Tuesday, December 14, 2010

சாதி தீ மறையட்டும்.

புயல் என்பது இயற்கையின் கிளர்ச்சி
புரட்சி என்பது உணர்வின் கிளர்ச்சி

புரட்ச்சி என்பது எரிமலைப் போன்றது. அது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உறங்கி கொண்டிருகிறது. அது எப்பொழுதும் வெடிப்பதில்லை. திடீரென ஒருநாள் வெடித்துச் சிதறுகிறது. பல்வேறு நாடுகளில் புரட்சியால் , எரிமலை போல வெடித்துச் சிதறிய நாட்கள் வரலாற்றின் பக்கங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

புரட்சிக்கான காரணமும் , யாரிடமிருந்து யாருக்கு விடுதலை தேவை என்பதும் நாட்டிற்க்கு நாடு, இனத்திற்கு இனம் வேறு படுகிறது. தற்போது தமிழ் மக்களாகிய நாம் சாதி , மத , இன , மூடநம்பிக்கைகளையும் ஒழிக்க ஒரு புரட்சியில் ஈடு படவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்த புரட்சியில் ஈடுபடத்தவறினால் வந்தாரை வாழவைக்கும் தமிழினம் அழிந்து போகும் அபாயம் ஏற்ப்படும்.

கள்ளம் கபடமற்ற குழந்தையிடம் முதன்முதலில் சாதியை புகுத்துவது பள்ளிகூடமாகவே உள்ளது. நீ எந்த சாதியை சார்ந்தவன்? என்று கேட்டு அந்த குழந்தையின் மனதில் சாதித்தீயை பற்ற வைக்கிறார்கள். அறியாமை இருளை அகற்றவேண்டிய கல்விக் கூடங்களே சாதியை நன்கு அறிமுகப்படுத்துகிறது.

பாம்பு புற்றை விட
சாதி சங்கங்களைப் பார்க்கும் போது தான்
பயம் அதிகரிக்கின்றது

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் சங்கம் வைத்து தமிழை வளர்த்துள்ளார்கள். அனால் இருபதாம் நூற்றாண்டு தமிழர்களோ சங்கம் வைத்து சாதியை வளர்க்கிறார்கள். இன்றைய அரசியலோ சாதியை நம்பிதான் உள்ளது. தேர்தலின் வெற்றித் தோல்விகளும் சாதியை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன. சாதிகளை ஒழிக்கப் பாடுபடவேண்டிய அரசியல் வாதிகள் மக்களிடயே சாதி உணர்வை ஊக்குவித்து தங்களுடைய பதவி ஆசைகளை நிறைவேற்றி கொள்கின்றனர்.

கூண்டுக் கிளியின் விடுதலைக்காக
பூனை கிளர்ச்சி செய்ததது - அது
கிளியின் விடுதலைக்கு அல்ல
தன் பசியை நீக்க (கலைஞர்)

இது போல தான் இன்றைய சாதித் தலைவர்கள் . சாதிப் பெயர் கொண்ட சங்கங்கள் அமைப்பதும் , சாதி மக்களுக்காக நன்மை செய்வது போல் நடிப்பதும், அதனை அரசியல் கட்சியாக மாற்றிக் கொள்வதும் , அதனை பயன்படுத்தி பதவிகளை கைப்பற்ற முயற்சிப்பதும் தலைக்குனிய வைக்கும் செயல்களாகும்.

சாதிகள் அன்று முதல் இன்று வரை சமுதாயத்தை அலைக்கழித்து வருகின்றது. சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட பலர் சாதியை எதிர்த்து குரல் எழுப்பி கொண்டே இருக்கிறார்கள் எனினும் சாதி ஒழிந்த பாடில்லை.

சாதிகள் சட்டமயமாக்கப்படிருக்கும் இந்த நாட்டில் ஒரு மனிதன் தன்னை எவ்வாறு அறிமுகப் படுத்தி கொள்வான்?
தான் இந்த சாதியை சார்ந்தவன் என்றா?
தான் இந்த இனத்தை சார்ந்தவன் என்றா?
தான் இந்த மதத்தை சார்ந்தவன் என்றா?

இளைய சமுதாயமே! தமிழ்த்தாயின் வீரப்புதல்வர்களின் விலைமதிப்பற்ற இரத்தம் தேய்ந்து புனிதமடைந்திருக்கும் தமிழ் மண்ணில் இருந்து கொண்டு ஏளனத்திற்குரிய கீழ்த்தரமான வாழ்கை வாழ வெட்கமாக இல்லையா? இன்றைய தலை முறையை எண்ணி புரட்சி பாதையில் நடைபோட உங்கள் மனம் விரும்பவில்லையா? இதையெல்லாம் மறந்தவிட்டு இன்றைய இளைய சமுதாயம் தான் தலைவியாக நினைக்கும் சினிமா நடிகர்களின் பிறந்த நாளுக்கு சுவரொட்டி ஓட்ட விரைந்து கொண்டிருக்கிறது.

இளைய சமுதாயத்தின் சாதிப் பெயரால் தாழிடப்பட்டுள்ள தமிழர்களின் இதயக்கதவுகள் உடைந்து நொறுங்கட்டும். தமிழர்களின் பாமரத்தன்மையும் , அப்பாவித் தனமும் அழியட்டும் , நம் பெயருக்கு பின்னால் உள்ள சாதித்தீ மறையட்டும் , மனித நேயம் வளரட்டும். தமிழினம் செழிக்கட்டும்.

