Thursday, December 11, 2014

எங்கள் பாரதி



பயந்தவன் சொல்லுவான்
எல்லாம் கடவுள் செயல் - என்று
துணிந்தவன் சொல்லுவான்
பதில் சொல்லடி பராசக்தி...

கோழை  சொல்லுவான்
உடல் பலம் வேண்டுமென்று
புத்திசாலி சொல்லுவான்
மனதில் உறுதி வேண்டும்...

முட்டாள் சொல்லுவான்
மனிதத்தில் சாதி உண்டு - என்று
பகுத்தறிவுவாதி சொல்லுவான்
காக்கை குருவி எங்கள் சாதி....

அறியாதவன் சொல்லுவான்
அடிமைப்பெண் வேண்டும்  - என்று
அறிந்தவன் சொல்லுவான்
புதுமை படைக்கும் பெண் வேண்டும் .....


கோழை  சொல்லுவான்
நமக்கு ஏன் வம்பு - என்று
வீரன் சொல்லுவான்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்பது இல்லையே...
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்பது இல்லையே...

என்று சொல்லுவான் - அவன்தான்
எங்கள் பாரதி

Saturday, July 19, 2014

கல் மனம்


வீண் பழிகள் வீசப்படட்டும்
பொய் குற்றங்கள் சுமத்தபடட்டும்
தவறாக சித்தரித்து பேசட்டும்
இகழ்பவன் இகழட்டும்
மனதை கல்லாக்கி தாங்கிகொள்
எய்தவனுக்கு தெரியாது
இவையனைத்தும்  உன்னை
அழகிய சிற்பமாய் வடிவமைக்க
உன் மீது அடிக்கப்பட்ட உளிகள் - என்று

Monday, July 14, 2014

முதிர் கன்னி



இதுவரை 45 பேர்
இன்றுடன் 80 முறை - என்னை
உரசி சென்ற 50 வயதை கடந்த
முதிர் கன்னி - நான்

பங்குனி பணியிலும்
சித்திரை வெயிலிலும் - காய்ந்து
சிதைந்து இருக்கும் தேகத்தை
சீர் படுத்த ஒரு துணைக்காக
தவமிருக்கிறேன் நெடுநாளாய்

உள்ளூர் அரசியல்வாதிகளால் அவ்வப்போது தீண்டப்படும்
தீண்டத்தகாத பெண் - நான்

டெல்லி சந்தையில் விலை போகாத
அவலப்பெண் - நான்

நான் என்ன பாவம் செய்தேன்
தமிழ் பெண்ணாக பிறந்தது என் - தவறா

செங்கல்பட்டிலிருந்து கன்னியாகுமரி வரை
நீண்டு நெடுந்து வளைந்து நெளிந்து
தனியாக படுத்திருக்கின்றேன் -ஒரு வழிப்பாதையாக
என் முறை எப்போது வரும்மென்று!!

Note:
45 -Railway ministers
80 -Railway budget

Thursday, May 1, 2014

உழைப்பாளர் தினம்



அன்று உள் நாட்டு முதலாளிகளுக்கு
கொத்தடிமைகளாக
உடலை உருக்கி
உரிமைகளை இழந்து - உழைத்தோம்

காலம் மாறியது
கலாச்சாரம் மாறியது
உணவு பழக்கம் மாறியது
ஆடை மாறியது
ஆட்சி மாறியது  - ஆனால்
எங்கள் அடிமைத்தனம்
தொடர்கிறது - இன்றும்
பன்னாட்டு  முதலாளிகளுக்கு
கொத்தடிமைகளாக
உறவுகளை மறந்து
உணர்வுகளை மறந்து 
மனிதத்தை மறந்து -தினமும்
உழைத்துகொண்டு இருக்கின்றோம் - என்று 
மாறும் எங்கள் அடிமை வாழ்வு - எப்பொழுது
கிடைக்கும் உழைப்புக்கு இணையான தகுதி.

