Saturday, September 20, 2008

உறவுகளின் கதவுகள் திறக்கட்டும்.




இன்றைய சூழ்நிலையில் நாம் எந்த அளவிற்கு உறவுக்கு அல்லது உறவினர்களுக்கு மதிப்புக் கொடுக்கிறோம் என்று பார்த்தால் மிகவும் குறைவாகவே உள்ளது. அப்படி நாம் மதிப்பு கொடுக்கின்ற உறவுகளைப் பார்த்தால் எதாவது கைம்மாறு கருதியே கொடுக்கிறோம். நாம் பணத்திற்குக் கொடுக்கிற மதிப்பு நம்முடைய இரத்த உறவுகளுக்குக் கொடுப்பதில்லை. பணம் தேடி பல இடங்களுக்குச் செல்கிறோம் ஆனால் உறவைத் தேடி பக்கத்து வீட்டுக்குச் செல்ல யோசிக்கிறோம். எதனால் நாம் இந்த கொடுர சூழ்நிலைக்கு ஆளானோம்? அல்லது தள்ளப் பட்டோம்?. தினசரி செய்திகளில் பணத்தின் மதிப்பைப் பார்ப்பது போல உறவுகளின் நிலைமையும் ஏற்ற இறக்கங்களில் செல்கிறது.

முதலில் உறவுகள் மற்றும் உறவினர்கள் எதற்காக என்று பார்ப்போம். ஒருவர் மற்றொருவருக்கு ஆறுதலாக இருக்கத்தான். நம்முடைய இன்ப மற்றும் துன்ப நிகழ்வுகளில் அவர்களின் பங்கேற்பு அதிகமாக இருக்கும் மற்றும் நம்முடைய இன்ப , துன்பங்களை பரிமாறிக்கொள்ளலாம். உறவினர்கள் ஒர் இடத்தில் வசிக்கும்பொழுது , உறவினர்கள் குழுமி யாருக்காவது சிறு சிறு பிரச்சினைகள் அல்லது அவர்களுக்குத் தேவைகள் ஏற்படும் பொழுது இவர்களின் உறவு உதவியாக இருக்கும்.

நமக்கு என்ன என்ன உறவுகள் உள்ளன ?, அப்பா வழி உறவுகள் அம்மா வழி உறவுகள் , மற்றும் நம் உடன் பிறந்த அண்ணன் ,அக்கா ,தம்பி , தங்கை . நாம் இவர்களுடன் எந்த அளவில் உறவுடன் உள்ளோம் என்பதைப் பார்க்க வேண்டும்.
அதற்கு நம் பெற்றோர்கள் எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்.அவர்கள் அவர்களுடைய உடன் பிறந்தவர்களுடன் எந்த அளவிற்கு உறவு வைத்திருகின்றாகளோ அதே போலத் தான் இருப்பார்கள் அவர்களுடைய பிள்ளைகளும். பெற்றோர்கள் அவர்கள் உடன் பிறந்தவர்களுடன் நல்ல உறவு வைத்திருந்தார்கள் என்றால் அவர்களுடைய குழந்தைகளும் அவர்களுடைய உடன் பிறந்தவர்களிடம் நல்ல உறவு வைத்திருப்பர்.

இக்காலச்சூழ்நிலையில் ஒவ்வொருவரும் வேலை மற்றும் தொழில் ரீதியாகவும் வெவ்வாறு இடத்தில் பிரிந்து இருக்க வேண்டிய கட்டாய நிலைமை உள்ளது . கணவன் ஒர் இடத்தில் மனைவி ஒர் இடத்தில் குழந்தைகள் ஒர் இடத்தில் இப்படியாக வாழ வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ளது. எல்லாம் வாழ்க்கையில் முன்னேற அல்லது நல்ல நிலைமையை அடையவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால். இவர்கள் தங்கள் குடும்ப்பத்தாரிடமும் , உறவினர்களிடம் எந்த அளவிற்கு உறவு வைத்திருப்பார்கள் என்றால் சற்றுக் குறைவாகத்தான் இருக்கும்.

இப்படிப்பட்ட குறைகளை நிறைவு செய்யத்தான் திருவிழாக்கள் , பண்டிகைகள் , சுப நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஏற்படுத்தி உறவினர்களை ஒன்று சேர்த்து மகிழ்வுடன் கொண்டாடினார்கள். இன்று நாம் எந்த அளவிற்கு நம்முடைய நிகழ்ச்சிகளுக்கு உறவினர்களை அழைக்கின்றோம்?. உறவு எந்த நிலைமையில் உள்ளது என்று பார்த்தால் நம்வீட்டில் உள்ள சுப நிகழ்ச்சியின் நன்கொடை ஏடுகளைப் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டிஉள்ளது.

ஏன் உறவுகளைப் பார்த்து கதவுகளை அடைக்கின்றோம்?. எதனால் நாம் சொந்தங்களை பார்த்து மனது வெம்புகிறோம்?. அவர்கள் வந்து உன்னிடம் எதாவது கேட்டு விடுவார்கள் என்றா?.

ஏன் உறவினர்கள்?, எதற்கு உறவுகள்?அவர்கள் எங்களை ஏமாற்றுகிறார்கள் ,
அவர்கள் எங்கள் சொத்தை அபகரிப்பதிலேயே இருக்கிறார்கள். எனவே உறவுகள் தேவை இல்லை. உறவுகளால் பிரச்சினைதான் என்று சொல்லுகிறார்கள்.

நாம் பணத்திற்கும் , சொத்திற்கும் கொடுக்கின்ற மதிப்பை அப்படியே கொஞ்சம் உறவினர்களிடம் கொடுத்துப் பார்த்தால் எந்தப் பிரச்சினைக்கும் வழி இல்லை . மனிதனின் சராசரி ஆயுள் காலம் அறுபது ஆண்டுதான். நமக்குள் இருக்கும் தேவை இல்லாத தலைக்கனங்களை,வீண் பிடிவாதங்கள் மற்றும் வறட்டு கவுரவங்களை விட்டு விட்டு ஒருவருக்கு ஒருவர் நல்ல உறவுடன் வாழும் இந்த குறுகிய காலத்தில் வாழ்ந்து மகிழ்வோம். நம்முடைய எல்லா நல்ல நிகழ்வுகளுக்கும் உறவினர்களை அழைத்து அவர்களுடன் நல்ல உறவுடன் உறவாடி , மகிழ்வுடன் மற்றும் ஆரோக்கியமான உறவுடன் வாழ்வோம். உறவுக்காக நம் கதவுகள் திறந்து இருக்கட்டும் நமது வாழ்க்கை செழுமையாகட்டும். உறவுகளைப் பலப்படுத்துவோம்.

1 comment:

  1. Thambi, i agree fully with you that the children reflect their parents. I think you have learnt this from our parents.
    I am happy to note every bit of your personal experience enriches your thinking.

    ReplyDelete