இளைஞனே!
நீ முடங்கி கிடந்தால்
சிலந்தியும் சிறைபிடிக்கும்

நீ பொங்கி எழுந்தால்
எரிமலையும் துணைநிற்கும்

உன்னால் பூமியை
புரட்டவும் முடியும்

உன் எலும்புகள்
தீண்டாமையை உடைக்கட்டும்

உன் பார்வை வீச்சு
மூட நம்பிக்கையை எரிக்கட்டும்

உன் பேச்சால்
தமிழன் சிந்திக்கட்டும்

சீரழிந்த சமுக்கதத்தை சீர்படுத்த
சாவின் விழிம்புவரை தொடரட்டும்
உன் போராட்டம்(கவிதாசன்)

Monday, December 13, 2010

ஒற்றுமை


எங்கள் வலிமை புரியாமல்
நீண்ட நாள் பிரிந்து இருந்தோம்
காலத்தின் கடமை தெரியாமல்
காலம் கடத்தி வந்தோம்

மற்றவர்களின் துன்பத்தை
இன்பமாய் ரசித்து வந்தோம்

நல்லவேளை நமக்குப் பிரச்சினை இல்லை
என்று நீண்ட நாள் ஒதுங்கி இருந்தோம்

நமக்கு ஏன் தேவை இல்லாத வேலை
உண்டு உறங்கி வந்தோம் மிருகங்கள் போல

நாட்டைக் கரையான் அரிக்கிறதா
ஊரை அட்டைப் பூச்சி உறிஞ்சிகிறதா
நமக்கென்ன உணவு கிடைக்கிறதா என்றிருந்தோம்

சேவல் கூவினாலும் கூவாவிட்டாலும்
பொழுது விடிந்துவிடும் என்று
இன்னும் தூங்கிக்கொண்டு இருக்கின்றோம்

ஒர் உயிர் துடித்தது இந்த
இந்த மானிடத்தின் நிலை நினைத்து
ஊழலின் அகாங்காரத்தைப் பார்த்து

தன உயிரை மாய்த்து மக்களுக்கு
உணர்த்தியது உணர்வோடு இருங்கள்
ஒற்றுமையாய் இருங்கள் என்று.

தமிழின் இனிமை !

தமிழ் அமிழ்தினும் அமிழ்து!
தமிழ் ஓசை கேட்பது
மழலையினும் இனிமை!

தமிழ் பேசுவது
தாய்மையுடனும் இனிது!!

தமிழ்த் தாய் இலக்கணத்துடன்
இலட்சியமாய் வாழ்கின்றவள்
இதனால்தான்

எங்கள் தாய் மொழியாகி,
தனிமொழியாகி, தலைமொழியாகி,
பின் செம்மொழியானாய்

தமிழ் தேனினும் இனிமை
தமிழை வியாபார
மொழியாகப் பார்க்காவிடில்

Thursday, December 9, 2010

மொட்டிலே கருகிப்போன மலர்களுக்கு!

குறிப்பு :- கும்பகோணம் குழைந்தைகள் தீயில் பலியான நினைவு நாளில் எழுதியது




நெருப்பே !
உனக்குள் உயிர் இல்லாததால் - இந்த
பிஞ்சுகளின் உயிரை கரியக்கிவிட்டயா
உனக்குத்தான் அறிவில்லையே
நீ என்ன செய்வாய் - அதற்கு
நாங்கள் என்ன செய்வது?

உனக்கு உலகத்தில் -இந்த
குழந்தகைள் தான் கிடைத்தா?

பிஞ்சுகளின் உழைப்பில் வாழும்
பித்தலாட்டகாரர்களை விட்டுவிட்டு
ஏன் இந்த சிறு குஞ்சுகளை எரித்தாய்?

மொட்டுகளே!
மகாமகத்தில் நாங்கள் கரைத்த
எங்கள் பாவங்கள் எல்லாம்
உங்கள் மீது படிந்து விட்டதோ அய்யகோ!

மரணமே!
நாட்டில் அடுத்தவர்கள் உழைப்பை
சுரண்டிவாழும் கயவஞ்சவர்களை
விட்டுவிட்டு உஎன் இந்த
துள்ளி விளையாடும்
துளிர்களை சுட்டெரித்தாய்

கடவுளே!
இந்த அரும்புகள் கதறியது -உன்
காதில் விழவில்லையா?
மலர்களின் மரண ஓலம் -உன்
மனதை கரைக்கவில்லையா?
உனக்கு அழிக்கவும் தெரியும்
என்று அழித்துவிட்டாய - இல்லை
நீ பிறந்தது என்ன இலங்கையா?

Tuesday, December 7, 2010

தலைவர் வாழ்த்து! தமிழ் வாழ்த்து!!




நெல் ஆடிய காவிரிகரையில்
வில் ஆடிய களத்தில்
சொல் ஆடிய சோழ மண்டலத்தில்
வீர குழந்தை பிறந்தது - அது
தாய் மொழிக்கே பெயர் சூட்டும்
தாயக பிறந்தது -தேனினும் இனிய
தமிழாக பிறந்தது - தாழ்த்த பட்டவர்களுக்கு
தந்தையாக பிறந்தது - தமிழினத்தின்
தலைமகனாக பிறந்தது - சூத்திரனுக்கு
சூத்திரமாக பிறந்தது - தமிழுக்கு
தொண்டனாக பிறந்தது - உழைப்புக்கு
ஊற்றாக பிறந்தது- திராவிடத்தின்
திரவியமாக பிறந்தது - பகுத்தறிவின்
பாலமாக பிறந்தது - பெரியாரின்
பொறியாக பிறந்தது - அண்ணாவின்
அன்பாக பிறந்தது - வள்ளுவனின்
வடிவமாக பிறந்தது - பாரதிதாசனின்
பாடலாக பிறந்தது - கண்ணதாசனின்
கவிதையாக பிறந்தது - கழகத்தின்
சூரியனாக பிறந்தது - உடன்பிறப்புகளுக்கு
உயிராக பிறந்தது!

