Saturday, March 29, 2014

என் மனைவி என் காதலி



பாசத்தை பொழியும்
பெற்றோராய் இருந்தாய்

தோல்வியில்  தோள்கொடுக்கும்
தோழனாய் வந்தாய்

சிறிய கூடாரத்தின்
சீமாட்டியாய் வலம் வந்தாய்

இல்லறம் என்னும் நல்லறம் அமைக்க - நம்
இருமனமும் சேர்த்தோம் ஓருடலாக

கெஞ்சுவதும் சிறு சண்டைகள் போடுவதும்
அழுவதும் அள்ளி அரவணைப்பதும்
கண்டிப்பதும் தெவிட்டாது அன்பு செய்வதும்
இன்பமாக இவ்வுலகை சுற்றிவந்தோம் - ஆனால்

இன்று  சிலகாலமாய்

உன்  கால்கொலுசு சப்தங்கள்
கேட்பதில்லை

உன் செல்ல கோபத்தை
பார்க்கவில்லை

தூக்க கலக்கத்தில் சூடான
தேநீர் கிடைக்கவில்லை

பிரிவு எனும் வலியில் தானே
நம் காதலின் இன்பம் தெரிகிறது

என் அருகில் எத்தனை பேர்  இருந்தாலும்
தனிமையை உணருகிறேன்
எத்தனை பொழுது போக்கு சாதனங்கள் இருந்தாலும்
ஒவ்வொரு இரவும் கொடுமையாக நகர்கிறது
என்னருகில் நீ இல்லாததால்

தற்காலிக பிரிவு என்றாலும்
மனது தவிக்கிறது - மீண்டும்
எப்போது சந்திப்போம் - மூவராக
நம் குழந்தையுடன் சேர்த்து

நீ கருவுற்று தாய் வீட்டுக்கு சென்றதால்
இதுவே என் கவிதைக்கு கருவானது