Monday, November 23, 2009

வழியைத் தாங்கியவர்களால் தான் வளமுடன் வாழ முடியும்.



ஒரு சிற்பி ஒரு மலையில் நடந்து செல்லும் பொழுது , ஒரு கல்லைப் பார்க்கின்றான் அது சிலை செய்வதற்கு ஏற்ற கல்லாக இருக்கிறது , உடனே அந்த கல்லிடம், சிற்பி கேட்கின்றான் நான் உன்னைச் சிலையாக செதுக்கட்டும என்று , அதற்கு அந்தக் கல் சொல்கிறது , நீ என்னைச் செதுக்கும் பொது உளி என் மேல் படும் அது எனக்கு வலிக்கும் வேண்டாம் போ என்றது , உடனே சிற்பி அருகில் இருந்த கல்லிடம் கேட்கின்றான் அது சிலை செதுக்குவதற்கு அவ்வுளவு உகந்த கல் இல்லை என்றாலும் கேட்கின்றான் , அது உடனே சமதித்தது , சிற்பி அந்தக் கல்லை அழகான சிலையாக வடிவமைக்கின்றான். அந்த வழியாக செல்பவர்கள் அதை வழிபடத் தொடங்குகிறார்கள், அப்பொழுது மக்கள் தேங்காய் உடைத்து வழிபட கல்லைத் தேடுகிறார்கள், அப்பொழுது முதலில் சிற்பியிடம் என்னைச் சிலையாக செதுக்காதே என்ற கல்லைப் பார்க்கிறார்கள் அதைத் தேங்காய் உடைக்க பயன் படுத்துகிறார்கள், ஒரு நாள் வலியை தாங்க மறுத்த கல் இப்பொழுது வாழ்க்கை முழுவதும் அடிபட்டுக் கொண்டு இருக்கிறது.




கடுமையாக உழைப்பவர்களால் கூட சில நேரங்களில் மகிழ்ச்சியாக வாழ இயலவில்லை ,
அவர்களும் சலித்துத் கொள்ளுகிறார்கள் என்ன கஷ்டப்பட்டு உழைத்து என்ன பயன் என்று.
நாம் சில இடங்களில் எடுக்கின்ற தவறான முடிவுகளால் வாழ்க்கை முழுவதும் அடி வாங்கி கொண்டு இருக்கின்றோம். அப்போதைக்குக் கிடைக்கின்ற சிறிய மகிழ்ச்சிக்காக , பின்னால் கிடைக்க போகின்ற பெரிய மகிழ்ச்சியான நிகழ்வுகளை இழக்கின்றோம்.

அடிப்பவர்களுக்கு வலி தெரியாது , அடி வாங்குபவர்களுக்குதான் வலியின் துயரம் தெரியும். வலி என்பது நம்மை ஒருவர் அடித்தால் ஏற்படுவது மட்டும் அல்ல. நாம் உழைக்கும் உழைப்பும் ஒரு வலிதான், வாழ்க்கையில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நாம் கடுமையாக உழைத்து இருந்தால் நாம் ஒரு வளமான இடத்திற்குச் சென்று விடலாம். வரும் பொழுது பார்த்து கொள்ளலாம் என்றால் நாம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியேதான் இருப்போம்.நாம் கடினப்பட்டு உழைக்கின்ற உழைப்பு நம்மைச் செதுக்கின்றது, நாம் நம்மை செதுக்கும் போது பக்குவம் அடைகின்றோம். அந்த பக்குவம்தான் எப்படி பட்ட மனிதருக்கும் வாழ்வின் அனுபவத்தைக் கற்றுக் கொடுக்கிறது.

நல்ல எண்ணத்துடன் கடுமையாக வலியைத் தாங்கி நல்ல செயல்களுக்காக முயற்சி செய்வோம். அடுத்தவர்களின் குறைகளையே பார்த்துக் கொண்டு , அவர்களை விட நாம் நன்றாக இருக்கின்றோம் என்று நாமே நம்மைப் பற்றிப் பெருமையாக பேசாமல் , அடுத்த படியான வெற்றிக்கு முயற்சிப்போம் , நமது வாழ்க்கையை வலிமையான வளமாக மாற்றுவோம்.

Friday, November 6, 2009

எது நமது பலவீனம் ?