பலகலைகழகம் சென்று படித்தவன் இல்லை -நீ
பலகலைகழகங்கள் உன்னை இன்று படிக்கின்றன


காமராஜர் ஏற்றிய கல்வி ஒளியை
கடுகளவும் குறையாவிடாமல்
காத்த பணியாளன் -நீ


தண்ணீருக்கே தாகமா என்று
வியக்கும் அளவுக்கு செந்தமிழை
ரசிக்கும் தமிழ்த்தேனி -நீ

வரலாறு தெரியாத காகங்கள்
கரையும் பொழுது கனிவுடன்
வரலாறு கூறி திருத்தும் பண்பாளன் -நீ

இக்கட்டான சூழ்நிலையிலும்
நகைச்சுவை புரியும்
சமையோதின நாயகன் -நீ

தமிழ் படங்கள் ஆரியத்தில்
தத்தளிக்கும்போது பராசக்தியாக
நெருப்பூட்டிய புதுமைபித்தன் - நீ


கழகத்தில் சிறு கழகங்கள்
ஏற்ப்படும் பொழுத்து கனிவுடன்
கையாளும் குயவன் - நீ


தமிழனத்திற்க்கு ஒன்றென்றால்
தன்னையே கொடுக்க வரும்
முதல்வன் -நீ


குறளை கடைந்தெடுத்த
கயவன் -நீ


கவிதை ஊற்றென பொழியும்
கற்பனையாளன் -நீ


கர கர குரலினால் இளையோரை
ஈர்த்த கள்வன் -நீ


முத்தமிழின் இனிமையை
உணர்த்திய இனியவன் -நீ


தீந்தமிழ் மீது
தீராத பற்றுகொண்ட காதலன் -நீ


மூத்தகுடி தமிழ் குடியின்
முதியவன் -நீ

சிந்தனையாளர்களின் தலைவன்- நீ

உழைப்பினால் ஓய்வுக்கு ஓய்வு
கொடுக்கும் இளைஞன் -நீ


அறுபது ஆண்டுகளுக்கும்
மேலாக தமிழகத்தின்
தலைப்புசெய்தி -நீ

ஆளும்கட்சியாக இருந்தாலும்
எதிர்கட்சியாக இருந்தாலும்
வில்லாக அம்பாக வரும்
விமர்சனங்களை தாங்கிய பீமன் -நீ

தமிழகத்தில் இரண்டே நிலைதான்
உன்னை கண்மூடித்தனமாக - எதிர்ப்பவர்கள்
உன்னை கண்மூடித்தனமாக - ஆதரிப்பவர்கள்

பல பத்திரிக்கைகள் உன்னால்தான்
பிழைப்பு நடத்துகின்றன


உன் துண்டு நிறம் மாறினும்
உன் தொண்டின் நிறம் மாறவில்லை


உன் கால்கள் தளர்ந்தாலும்
உன் தடம் மாறவில்லை


உன் பெருமை பற்றி பாட
உன்னருகில் கவிஞர்கள் இருக்கலாம்
உன் அருமை சொல்ல
உன்னருகில் அறிஞர்கள் இருக்கலாம்

ஆனால்
என்னை போன்ற உடன் பிறப்புகள்
உனக்கு காட்டிய நன்றி என்ன?

கழகத்தை ஐந்து முறை
ஆட்சியில் அமர்த்தியதும்
தோல்வியை உன்னை நெருங்க
விடாமல் துரத்தியதும்

என் தாத்தா காலத்திலும் முதலமைச்சர் -நீ
என் காலத்திலும் முதலமைச்சர் -நீ
என் பேரன் காலத்திலும்
முதல்வராய் வாழி நீ பல்லாண்டு !


Thursday, October 14, 2010

கனவுகளின் கதாநாயகன் அப்துல்கலாம்




சீர்திருத்தத்தின் சிற்பியே
சிந்தனைகளின் சிகரமே
எளிமையின் ஏற்றமே
அறிவின் அரசரே

ராக்கெட் மட்டுல்ல ஏற்றியது - நீ
பாரதத்தின் புகழையும் எங்கள் இலட்சியத்தையும்.

பறைசாற்றி கொள்ளாத பகுத்தறிவுவாதி -நீ
ஏனென்றால் அறிவியல் தமிழன் நீ.

கனவு காணுங்கள் , இலட்சியத்தோடு இருங்கள் என்று
ஈரடிகளால் எங்களை வளைத்த வள்ளுவன் - நீ

முறையான சமுதாயம் அமைய
பள்ளி சிறார்களிடம் சீர்திருத்த கருத்துக்கள்
மூலம் மின்சாரம் பாய்ச்சிய ஐன்ஸ்டின் -நீ

கனவு காணுங்கள் வல்லரசாக மாற்றலாம்
இளஞ்சர்களின் பொறுப்பை உணர்த்தி
வாருங்கள் என்றழைத்த விவேகானந்தர்- நீ

மனித வளம் உள்ள நம் நாட்டின்
மக்கள் சக்தியைச்சீர்படுத்தவேண்டும் என்று
தத்துவங்கள் பொழிந்த சாக்ரடீஸ் - நீ

இயற்கையிடமும் , உன்னை நாடி வருபவர்களிடமும்
கடிதம் எழுதுபவர்களிடமும் அன்பு காட்டும் மனித நேயன் - நீ

நீ எழுதிய அக்னிச் சிறகுகள்
எங்கள் அறியாமையை எரித்தது

நீ எழுதிய எழுச்சித் தீபங்கள்
எங்கள் இலட்சிய திரியைப்பற்றவைத்தது

மன்னர்களும் , பிரபுக்களும் நிர்வாகம் செய்த
குடியரசுத்தலைவர் மாளிகை உன்னால்தான்
மக்கள் மன்றம் ஆனது.

பாராளுமன்றத்தில் நீ எடுத்துக்காட்டிய
மக்கள் நல திட்டங்கள் - அவர்களின்
சுயலாப செயல்பாடுகளால் எடுபடவில்லை.

