங்காலத்தில் ஆடை இல்லாத காரணத்தினால் ஆடை இல்லாமல் அரை குறையாகத் திரிந்தார்கள் ஆனால் இன்று கற்றவர்கள் நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு அரை குறை ஆடையுடன் செல்கிறார்கள், கலாச்சாரச்சீரழிவு செய்கிறார்கள். குற்றம் செய்கின்றவர்களைக் கணக்கு பார்த்தல் கல்வி கற்றவர்களே அதிகம். தாங்கள் கற்றதினால் வந்த அறிவைத் தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள். கையூட்டு வாங்குபவர்கள் அனைவரும் மிக அதிகமாக கற்றவர்கள் தான். நம் முன்னோர்கள் கட்டிய அனைத்தும் இன்றளவும் நிலைத்து நிற்கும்போது , இன்று கற்ற பொறியாளர்களைக்கொண்டு கட்டும்பொழுது சிறிது காலங்களில் பழுது அடைந்து விடுகிறது.

கல்வி கற்றவர்கள் தங்களின் சுய லாபத்திற்காக அதிகம் கல்வி கற்காதவர்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எந்த ஒரு முன்னேற்றம் அல்லது வளர்ச்சிப்பணிகளுக்குத் தடை செய்கிறார்கள். எடுத்துக்காட்டாக சாலை அகலப்படுத்துதல் போன்ற பணிகள் நடக்கும்பொழுது , அதற்குத் தேவையான நிலம் தேவைப்படும் பொழுது நிலத்துக்கு உரியவர்கள் அதைக்கொடுக்க மறுக்கிறார்கள் நீதிமன்றம் செல்கிறார்கள். இதனால் வளர்ச்சிப்பணிகளின் வேகம் தடைப்படுகிறது. அந்த வளர்ச்சிப்பணி அவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்தாலும் அதைப்பயன்படுத்தி ஏதாவது லாபம் கிடைக்குமா என்று பார்க்கிறார்கள்.

கல்வி கற்று அதிகமாகத் தங்களுடைய அறிவை நேர்மையான பல நல்ல வழிகளுக்குப்பயன் படுத்துகிறவர்கள் இருக்கும் பொழுது , இது போன்ற நல்ல கல்வியைக் கற்றுக் கொண்டு தவறான செயல்களில் ஈடுபடுகிறவர்களால் , கல்வியின் மீது உள்ள நல்ல எண்ணங்கள் தடைபடுகிறது. கற்காத காலத்தில் உள்ள மனிதர்கள் பயன் படுத்திய அறிவை விட இவர்கள் அதிகம் அறிவு பெற்றிருந்தாலும் , இவர்களுடைய நேர்மையில்லாத உழைப்பினால் அது அதிகப்பயனில்லாமல் போகிறது.

கற்ற கல்வியுடன் அறிவைப் பயன்படுத்தினால் அது மக்களுக்குப் பயனுள்ளதாகவும் , மக்களின் வளர்ச்சிக்கும் அதிக உதவியாகவும் இருக்கும்.

No comments:

Post a Comment