" பிளவுப் பட்டு கிடப்பதே தமிழனின் பெரிய பலவீனம் ". நாம் தமிழர்கள் என்றாலும் பல்வேறு வகையான முறைகளில் வேறுபட்டு, சிதறிக் கிடக்கின்றோம்.

அறிவியல் பூர்வமாக அணுக்கள் பிளவு படும் பொழுது சக்தி வெளிப்பட்டு மின்சாரமாக அல்லது வேறு வினையாக வெளிப்படுகிறது. அவை பிளவுபட்ட பிறகு செயல் இழந்து மறு உபயோகம் இல்லாமல் போகின்றது அது போலதான் நமது சமுதாயத்திலும் நடக்கின்றது.

ஒரு குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் , நண்பர்கள் , கணவன் மனைவி மற்றும் உறவினர்களிடம் பிளவு ஏற்படும்பொழுது மிகவும் சண்டையும் பிரச்சனையாகவும் இருக்கும் பிரிந்த பிறவு நாம் வலுவிழந்து போகிறோம்.

நாம் தமிழர்கள் என்ற ஓர் இனமாக இருந்தாலும் நம்மால் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப் பட்டவர்களும் , அல்லது நாம் வழி காட்டியாக நினைத்து கொண்டு இருப்பவர்களும் நம்மை சரியான முறையில் பிரித்து வைத்திருக்கிறார்கள் நாமும் சிறு மனிதாபிமானம் இல்லாமல் அதைப் பின்பற்றி யாருக்கும் சரியான ஒத்துழைப்பு கொடுக்காமல் நம்மை நாமே பலவீனப் படுத்தி கொண்டு இருக்கின்றோம்.

நாம் எவ்வாறெல்லாம் பிரிக்கப் பட்டு இருக்கிறோம். முதலில் சாதிகளாக , சாதிக்கொரு தெரு , கோவில் என்றும் , அந்த சாதியில் பிரபலமான ஒருவர் அல்லது பணக்காரராக இருந்தால் அவர் எவ்வுளவு மோசமான அல்லது மனிதாபிமானத்திற்கு எதிரானவராக இருந்தாலும் அவரை தனது சாதியின் தலைவராக ஏற்றுக் கொண்டு நமக்கு ஒரு அங்கிகாரத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். அப்படியே நமக்கு ஒரு நல்ல தலைவர் கிடைத்தாலும் அவரைச் சாதி முத்திரை குத்தி புறம் நாம் தள்ளுகிறோம்.

மேலும் அரசியல் கட்சி அடிப்படையில், சினமா நடிகர்களின் ரசிகர் மன்றம் அடிப்படையில், ஏழை பணக்காரன் என்ற அடிப்படையில், தொழில் அடிப்படையில், மதம் அடிப்படையில், படித்தவன் படிக்காதவன் என்ற அடிப்படையில் , எவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் மற்றும் எவன் வலிமையானவன் என்ற அடிப்படையில்( இதனால் நாம் ஒரு நாடு மற்றும் இனத்தையே இழந்து இருக்கின்றோம்) . நாம் பிளவுப் பட்டுக் கொண்டு இருக்கிறோம்.

இப்படி பல்வேறு விதங்களில் சிதைந்து கிடக்கும் என் இனமே எப்பொழுது சிந்திப்பாய்?-ஒரு மனிதனாக. எப்பொழுது ஒன்று சேருவாய்? நமது பலத்தை நிரூபிக்க. ஒருநாள் எல்லா விதமான வேலைகளையும் , சுய நலங்களையும் , வறட்டுக் கவுரவத்தையும், தேவை இல்லாத தற் புகழ்ச்சி, வீணான வெளிவேடங்களையும் விட்டுவிட்டு ஒரு மனித நேயத்துடன் சிந்திப்போம் , ஒன்று படுவோம் , பலத்தை நிருபிப்போம் நமது இலட்சியத்தை அடைவோம்.

Wednesday, November 4, 2009

ஷேர் ஆட்டோ

ஒரு டிக்கெட்டுக்காக
பல விக்கெட்டுகளை வீழ்த்துவது!

Wednesday, October 28, 2009

நம்முடைய உறவுகள் எப்படி இருக்கின்றன?