நீ மாற்ற வேண்டும் என்று நினைத்தாய்
பாரதத்தை வல்லரசாக அமைதிப்பூங்காவாக
ஆனால் சுயலாப அரசியல்வாதிகளால்
உன் முயற்சிக்கு பலன் அளிக்கவில்லை

ஒரு நாள் விடியும் அது உன்னால் முடியும்
என்றழைத்த உன் இளைஞ்ர் கூட்டம் எங்கே?
இதோ மதுக்கடை வாயிலிலும்,வீணான கேளிக்கையிலும்
நடிகர்களின் மாயத்தோற்றத்தில் மயங்கியும் கிடக்கிறது

முடியும் வரை போராடு
உன்னால் முடியும் வரையல்ல
உன் இலட்சியம் நிறைவேறும் வரை -என்று
எங்களின் உணர்வுக்கு உயிர் கொடுத்த கலாமே
உங்களுக்கு எங்களின் சலாம்

நாங்கள் கனவு கண்டால்
நீதான் கனவில் - ஏனென்றால்
அறிவுசார் கருத்து பெட்டகம் நீ
இலட்சிய கோட்பாடுகள் கொண்ட மாமேதை நீ
எங்கள் கனவுகளின் கதாநாயகன் நீ

Tuesday, October 12, 2010

சிறகைவிரிக்கும் நினைவுகள்



எனக்குச்சிறு காயம் பட்டால்
தனக்கு வலி ஏற்ப்பட்டது போல் பதறும் அம்மா

எனக்கு உடல்நிலை சரியில்லைஎன்றால்
தன் தூக்கத்தை தியாகம் செய்யும் அப்பா

தங்களை விட என்னை அதிகமாக
நேசித்த அத்தை மாமா

நான் அடம்பிடிப்பேன் என்பதற்காக
தன் புதுச்சட்டையைத்தரும் அண்ணன்

நான் அழுவேன் என்பதற்காக
தன் திண்பண்டங்களை தரும் அக்கா

எனது வால்தனத்தை ருசித்த பாட்டி
எனது விளையாட்டை ரசித்த தாத்தா

எனது சிறு வயது குரும்புதனத்தில்
கவலைகளை மறந்து மகிழ்ச்சியடையும் உறவினர்கள்

எந்தக்கவலையும் இல்லாமல்
நண்பர்களுடன் விளையாட்டு.

நான் இங்கு கணினியோடு முட்டிமோதிகொண்டு
மூளை சிறுத்துக்கொண்டு போகும்போது
இந்த நினைவுகள் மனதில் சிறகடித்து பறக்கின்றது
இதயத்திற்கு இதமாக இருக்கின்றது.

நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்
நீங்கள் செய்த தியாகத்திற்கு?

Wednesday, September 29, 2010

மறந்து போன மனித நேயம்




மனிதன் என்ற படைப்பு இயற்கையின் புனிதமான படைப்பு ஆகும். இயற்கையின் ஒவ்வொரு படைப்பும் தனித்தனி

குணாதிசயங்களைக்கொண்டுள்ளது. மனிதனுக்கு இயற்கையின் மற்ற எல்லாப்படைப்புகளையும் விட அதிகமான அறிவும் தனித்தன்மையும் கொடுக்கப்பட்டுள்ளது. மனித படைப்புக்குக்கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகள் அதிகம் . இயற்கையின் படைப்புகளைப்பாதுகாப்பது மற்றும் மற்ற மனிதர்களிடமும் தன்னைப்போல் அவனும் ஒருமனிதன் அவர்களுக்கும் நம்மைப்போல் உணர்வுகளும் பொறுப்புகளும் உள்ளது என்று உணர்ந்து நடப்பது.

மனித நேயம் என்பது என்ன என்றால் மனிதத்தன்மையுடன் நடந்து கொள்வது. அப்படி என்ன தனித்தன்மை மனிதனுக்கு. மனிதனாய் வாழ்வதற்குச்சில கடமைகளையும், சில கட்டுப்பாடுகளையும் இயற்கை வழங்கியுள்ளது . அது நம் நலவாழ்வுக்காக தந்த விதி முறைகள். நம் ஆசைகளை, தேவைகளை அடைவதில் நேர்மையான வழிமுறைகளையும், மற்றவர்களைப்பாதிக்காத வண்ணம் நம்முடைய தேவைகளை பூர்த்திசெய்வது . இப்படி ஆராய்ந்து செயல்படுவதில்தான் நமக்கும் மிருகங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தெரியும். கடமையையும் மீறி மனம் போன போக்கில் நடக்கும் போது , தவறான முறையினால் நாம் நினைத்ததை அடையவேண்டியது உள்ளது. இந்த நேரத்தில் நாமும் கேட்டு மற்றவர்களையும் கெடுப்பதற்கு ஒரு காரணமாக இருக்கின்றோம். இந்தக்கட்டுப்பாட்டை இழந்த சூழ்நிலையில்தான் மனித நேயம் கொஞ்சம் கொஞ்சமாக மறையத்தொடங்குகிறது.

அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்திய நம் முன்னோர்கள் , பெரியோர்கள், ஞானிகள் வாழ்ந்த நம் சமுதாயத்தின் இன்றைய நிலையோ பரிதாபமாக உள்ளது. அரை அடி வாய்க்கால் வரப்பு பிரச்சனைக்காக தன் உடன் பிறப்புகளைக்கொலை செய்வது. இன்றைய நாளிதழ்களை புரட்டினாலே கொலைச்சம்பவங்கள் , நம்பிக்கை துரோகங்கள் , கள்ளத்தொடர்புகள் பற்றிதான் அதிகம் இருக்கின்றன. மனைவியை ஏமாற்றி தவறான தொடர்புகள் மூலம் குடும்பத்தை சீர்குலைப்பது . கணவனால் கைவிடப்படும் இளம்பெண்கள். கணவனின் நம்பிக்கையை மீறும் பெண்கள். சாலையில் விபத்து ஏற்ப்பட்டால் அடிபட்டவர்களுக்கு உதவ மறுக்கும் எண்ணம். பண வெறி , பதவி வெறி , புகழ்ச்சி வெறி, காம வெறி என மனித மனம் கல்லாக மாறி தவறான செயல்களைத்தயக்கம் இன்றிச்செய்கிறது.

