Sunday, August 29, 2010

கருணைக்கு நூற்றாண்டு விழா




பாலின் வெண்மையினும் வெண்மையான உள்ளம்
குழந்தையின் தூய்மையினும் தூய்மையான உள்ளம்
அரவணைக்கும் அன்னை உள்ளம்
பரிவு தரும் தந்தை உள்ளம்
புனித உள்ளம் கருணை உள்ளம்

அவர் மார்போடு ஆதரவு அற்றவர்களை
அரவணைக்கும் மனித நேயத்தில்
நாமும் தோற்று வெட்கி தலை குனிவோம்
நம் சொந்தங்களை கைவிட்டதை நினைத்து

கண்கள் கலங்கிடும் இதயம் பட படத்திடும்
நோய்யொன்று, வறுமையொன்று அடித்தட்டு
மக்களைத் தீண்டுது என்றால் அவர் பிரிந்தாலும்
புனிதப்பயணமும் , செய்யும் அற்புதங்களும் நிற்காது

கையில் எச்சில் உமிழ்ந்து இகழ்பவர்களிடம்
அவர்காட்டும் கருணை தலை நாணச் செய்துவிடும்

எளியவர்களிடமும் , வறியவர்களிடமும்,
சாதாரண மக்களிடமும் அவர்காட்டும் காட்டும் தாழ்வு
வீணான தற்பெருமை பேசுபவர்களைச் சிந்திக்க செய்யும்

உலகெங்கும் சண்டைகளும் , சச்சரவுகளும்
மனித தன்மையற்ற செயல்களும், கொலைகளும்
கற்பழிப்புகளும், அடிமைத்தனங்களும், வறுமையும்
மனித பாவங்களும், குற்றங்களும் அதகரித்த தருணத்தில்

மீண்டும் இறைவன் பிறக்க வேண்டும்
என்று அடித்தட்டு மக்கள் நினைத்த நேரத்தில்
யூகோஸ்லோவியாவில் ஒரு குழந்தை பிறந்ததது
நம் அன்னையாக கருணை தெய்வமாக

நீ திகழ்ந்தாய் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக
நீ நடந்தாய் மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக
நீ வாழ்ந்து காட்டினாய் மனித நேயம் உடையவராக
நீ இருந்தாய் உண்மையாக , நேர்மையாக , புனிதமாக

தொழுநோயாளிகளிடம் நீ காட்டிய -அன்பு
மனிதன் கொடுக்க முடியாத கடவுளின் அன்பு

நோயாளிகளிடம் நீகாட்டும் -கருணை
உன்னை இகழ்பவர்களிடம் நீகாட்டும் -பரிவு
மற்றவர்களிடம் நீகாட்டும் -தாழ்மை
மனிதன் செய்ய முடியாத இறைவனின் செயல்

நீ பிறந்த இந்த உலகமும்
நீ வாழ்ந்த இந்த தேசமும்
நீ பழகிய இந்த சமுதாயமும்
உனக்கு நூற்றாண்டு விழா எடுக்கின்றது
உன் வழி, நெறிகளைப் பின்பற்றாமல்

Thursday, August 12, 2010

மன அழுத்தம் நிறைந்த நாகரிக வாழ்க்கை



"திரை கடல் ஓடியும் திரவியம் தேடு " என்பது முன்னோர் வாக்கு. அதற்காக மக்கள் தங்களுடைய சொந்த வாழிடங்களை விட்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கும் , நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் குடிபெயர்ந்து செல்கின்றனர். ஆனால் அவர்களால் அந்த செல்வத்தை வைத்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக வாழ முடிகிறதா என்றால் அது ஒரு கேள்விக் குறியாகத்தான் இருக்கும்.

பொதுவாக நம்முடைய வாழ்க்கை முறை கூட்டுக் குடும்பமாக, உறவினர்களோடு ஒன்று பட்டு , சமுதாயத்தோடு சேர்ந்து வாழும் முறையில் நம்முடைய கலாச்சார அமைப்பு உள்ளது. இப்படிப் பட்ட சூழ்நிலையில் நாம் வாழும் போது நம்முடைய சுமைகளை , நம்முடைய இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள , நம்முடைய வேலைப்பளுவைக் குறைக்க நம்முடையே நம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நம்முடைய உறவினர்கள் இருந்தார்கள். இந்த வாழ்க்கை முறையில் நம்முடைய முழுத்தேவைகளும் கிடைக்கவில்லை என்றாலும் அதிக மன அழுத்தம் இல்லாமல் இருந்தார்கள். இந்த கலாச்சார வாழ்க்கையில் சமுதாயத்தில் மனிதர்களுக்கு மதிப்பு கொடுத்தோம்.