முந்தைய காலத்தில் உடைந்த வீடுகளிலும் , ஓலைக் குடிசையிலும் வாழ்ந்தவர்களின் , குடும்ப உறவுகளும் , கணவன் மனைவி உறவுகளும் உடையாமலும் , மிகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது. ஆனால் இன்று பங்களாவிலும் , பெரிய வீடுகளில் வாழுபவர்களின் எல்லாவிதமான உறவுகளும் உடைந்தும் , சிதறியும் கிடக்கின்றன.

உறவு என்றால் என்ன? அதை எப்படி புரிந்து கொண்டால் உறவுகள்ப் பிளவு படாமல் பார்த்துக் கொள்ளலாம். உறவு என்பது நம் தாய் , தந்தை , தந்தையின் உடன் பிறந்தவர்கள் அல்லது தாயின் உடன் பிறந்தவர்கள் மட்டும் அல்ல. நட்பும் ஓர் உறவுதான் , நாம் வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்துத் தரப்பினரும் நமக்கு மனிதன் என்ற உறவுதான்.

உறவு ஏன் உடைகிறது? அதிகம் கல்வி அறிவு இல்லாத காலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் எப்படி ஒரே கூட்டுக் குடும்பமாக பல ஆண்டுகாலம் வாழ்ந்தார்கள், அவர்களுக்கு அந்த உறவின் அறிவைச் சொல்லிக் கொடுத்தது யார். அவர்களை அழைத்து வந்து நாம் இந்த உறவு முறையை பற்றி கேட்டால், நாம் இவன் படிக்காதவன் இவனுக்கு என்ன தெரியும் என்று சொல்லிவிடுவோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் ஒரு வீட்டில் இருந்தாலும் தனி , தனி அறைகளில்தான் தீவு போல வாழ்ந்து வருகின்றோம். ஒருவேளை நமது உறவுகளின் பலம் இல்லாமல் போனதிற்கு நாம் கல்வி கற்றது காரணமாக இருக்குமோ அல்லது மிகவும் முற்போக்குத்தனமாக சிந்திப்பது காரணமாக இருக்குமோ?.

உறவுகளை எப்படி பலப்படுத்தலாம்? உறவுகள் நம்மை எப்படி மகிழ்ச்சியாக வாழ வைப்பார்கள் அல்லது எப்படி நாம் அவர்களாள் பயனடையப் போகிறோம் என்பதை விட நாம் நம்முடைய உறவுகளை எப்படி மகிழ்ச்சியாக வாழ வைக்கபோகிறோம் அல்லது நம்மால் அவர்கள் எப்படி பயனடைய போகிறார்கள் என்ற உண்மையான உணர்வுடன் உறவைப் போற்றி வளர்த்தால் நம்முடைய உறவுகள் ஆழமாகவும் நீண்ட காலமும் இருக்கும். நம் உறவுகளிடையே உள்ள மனக் கசப்புகளை மறப்போம் , வீணான தலைக்கனங்களைக் கைவிடுவோம். உறவுகளை போற்றுவோம் மற்றும் நம்முடைய உறவுகளுக்கு உரமிடுவோம், பழைய உறவுகளைப் புதுமைப் படுத்துவோம் . உறவுகளுடன் மகிழ்ச்சியாக இருப்போம். உறவுகளைப் போற்றுவோம்.

Tuesday, July 21, 2009

இயற்கையின் நட்பு




நண்பர்களோடு இயற்கையைக் காண,
நட்பாகச் செல்ல விரும்புகிறோம்.



எந்த நண்பர்களோடு சென்றாலும்
இயற்கை நம்மை நட்பாக ஏற்றுக் கொள்கிறது.

மலையில் தவழ்ந்து வரும் மேகம் ,
அணைக்கும் அன்னையாகவும் .

மெய் சிலிர்க்க வைக்கும் அருவி
தந்தையின் அறிவுரையாகவும்





துள்ளிக் குதிக்கும் வன விலங்குகள் ,
செல்லக் குழந்தையாகவும்



நம்மை ஆனந்தப் படுத்தும்
ஒரு அரணாகவும் இருந்து
ஓர் குடும்ப பாசத்தைக் கொடுக்கிறது
இயற்கை அன்னையைப் போற்றுவோம்.


Friday, July 3, 2009

யார் நினைப்பது நடக்கிறது?

யார் நினைப்பது நடக்கிறது இவ்வுலகில்-
நாம் நினைத்தது நடந்து விட?