மனிதர்கள் எப்படி மனிதத்தன்மையை இழந்து நிற்கின்றார்கள் என்பது புரிகின்றது.மனிதனை மனிதனாக மதிப்பதில்லை. ஒருவரை ஒருவர் நம்பும் சூழ்நிலை இல்லை. அன்பு, பாசம் போன்ற உணர்வுகள் மறக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகின்றன. மனித மனமானது அதிக வருமானம், கட்டுக்கட்டாய்ப் பணம், பேராசை, முறைகேடான உறவுமுறைகள், பதவி மோகம், காமம்,வன்முறை வெறியாட்டங்கள் , தீவிரவாதம் , கேளிக்கை விளையாட்டுகள் என ஒரு ஆடம்பரமான வாழ்க்கையைத் தேடி ஒரு வேட்டை நாயைப்போல அலைகிறது. ஆறறிவு படைத்த மனிதர்கள் உறவுகளை மறந்து, அன்பை மறந்து அரக்கத்தனமான வாழ்க்கைக்கு ஆயத்தமாகி விட்டனர்.பெரியோர்களை மதிக்கும் தன்மை அறவே இல்லை. மனித வாழ்க்கையின் பாதி நேரம் கம்ப்யூட்டர், தொலைக்காட்சி, சினிமா முன்னே கரைந்து போய்க்கொண்டிருக்கிறது.

நாமும் இன்றைய அன்றாட வாழ்வில் மனிதத்தன்மையற்ற செயல்களை நம்மை அறியாமல் செய்து கொண்டு இருக்கின்றோம். நமக்கு அது பழகிவிட்டது. சிறு சிறு உதவிகள் செய்யக்கூட மறுக்கின்றோம். கடமை , கண்ணியம் , கட்டுப்பாட்டை மீறி அடுத்தவர்களுக்கு இடையூறாக இருக்கின்றோம்.
"அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்,
தம்நோய்போல் போற்றாக் கடை''
என்பது வள்ளுவம்.
கல்வியறிவு, செல்வச் செழிப்பு, பட்டம், பதவி ஆகியவை பெருமளவில் ஒருவனுக்குக் கிடைத்திருந்தாலும், அவற்றுடன் மனித நேயம் என்பது அவனிடம் இல்லை என்றால், சேர்ந்துள்ள மற்ற வசதிகளால் அவனுக்கோ அவன் சார்ந்த சமுதாயத்துக்கோ எந்தப் பயனும் இல்லாமற் போய்விடும்!



எனவே நம்முடை சுயலாபத்திற்க்காக மனிதத்தன்மையை இழக்காமல், மனித நேயத்துடன் வாழ்ந்து , மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக , மனித நேயத்துடன் வாழ்ந்து , அன்பும் கருணையும் நிறைந்த புதிய உலகத்தைப்படைப்போம்.

Saturday, September 25, 2010

என்னை பார் யோகம் வரும்




மிகப்பெரிய வணிக நிறுவனத்தில்
என்னைப்பார் யோகம் வரும்
என்ற கழுதையின் உருவப்படம் - ஆனால்
அதைத்தினமும் பார்க்கும்
சலவைத்தொழிலாளி குடிசை வீட்டில்!

Friday, September 24, 2010

இறைவா போற்றி!!



குலத்திற்கு ஒரு தெய்வம்
சாதிக்கு ஓர் ஆலயம் - என்று
மக்களிடையே பிரிவினை சக்தியாக
இருக்கும் - இறைவா போற்றி!!

சாதிக்கு ஒரு கடவுள் - என்று
சாதி சங்கத்தலைவர்களாக
விளங்கும் - இறைவா போற்றி!!

இனத்திற்கு ஒரு கடவுள் -என்று
கடவுள் பெயரால் - இனகலவரங்களுக்கு
காரணமான - இறைவா போற்றி!!

மதத்திற்கு ஒரு கடவுள் -என்று
ஆலயங்களால் - மதகலவரங்களுக்கு
தலைவனானான - இறைவா போற்றி!!

நாட்டிற்க்கு ஓர் மதம் - என்று
மண் ஆசையால் - போர்களுக்கு
ஆயுதமான - இறைவா போற்றி!!

Sunday, August 29, 2010

கருணைக்கு நூற்றாண்டு விழா




பாலின் வெண்மையினும் வெண்மையான உள்ளம்
குழந்தையின் தூய்மையினும் தூய்மையான உள்ளம்
அரவணைக்கும் அன்னை உள்ளம்
பரிவு தரும் தந்தை உள்ளம்
புனித உள்ளம் கருணை உள்ளம்

அவர் மார்போடு ஆதரவு அற்றவர்களை
அரவணைக்கும் மனித நேயத்தில்
நாமும் தோற்று வெட்கி தலை குனிவோம்
நம் சொந்தங்களை கைவிட்டதை நினைத்து

கண்கள் கலங்கிடும் இதயம் பட படத்திடும்
நோய்யொன்று, வறுமையொன்று அடித்தட்டு
மக்களைத் தீண்டுது என்றால் அவர் பிரிந்தாலும்
புனிதப்பயணமும் , செய்யும் அற்புதங்களும் நிற்காது

கையில் எச்சில் உமிழ்ந்து இகழ்பவர்களிடம்
அவர்காட்டும் கருணை தலை நாணச் செய்துவிடும்

எளியவர்களிடமும் , வறியவர்களிடமும்,
சாதாரண மக்களிடமும் அவர்காட்டும் காட்டும் தாழ்வு
வீணான தற்பெருமை பேசுபவர்களைச் சிந்திக்க செய்யும்