Saturday, March 29, 2014

என் மனைவி என் காதலி



பாசத்தை பொழியும்
பெற்றோராய் இருந்தாய்

தோல்வியில்  தோள்கொடுக்கும்
தோழனாய் வந்தாய்

சிறிய கூடாரத்தின்
சீமாட்டியாய் வலம் வந்தாய்

இல்லறம் என்னும் நல்லறம் அமைக்க - நம்
இருமனமும் சேர்த்தோம் ஓருடலாக

கெஞ்சுவதும் சிறு சண்டைகள் போடுவதும்
அழுவதும் அள்ளி அரவணைப்பதும்
கண்டிப்பதும் தெவிட்டாது அன்பு செய்வதும்
இன்பமாக இவ்வுலகை சுற்றிவந்தோம் - ஆனால்

இன்று  சிலகாலமாய்

உன்  கால்கொலுசு சப்தங்கள்
கேட்பதில்லை

உன் செல்ல கோபத்தை
பார்க்கவில்லை

தூக்க கலக்கத்தில் சூடான
தேநீர் கிடைக்கவில்லை

பிரிவு எனும் வலியில் தானே
நம் காதலின் இன்பம் தெரிகிறது

என் அருகில் எத்தனை பேர்  இருந்தாலும்
தனிமையை உணருகிறேன்
எத்தனை பொழுது போக்கு சாதனங்கள் இருந்தாலும்
ஒவ்வொரு இரவும் கொடுமையாக நகர்கிறது
என்னருகில் நீ இல்லாததால்

தற்காலிக பிரிவு என்றாலும்
மனது தவிக்கிறது - மீண்டும்
எப்போது சந்திப்போம் - மூவராக
நம் குழந்தையுடன் சேர்த்து

நீ கருவுற்று தாய் வீட்டுக்கு சென்றதால்
இதுவே என் கவிதைக்கு கருவானது

Monday, February 24, 2014

முதுமை


என் தாயும் தந்தையும்
குழந்தையாக மாறுகிறார்கள் - எனக்கு
குழந்தை பிறந்த பொழுது

Thursday, February 20, 2014

அண்ணா வா



உன் இளமை பருவம் சாகடிக்கப்பட்டது
சிறை கொட்டடியில்

உன் உணர்வு நசுக்கப்பட்டது
பொய்யான எழுத்தில் - ஆனால்

உன் திறமையை எல்லா பாதுகாப்புள்ள
சிறை மதில்களாலும் தடுக்க முடியவில்லை

உன் அறிவை எந்த காவல் படையினராலும்
முடக்க முடியவில்லை

நீ புற உலகத்தை பார்த்து
பல ஆண்டுகள் ஆகிறது

நீ சிறையில் இருந்து உலகத்தின்
வளர்ச்சிக்கு ஏற்ப உன்னை
தயார் செய்து கொண்டாய்

நீ கம்பிகளுக்கு இடையில் இருந்து - கற்றாய்
கணினி அறிவியலை

இரும்பு கோட்டையை உடைத்தாய்
உன் நன்னடத்தையால்

உன் அறிவோ, நடை பிணமாய்
இருக்கும் எங்களை விட மேலோங்கியுள்ளது - பேரறிவாய்

இதை முன்னனேற அறிந்து பெயர் சூட்டினரோ
உன் பெற்றோர் பேரறிவாளன் என்று

உனக்காக உண்மையில் உயிர் தியாகம்
செய்தவர்கள் உண்டு

உன்னை நினைத்து தினமும்
அழுதவர்கள் உண்டு

உன்னை வைத்து ஓட்டு அரசியல்
செய்தவர்களும் உண்டு

பொருத்திருந்தால் உலகத்தையும்
தன்வசபடுத்தலாம் என்ற வள்ளுவரின்
வார்த்தைக்கு ஏற்ப வாழ்ந்த
நம் தலைவர்கள் போல