கடவுள் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - உலகில்
எங்கும் அமைதியும் சாந்தமும் இருக்கும்.

மனிதன் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்-அவன்
மகிழ்ச்சியாக இருக்கும் -போது
பூமி பொன்னாகவும்
கோபமாக இருக்கும் -போது
பூமி நெருப்பாகவும் மாறும்.

நல்ல தலைவர்கள் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - மக்கள்
லட்சியத்துடனும் ,கோட்பாட்டுடனும் இருப்பார்கள்.

அரசியல்வாதிகள் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - நாடெங்கும்
வீதியெங்கும் பணமழை பெய்யும்.

எதற்காக இத்தனை வீராப்புகள்?
எதற்காக இத்தனை போராட்டங்கள்?
எதற்காக இத்தனை சண்டைச் சச்சரவுகள்?
மனிதனின் இந்த குருகிய வாழ்க்கை பயணத்தில்.

யாரேனும் ஒருவர் நினைப்பது நடந்துவிட்டால்
இந்த பூமியில் ஒரு கட்டுப்பாடும் - மக்களின்
வாழ்க்கையில் ஒரு சுவராசியமும்
இல்லாமல் போய் விடுமோ?

உலகமே நம்பிருக்கும்
கடவுள் நினைப்பதே - நடக்காவிடில்
நாம் நினைப்பது எப்படி நடக்கப்போகிறது?

Monday, March 23, 2009

யார் குற்றவாளி?

பொதுவாக நமக்கு ஓர் எண்ணம் சிறையில் இருப்பவர்கள் அல்லது சிறை சென்றுவந்தவர்கள் எல்லோரும் தவறானவர்கள் , குற்றவாளிகள் என்று நாம் நினைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்தால் சற்று விலகி நிற்கின்றோம். நமக்கு அந்த எண்ணம் வரக்காரணம் குற்றவாளிகளையும் , நீதிக்காக அல்லது உரிமைக்காகப் போராடுபவர்களையும் ஒரே சிறையில் வைத்து இருப்பதால்.

நாம் நம்மை நினைத்துப் பெருமைப் பட்டுக் கொள்கிறோம் நான் காவல் நிலையம் சென்றதில்லை, சிறைச்சாலை சென்றதில்லை என்று, அது நம்முடைய தவறான எண்ணம் உண்மையிலே நாம் தான் இந்த சமுதாயத்தில் பெரிய குற்றவாளிகள்.

நாம் கொஞ்சம் உணர்வு உள்ளவர்களாக அல்லது சமுதாயத்தில் தவறுகளைத் தட்டிக் கேட்க்கும் திராணி உள்ளவர்களாக இருந்து இருந்து இருந்தால் நாம் ஒருமுறையாவது நீதிமன்றம் , காவல் நிலையம் அல்லது சிறைச்சாலை சென்று வந்து இருப்போம்.

இப்படி இருக்கும் பட்சத்தில் நாம் அனைவரும் சமரசத்துக்கு உட்பட்டவர்கள். நாம் இந்த பிரச்சனை நம்மை விட்டு விலகிப் போனால் போதும் வேறு யாரவது பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்து நம் கண் முன்னால் நடக்கும் தவறுகளையும் , சமுக விரோதச் செயல்களையும் கண்டும் காணமல் விட்டு விடுகிறோம். நமக்கு ஏன் வீண் வம்பு என்று ஒதுங்கிச் செல்கிறோம். அல்லது அந்த பிரச்சனைக்குரியவர்களுடன் சமரசத்துக்குச் செல்கின்றோம். இதற்கு என்ன காரணம் , பொதுவாக சமுதாய பிரச்சனைகளுக்கு நாம் செல்லும் பொது குடும்பத்தினரின் ஆதரவு கிடைப்பதில்லை, சமுதாயம் நமக்கு ஒத்துழைப்பதில்லை எனவே நாம் பொதுவான பிரச்சனைகளில் இருந்து விலகி நின்று நமக்கு வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து நமது மனதைத் தேற்றி கொள்கின்றோம்.