உலகெங்கும் சண்டைகளும் , சச்சரவுகளும்
மனித தன்மையற்ற செயல்களும், கொலைகளும்
கற்பழிப்புகளும், அடிமைத்தனங்களும், வறுமையும்
மனித பாவங்களும், குற்றங்களும் அதகரித்த தருணத்தில்

மீண்டும் இறைவன் பிறக்க வேண்டும்
என்று அடித்தட்டு மக்கள் நினைத்த நேரத்தில்
யூகோஸ்லோவியாவில் ஒரு குழந்தை பிறந்ததது
நம் அன்னையாக கருணை தெய்வமாக

நீ திகழ்ந்தாய் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக
நீ நடந்தாய் மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக
நீ வாழ்ந்து காட்டினாய் மனித நேயம் உடையவராக
நீ இருந்தாய் உண்மையாக , நேர்மையாக , புனிதமாக

தொழுநோயாளிகளிடம் நீ காட்டிய -அன்பு
மனிதன் கொடுக்க முடியாத கடவுளின் அன்பு

நோயாளிகளிடம் நீகாட்டும் -கருணை
உன்னை இகழ்பவர்களிடம் நீகாட்டும் -பரிவு
மற்றவர்களிடம் நீகாட்டும் -தாழ்மை
மனிதன் செய்ய முடியாத இறைவனின் செயல்

நீ பிறந்த இந்த உலகமும்
நீ வாழ்ந்த இந்த தேசமும்
நீ பழகிய இந்த சமுதாயமும்
உனக்கு நூற்றாண்டு விழா எடுக்கின்றது
உன் வழி, நெறிகளைப் பின்பற்றாமல்

Thursday, August 12, 2010

மன அழுத்தம் நிறைந்த நாகரிக வாழ்க்கை



"திரை கடல் ஓடியும் திரவியம் தேடு " என்பது முன்னோர் வாக்கு. அதற்காக மக்கள் தங்களுடைய சொந்த வாழிடங்களை விட்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கும் , நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் குடிபெயர்ந்து செல்கின்றனர். ஆனால் அவர்களால் அந்த செல்வத்தை வைத்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக வாழ முடிகிறதா என்றால் அது ஒரு கேள்விக் குறியாகத்தான் இருக்கும்.

பொதுவாக நம்முடைய வாழ்க்கை முறை கூட்டுக் குடும்பமாக, உறவினர்களோடு ஒன்று பட்டு , சமுதாயத்தோடு சேர்ந்து வாழும் முறையில் நம்முடைய கலாச்சார அமைப்பு உள்ளது. இப்படிப் பட்ட சூழ்நிலையில் நாம் வாழும் போது நம்முடைய சுமைகளை , நம்முடைய இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள , நம்முடைய வேலைப்பளுவைக் குறைக்க நம்முடையே நம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நம்முடைய உறவினர்கள் இருந்தார்கள். இந்த வாழ்க்கை முறையில் நம்முடைய முழுத்தேவைகளும் கிடைக்கவில்லை என்றாலும் அதிக மன அழுத்தம் இல்லாமல் இருந்தார்கள். இந்த கலாச்சார வாழ்க்கையில் சமுதாயத்தில் மனிதர்களுக்கு மதிப்பு கொடுத்தோம்.

ஆனால், இன்றைய மாயத்தோற்றம் நிறைந்த இந்த நாகரிக வாழ்க்கையில் வாழ்ந்து நமது மன அழுத்தத்தை அதிகப் படுத்துகின்றோம். நாகரீக வாழ்க்கை என்ற போர்வையில் வாழ்ந்து கொண்டு பிறர் நம்மை குறைவாக நினைத்து விடக்கூடாது என்று நமையே நாம் வருத்திக் கொண்டு விரக்த்தியின் உச்சிக்கே சென்று பரிதவித்து கொண்டு இருக்கின்றோம். அடுத்தவர்களை மேலோட்டமாக பார்த்து இவர்கள் நன்றாக இருக்கின்றார்களே என்று நினைத்து மனதைக் கசக்குகிறோம் , அவர்களும் நம்மை போல் நாகரிக வாழ்க்கை என்ற போர்வையில் மாட்டி கொண்டு தவிகின்றார்கள் என்று புரிந்து கொள்ளாமல். மனித வாழ்க்கை இன்று மன அழுத்தம் நிறைந்ததாகவும், மன நிறைவற்றவதாகவும் இருக்கிறது, என்பதற்கு நமுடையே இருக்கும் போட்டிகளும் , பொறாமைகளுமே , தற்கொலைகளும், விவாகரத்துகளும், வெறுப்பும்,இரவில் தூக்கம் இல்லாமையும் இதற்க்கு உதாரணமாக இருக்கின்றது.
மன அழுத்தத்தில் இருந்தது விடு பட மக்கள் கேளிக்கை விடுதிகளிலும் , மதுபானக் கூடத்திலும் பணத்தை விரயம் செய்து சிற்றின்பங்களைத் தேடி அலைந்து வாழ்க்கையை வீணாக்குன்றார்கள். இந்த நாகரிக வாழ்க்கையில் மனிதர்களை நம்புவதை விடப் பணத்தையே பெரிதாக நம்புகிறார்கள்.

இந்த நாகரீக வாழ்கையில் நாம் உண்மையான உணர்வுகளைப் புரியாமல் போலியாக மாறுகின்றோம். இதன் காரணமாகத்தான் போலிச் சாமியார்களும் , போலி ஆன்மிகவாத்திகளும் உருவாகி நாட்டைச் சீரழிக்கின்றார்கள். பிற நாட்டவர்களும் வியந்து பாராட்டும் நம்முடையக் நாட்டு கலாச்சாரத்தை நாம் மறந்து , நுகர்வுக் கலாச்சாரத்தால் நம்முடைய தனித்தன்மையை இழந்தது வாழ்வையும் இழந்து கொண்டு இருக்கின்றோம்.