கொள்ளை கூடாரத்தின் தலைநகரான
உருகுவே நாட்டின் அதிபர் ஜோஸ் முஜிகா
வறுமையில் வாடும் தன் மக்களுக்காக
17 வருடம் தனிமை சிறையில் கழித்தார்
வறுமையை போக்கினார்

கருப்பு சூரியன் கறுப்பின மக்களின்
வெண்மைக்காக வெள்ளை ஆதிக்கத்தை
எதிர்த்து போராடினார் நெல்சன் மண்டேலா
27 வருடம் தனிமை சிறையில் கழித்தார்
இருளை  ஒளியாக்கினர்

சர்வாதிகாரத்தில் இருந்து பர்மா
 மக்களை மீட்டெடுக்க ஆங்க் ஹான் சு கி
17 வருடம்  சிறையில் கழித்தார்
மக்கள் மன்றத்திற்கு வழிவகுத்தார்

மறுக்கபட்ட நீதிக்காக
மக்களின் வாழ்க்கைக்காக
உண்மைக்கு ஆதரவாக
செய்யாத பாவங்களுக்கு- செத்து மடியும் பாமரனுக்காக
நிதிக்காக விற்கப்படும் நீதிக்காக
மொத்தத்தில் சொன்னால்
மனித நேயத்திற்காக
23 வருடம் தனிமை சிறையை
கொடுமை வாழ்வை கழித்தாய் - எங்களுக்காக


உன் துன்பத்தில் மூலம் உணர்த்தினாய்
அறிவு பாடம்
உண்மை
மன உறுதி
நம்பிக்கை
எந்த கால நிலையிலும்
சோர்வடையாத மனம் என்ற குணத்தையும்

அண்ணா வா அரசியல்  அரியணை ஏற்க அல்ல !

எங்கள் மனதில் இருக்கும்
ஏற்ற தாழ்வு என்ற எண்ணத்தையும் !!

யார் பெரியவன் என்ற நிரந்தரம்
இல்லாத கவுரவுத்தையும் !!!

எங்கள் மனதில் ஆழமாக கரை படிந்திருக்கும்
சாதிய உணர்வையும்  !!!!

அடுத்தவர்களை பழிவாங்க
துடிக்கும் மனநிலையும் !!!!!

தமிழர்கள் நெஞ்சில்  பதிந்திருக்கும்
நச்சு என்ணத்தை போக்கும் மருந்தாக - வா
உலக நடை முறையை போதித்த வள்ளுவனாக - வா
வருங்காலத்தை எடுத்து உரைத்த பாரதியாக  - வா
தீண்டாமையை உடைத்தெறிந்த பெரியாராக  - வா
அன்பின் தீபமாக  - வா
அறிவின் இலக்கணமாக  - வா
தமிழர்களின்  மனதில் அரியணை ஏற  - வா
எங்கள் இதயம் கனிந்த அண்ணாவாக  - வா

உன்னை வரவேற்க காத்திருகின்றோம்
சிறைச்சாலை வாசலில்
விவேகானந்தர் இல்லாத இளைஞர்கள் போல- வா

உன் தம்பியாக உரிமையுடன்
அழைக்கின்றேன் - வா

வந்து எங்களின் உள்ளங்களில்
அறியாமை என்னும் இருள் அகற்றி
உண்மை என்னும் ஒளியேற்று !
தமிழர் என்னும்  உணர்வேற்று  !!