ஆனால், இன்றைய மாயத்தோற்றம் நிறைந்த இந்த நாகரிக வாழ்க்கையில் வாழ்ந்து நமது மன அழுத்தத்தை அதிகப் படுத்துகின்றோம். நாகரீக வாழ்க்கை என்ற போர்வையில் வாழ்ந்து கொண்டு பிறர் நம்மை குறைவாக நினைத்து விடக்கூடாது என்று நமையே நாம் வருத்திக் கொண்டு விரக்த்தியின் உச்சிக்கே சென்று பரிதவித்து கொண்டு இருக்கின்றோம். அடுத்தவர்களை மேலோட்டமாக பார்த்து இவர்கள் நன்றாக இருக்கின்றார்களே என்று நினைத்து மனதைக் கசக்குகிறோம் , அவர்களும் நம்மை போல் நாகரிக வாழ்க்கை என்ற போர்வையில் மாட்டி கொண்டு தவிகின்றார்கள் என்று புரிந்து கொள்ளாமல். மனித வாழ்க்கை இன்று மன அழுத்தம் நிறைந்ததாகவும், மன நிறைவற்றவதாகவும் இருக்கிறது, என்பதற்கு நமுடையே இருக்கும் போட்டிகளும் , பொறாமைகளுமே , தற்கொலைகளும், விவாகரத்துகளும், வெறுப்பும்,இரவில் தூக்கம் இல்லாமையும் இதற்க்கு உதாரணமாக இருக்கின்றது.
மன அழுத்தத்தில் இருந்தது விடு பட மக்கள் கேளிக்கை விடுதிகளிலும் , மதுபானக் கூடத்திலும் பணத்தை விரயம் செய்து சிற்றின்பங்களைத் தேடி அலைந்து வாழ்க்கையை வீணாக்குன்றார்கள். இந்த நாகரிக வாழ்க்கையில் மனிதர்களை நம்புவதை விடப் பணத்தையே பெரிதாக நம்புகிறார்கள்.

இந்த நாகரீக வாழ்கையில் நாம் உண்மையான உணர்வுகளைப் புரியாமல் போலியாக மாறுகின்றோம். இதன் காரணமாகத்தான் போலிச் சாமியார்களும் , போலி ஆன்மிகவாத்திகளும் உருவாகி நாட்டைச் சீரழிக்கின்றார்கள். பிற நாட்டவர்களும் வியந்து பாராட்டும் நம்முடையக் நாட்டு கலாச்சாரத்தை நாம் மறந்து , நுகர்வுக் கலாச்சாரத்தால் நம்முடைய தனித்தன்மையை இழந்தது வாழ்வையும் இழந்து கொண்டு இருக்கின்றோம்.

திரை கடல் ஓடியும் திரவியம் தேடிவிடலாம் எங்கே சென்று உறவுகளைத் தேடுவது?, எங்கே சென்று அன்பைத் தேடுவது?, எங்கே சென்று மன நிமதியைத் தேடுவது?, பணம் என்பது நமது வாழ்கையில் நம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு அங்கமாகவே இருக்க வேண்டும். நம்முடைய மன அழுத்தத்தைக் குறைக்க நம்முடைய போலியான நாகரிக வாழ்கையை உதறிவிட்டு, குடும்பத்துடன் , உறவுகளுடன் , நண்பர்களுடன் நம்முடைய குறைவை , நிறைவை , துயவுர்களைப் பகிர்ந்து கொள்வதே இதற்குத் தீர்வு!

Wednesday, August 4, 2010

ஒன்றுமே புரியவில்லை!


கருவில் இருக்கும் குழந்தை
கிழித்து தாயுடன் அழிக்கப்படுகிறது
பள்ளிச் சிறுவர்கள் கூண்டோடு
பலியாகிறார்கள் அணுகுண்டு வீசப்பட்டு

கன்னிப் பெண்களின் கற்பு
கயவர்களால் மிருகத்தனமாய்க் கலைக்கப்படுகிறது
பாமரமக்கள் முள்வேலிக்குள் பசியால்
பரிதவிக்கும் அழுகை குரல்

சிறையில் கொடூரமாய் போராளிகள்
சித்திரவதை செய்து கொல்லப்படுவது
இளையோரக்ளின் கண்களை இறுக்கிக்கட்டி
நிர்வாணமாய் சுடப்பட்டு மரணம்

இந்தச் சாவுகளின் கொடுரத்தை
ரசித்து எக்காளமாய் சிரிக்கிறது
அமைதியையும் அன்பையும் உலகுக்குப்
போதித்த புத்தனின் தேசம்

இவை அனைத்தும் நல்லது
என்று கைதட்டி சிரிக்கிறது
அகிமசையும் அறவழியயும் உலகுக்குக்
கொடுத்த காந்தி தேசம்

இதற்கு ஆதரவாய் நம்மிடையே
சில ஓநாய்கள் ஓலமிடுகின்றன
இதை ஆதாயமாய் வைத்து
ஓட்டுக்காக சில நரிகள் ஊளையிடுகின்றன

கொடுமைகளை யாரிடம் முறையிட
யார் மனிதநேயத்துடன் உண்மையாக
உதவிட செயல்படுகிறார்கள் என்று
ஒன்றுமே புரியவில்லை!