திரை கடல் ஓடியும் திரவியம் தேடிவிடலாம் எங்கே சென்று உறவுகளைத் தேடுவது?, எங்கே சென்று அன்பைத் தேடுவது?, எங்கே சென்று மன நிமதியைத் தேடுவது?, பணம் என்பது நமது வாழ்கையில் நம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு அங்கமாகவே இருக்க வேண்டும். நம்முடைய மன அழுத்தத்தைக் குறைக்க நம்முடைய போலியான நாகரிக வாழ்கையை உதறிவிட்டு, குடும்பத்துடன் , உறவுகளுடன் , நண்பர்களுடன் நம்முடைய குறைவை , நிறைவை , துயவுர்களைப் பகிர்ந்து கொள்வதே இதற்குத் தீர்வு!

Wednesday, August 4, 2010

ஒன்றுமே புரியவில்லை!


கருவில் இருக்கும் குழந்தை
கிழித்து தாயுடன் அழிக்கப்படுகிறது
பள்ளிச் சிறுவர்கள் கூண்டோடு
பலியாகிறார்கள் அணுகுண்டு வீசப்பட்டு

கன்னிப் பெண்களின் கற்பு
கயவர்களால் மிருகத்தனமாய்க் கலைக்கப்படுகிறது
பாமரமக்கள் முள்வேலிக்குள் பசியால்
பரிதவிக்கும் அழுகை குரல்

சிறையில் கொடூரமாய் போராளிகள்
சித்திரவதை செய்து கொல்லப்படுவது
இளையோரக்ளின் கண்களை இறுக்கிக்கட்டி
நிர்வாணமாய் சுடப்பட்டு மரணம்

இந்தச் சாவுகளின் கொடுரத்தை
ரசித்து எக்காளமாய் சிரிக்கிறது
அமைதியையும் அன்பையும் உலகுக்குப்
போதித்த புத்தனின் தேசம்

இவை அனைத்தும் நல்லது
என்று கைதட்டி சிரிக்கிறது
அகிமசையும் அறவழியயும் உலகுக்குக்
கொடுத்த காந்தி தேசம்

இதற்கு ஆதரவாய் நம்மிடையே
சில ஓநாய்கள் ஓலமிடுகின்றன
இதை ஆதாயமாய் வைத்து
ஓட்டுக்காக சில நரிகள் ஊளையிடுகின்றன

கொடுமைகளை யாரிடம் முறையிட
யார் மனிதநேயத்துடன் உண்மையாக
உதவிட செயல்படுகிறார்கள் என்று
ஒன்றுமே புரியவில்லை!

Wednesday, July 28, 2010

காதல் மீது காதல்




ஏன்?
காதல் மீது காதல்

ஏனென்றால்.....
காதல் என்பது
உயிருக்கு உணர்வு
உணர்வுக்கு உயிர்!

காதல்



காதல் வாழ வைக்கிறது
கடற்கரையில் சுண்டல்காரனை

காதல் வாழ வைக்கிறது
கடையில் ஐஸ்கிரீம்காரனை

காதல் வாழ வைக்கிறது
நாட்டில் தொலைத் தொடர்புதுறையினரை

காதல் வாழ வைக்கிறது
உலகத்தில் சினிமாக்காரர்களை

காதல் அழ வைக்கிறது
வீட்டில் பெற்றோரை

காதல் கடைசியில் அழிக்கிறது
சமுதாயத்தில் கலாச்சாரத்தை.

ஏமாற்றங்கள்



நம்முடைய வாழ்வில் நாம் அனைவரும் எல்லாச் சூழ்நிலையிலும், எல்லாப் பருவத்திலும் ஏமாற்றங்களை சந்தித்தும் , அந்த நிலையை கடந்தும் வந்திருப்போம். ஏமாற்றத்திற்கு என்று ஒரு வரைமுறையோ அல்லது ஒரு காரணமோ கிடையாது. அது எதாவது ஒரு சூழ்நிலையில் நம்முடைய வாழ்வில் ஒன்றாக கலந்து விடுகிறது. ஆனால் ஒவ்வொரு ஏமாற்றமும் நமக்கு எதாவது ஒரு படிப்பினையைக் கற்றுத் தருகிறது, அது என்ன என்று ஆராய்ந்து பார்த்து அறிந்து கொண்டால் வாழ்வில் சுலபமாக வெற்றி பெறலாம்.

பொதுவாக ஏமாற்றங்கள் மூன்று வகைகளில் நமக்கு ஏற்படுகிறது ஒன்று காலத்தால் மற்றொன்று அடுத்தவர்களால், மற்றொன்று நம் ஆசைகளை மிஞ்சும் போது. நாம் ஒவ்வொரு முறையும் ஏமாற்றங்களைச் சந்திக்கும் போது வாழ்வின் மீது வெறுப்பும் , மனத்துயரமும் மற்றும் தன்நம்பிக்கையும் இழந்து காணப்படுகின்றோம். நாம் சந்திக்கும் ஒவ்வொரு ஏமாற்றமும் நம்முடைய அடுத்த முயற்சிக்குத் தடைக்கல்லாகவே நினைக்கின்றோம். ஆனால், நாம் ஏமாற்றங்களை ஏற்றுக் கொண்டால்தான் நம்முடைய வாழ்வில் ஏற்றம் நிச்சயம் கிடைக்கும்.