Thursday, February 13, 2014

காதல் ஒரு போதை



அமைதியாக பாயும்  நதி போல்
சென்ற  வாழ்க்கையில் - ஒரு
பெண்ணை சந்தித்ததும்
பள்ளம் நோக்கி போகும்
நதி போல சலனம்

பேதையை சீண்டியதும்
பெற்றோரை மறந்து
குடும்பத்தை மறந்து
லட்சியத்தை மறந்து
உழைப்பை மறந்து
கல்வியை மறந்து
தன்னிலை மறந்து 
நரகத்தையும் சொர்க்கமென  நினைக்கவைக்கும் போதை

போதையின் மயக்கத்தால்
பேதைக்காக உயிரையும் துறக்க தோன்றுகிறது
உயிரின் மதிப்பும் வாழ்க்கையின்
மறுபக்கமும் தெரியாமல்

மேதையாக உருவாக்க  பெற்றோர்கள் நினைத்தார்கள்
பேதையின் மீதுள்ள போதையால் மூடனானேன்

மது தரும் போதையை விட
மாது தரும் போதை கொடுமையானது

காதல் தரும் இன்பத்தை விட
காதல் தரும் வலி கொடுமையானது

காதல் கண்ணை மறைத்து - ஒரு
கற்பனையான உலகத்தில் மிதக்கவைக்கும் - போதை

Friday, January 31, 2014

பனை மரம்


இருந்தாலும் ஆயிரம் பொன்
செத்தாலும் ஆயிரம் பொன் - இது
யானைக்கும் மட்டும் அல்ல - எங்கள்
கருப்பு பனை மரத்துக்கும் சேர்த்துதான் !

Monday, January 27, 2014

பழமொழி

இயற்கையோடு வாழ்வு - நம்
இனத்தின் பழமொழி
இயந்திரத்தோடு வாழ்வு - நவீன
இணையத்தின் புதுமொழி!!

Monday, January 20, 2014

மனப்பான்மை

மனதில் விஷமும்
முகத்தில் பகட்டு சிரிப்பும் - இருந்தால்
தொழில் சார்ந்த மனப்பான்மை(professionalism)

மனதில் பகமையும்
முகத்தில் நமட்டு  சிரிப்பும் - இருந்தால்
சுயநலம் சார்ந்த மனப்பான்மை(Selfishness)

மனதில் உண்மையும்
முகத்தில் புன் சிரிப்பும் - இருந்தால்
அறியாமை சார்ந்த மனப்பான்மை(innocent)

Thursday, January 9, 2014

உறவு


உறவு என்பது எங்கே?

பணம் தரும் சுகத்திலா?
பதவி தரும் கவுரவத்திலா?
பயம் தரும்  பகட்டிலா?
அறிவு தரும் தலைகனத்திலா?
இல்லை இல்லை - நான்

காற்று  வீசும் திசையில்
சுய நலத்திற்க்காக  வளைந்து  கொடுக்கும்
நாணலாக இல்லை - நான்

இடத்திற்கு இடம்
தற்பாதுகாப்பிற்காக  நிறம்  மாறும்
பச்சையோந்தி இல்லை - நான்

எனக்கு மற்றவரை
ஏமாற்றும்  சூது தெரியாது
தற்பாதுகாத்து  கொள்ள  சுயம் தெரியாது
தவறான உள்நோக்கம்  தெரியாது

துன்ப படுவோரும்
துயர படுவோரும்
கஞ்சத்தனம் உள்ளோரும்
பயன் படுத்தும்
இலவச தொலைபேசி எண் - நான்

மற்றவர் ஒளி பெற
தன்னயே உருக்கி
உருகியவற்றை ஒன்று
சேர்த்தாலும் மீண்டும்
அடுத்தவர் வாழ்வில்
ஒளியேற்றும் மெழுகுவர்த்தி - நான்

மன நிறைவு தரும் சுகத்தில்
தன்னலமில்லா உழைப்பில்
உயிர் தரும் உணர்வில்
அன்பு மட்டும் தரும் மடமையில்
அனைத்தையும் இழந்து

தன்னையும் வெட்டுவோர்க்கு
இறுதி வரை மூச்சி காற்று கொடுக்கும்
மரம் போல  முட்டாள் தான்
உறவு என்னும் நான்!!