ஆனால் நம்முடைய உறவினர்களுடைய அல்லது உடன்பிறந்தவர்களின் சொத்துகளை அவர்களை உரிமைகளை அபகரிப்பதற்கு நாம் எங்கு செல்ல வேண்டுமானாலும் தயாராக இருக்கின்றோம். இதில் இருக்கும் முனைப்பை எதாவது ஒரு நல்ல செயலில் காட்டியிருத்தால் நாம் இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல இடத்தில் இருந்திருப்போம்.

ஆனால் நாம் ஒன்றை மறந்து விடுகிறோம் , சமுதாயத்தில் நம்முடைய வழிகாட்டிகளாகவும், நாம் மிகவும் போற்றும் தலைவர்கள் , நம்மை ஆளுகின்ற தலைவர்கள் அனைவரும் மக்களுக்காகவும் , உரிமைகளுக்காகவும் பல முறை சிறை சென்று வந்தவர்கள்தான். இன்று உலகம் பின் பற்றும் போராளிகள் அனைவருக்கும் முதலில் அவர்களின் முயற்சிக்கும், அவர்களின் உறுதியான செயல்பாடுகளுக்கும் போதிய ஆதரவு இல்லாமல் இருந்து இருக்கும் அவர்கள் சளைக்காமல் திரும்பத் திரும்ப போராடித்தான் இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறார்கள்.

எனவே நாம் சமுதாயத்தில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் நம் கண் முன்னால் நடக்கும் தவறுகளுக்கு ஆதரவு தராமலும் , நாமும் தவறுகள் செய்யாமலும் தவறுகளைத் தட்டிக் கேட்கும் போராட்ட குணம் உள்ளவர்களாக இருப்போம். எப்பொழுதும் தவறான சமரசத்துக்கு உட்படாமல் இருப்போம். நேர்மயையான , வலிமையான சமுதாயத்தைப் படைப்போம்

Saturday, February 14, 2009

காதல் ஒரு சாயம்.

மனம் உன்னைத் தினமும்
எண்ணம் எவ்வண்ணமும் - உன்னை
நோக்கி இருப்பதால் மறக்கின்றேன்
என்னுடைய அன்றாட பணிகளை -நீயும்
என்னைபோல் இருப்பாய் என்று

நீ எப்படி நினைக்கிறாய்
நீ என்னிடம் என்ன மறைக்கிறாய்- உள்ளம்
கேட்கிறது உதடு தடுக்கிறது
சந்தேகம் வலுக்கிறது பிரிக்கிறது -காதலை
உடைக்கிறது மனதை

எனக்கு ஒரு மரபு
உனக்கு ஒரு மரபு - எனக்கு
ஆசை உண்டு ஆனால்
உனக்கு எந்த ஆசையும் - இருக்கக்
கூடாது என்னைத் தவிர

நீ ஒரு பொம்மை
என்னைப் பார்த்து சிரிக்க வேண்டும்
கண்ணை மூட வேண்டும்
மற்றவர்களைப் பார்க்கும் பொழுது

நான் சுயநலவாதி
நான் சாதாரன மனிதன் - எனக்கு
என் மகிழ்ச்சி தான்
என் மனநிறைவு - நீ
வேண்டும் எனக்கு இந்த
வீணாய்ப் போன உலகத்தை- மறக்க
என் சுகத்தைக் கூட்ட.

ஏன் காதலிக்க வேண்டும்
உன்னுடன் சுற்றிய நேரத்தை -சரியாக
பயன் படுத்திருந்தால் நிலவின்
பாதி தொலைவைக் கடந்திருப்பேன் -உலகை
இரண்டு தடவை சுற்றியிருப்பேன்

பெண்ணுடன் தொலைபேசியில் பேசிய நேரத்தில்
சமூகத்துக்காகப் பேசியிருந்தால் -மக்கள்
பயனடைந்திருப்பார்கள் அந்த தொலைபேசி
தொகையில் ஒரு உடன்பிறப்பிற்கு -முழுமையான
கல்வி கொடுத்திருந்தக்கலாம்.

என்று போராளிகள் சொல்லும்
பொழுது போங்கடா என்று -கேலி
செய்தேன் அவர்கள் எனக்கு
போராடி பெற்று கொடுத்த - இந்த
பாது காப்பான இடத்தில் இருந்து.

பிறகு தெரிந்தது காதல்
சாயம் பூசப்பட்ட துணி -ஒரு
சலவையில் தெரிந்து விடும்
உண்மையான வண்ணம்