காலத்தால் ஏற்படுகிற ஏமாற்றம் நாம் இயற்கையைச் சரியாக பேணிப் பாதுகாக்காததால் ஏற்படுகிறது. இதனால் முழு உலகமுமே பாதிக்கப் படுகிறது. அடுத்தவர்களால் ஏற்படுகிற ஏமாற்றம் நம்முடைய எதிர்பார்ப்புகளால் ஏற்படுகிறது. நாம் அடுத்தவர்களை எதிர்பார்ப்பதால் நாம் தன்நம்பிக்கை இல்லாதவர்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரத்தால் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். எதிர்பார்ப்பு எப்பொழுது அளவுக்கு அதிகமாக ஆகிறதோ அப்பொழுது மனபாதிப்புக்கு உள்ளாகிறோம். நம் ஆசைகளை மிஞ்சும் போது ஏற்ப்படுகிற ஏமாற்றம் நம்முடைய அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையும் நம்முடைய அறியாமையும் வெளிப்படுத்துகிறது. இதனால் நாம் நம்முடைய தன்னம்பிக்கையை இழக்கின்றோம்.

ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் சந்திக்கும் ஏமாற்றமும் நமக்கு ஏதோவொரு மாற்றத்திற்கான தொடக்கமும் ஊக்கமுமாகவே இருக்கிறது. வாழ்வில் ஏமாற்றங்களைச் சந்திக்கும் போது இந்த பாதை நமக்கு சரி இல்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது. எந்த ஒரு வகையான ஏமாற்றமும் நம்மைத் தாக்கும் போது நாம் சோர்வு அடையாமல், துவளாமல் , வீணாக புலம்பாமல் நம் மனதை திடப் படுத்தி நம்முடைய ஆளுமையை வளர்த்துக் கொண்டால் நாமே இவ்வுலகில் மிகச்சிறந்த வெற்றியாளர்.

இனிமை




சுகவீனமான நேரத்தில் தாயின் பரிவு
பலவீனமான நேரத்தில் தந்தையின் ஆறுதல்

தோல்வி நேரத்தில் உடன்பிறப்புகளின் ஊக்கம்
இக்கட்டான நேரத்தில் உறவினர்களின் துணை

துன்பமான நேரத்தில் நண்பனின் உற்சாகம்
தளர்வான நேரத்தில் பெரியவர்களின் வார்த்தை

சோர்வான நேரத்தில் மனைவியின் அரவணைப்பு
களைப்பான நேரத்தில் குழந்தையின் சிரிப்பு

இவை அனைத்தும் இனிமைதான் நாம்
உண்மையான மனிதானாக இருந்தால்

Sunday, July 18, 2010

முழுமை

தலைவனின் முழுமை
நாட்டைச் செழுமையாக வழிநடத்துவது

தந்தையின் முழுமை
குடும்பத்தைச் சீராக நடத்துவது

தாயின் முழுமை
குழந்தைகளைச் சீராக வளர்ப்பது

உறவுகளின் முழுமை
இன்பத்திலும் துன்பத்திலும் ஒன்றாய்இருப்பது

நட்பின் முழுமை
இக்கட்டான நேரத்தில் கைகொடுப்பது

துறவறத்தின் முழுமை
இறைவனை முழுமையாக அடைவது

இல்லறத்தின் முழுமை
இனிமையாக வாழ்வை நடத்துவது

கல்வியின் முழுமை
கற்காதவர்க்களுக்கு கல்வியைச் சேர்ப்பது

சட்டத்தின் முழுமை
பாமர மக்களையும் வாழவைப்பது

கொடையின் முழுமை
இல்லாதவர்களுக்குப் போய் சேருவது

நம்பிக்கையின் முழுமை
நம்முடைய நோக்கத்தில் வெற்றியடைவது

வாழ்வின் முழுமை
மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பது

மனிதத்தின் முழுமை
மனித நேயத்துடன் செயல்படுவது

முரண்பாடுகள்

கையூட்டுக்கு எதிராக சட்டம் இயற்றும்
கையூட்டு வாங்கும் அரசியால்வாதிகள்

நீதியை நிலை நாட்டவேண்டிய நீதிபதிகள்
நிதிக்காக நீதியை விற்ப்பது

சட்ட நுணுக்கங்களைக் கற்ற வழக்கறிஞர்கள்
சட்டத்தைச் சுயஇலாபத்துக்காக மீறுவது

சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையினர்
சட்டத்தை பணம்படைத்தவர்களுக்காக மாற்றுவது

கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியார்கள்
காமத்திற்காக மாணவர்களைப் பயன்படுத்துவது

ஆன்மீகத்தைப் போதிக்க வேண்டிய ஆன்மீகவாதிகள்
ஆன்மீகத்தின் ஆணிவேரை அறுப்பது

துறவறம் ஏற்ற துறவிகள்
துன்பமாக பக்தர்களுக்கு மாறுவது

பகுத்தறிவு பேசும் பகுத்தறிவுவாதிகள்
பண்பாட்டைக் காற்றில் பறக்கவிடுவது

தொழிலாளர்களின் நலனுக்காக போராடும்
தோழர்கள் முதலாளித்துவத்திடம் அடிபணிவது

கலாச்சாரத்தைப் பிரதிபலிக்ககூடிய திரைப்படம்
கலாச்சாரத்தை வீணாக சீரழிப்பது

இந்த உலகத்தின் முரண்பாடுகளைப் பார்த்து
இன்னல்களைச் சந்திக்கும் பொதுமக்கள்

Wednesday, July 14, 2010

புலி

இந்தியாவின் தேசிய விலங்கு புலி
ஆனால் புலியைக்கண்டால் பயம்

இங்கு புலியை வேட்டையாடினால் தண்டனை
ஆனால் அங்கு வேட்டையாடினால் பரிசு

இங்கு புலியைக் காக்க சரணாலயம்
ஆனால் அங்கு முள் வேலி

இங்கு புலி பாதுகாப்பிற்கு வனத்துறை
ஆனால் அங்கு அழிப்பதற்கு நமது இராணுவம்

உலகுக்குத் தெரியும் பதுங்கும் புலி
ஆளும் அரசாக மாறும் என்று.