Showing posts with label டொமினிக் ராஜா. Show all posts
Showing posts with label டொமினிக் ராஜா. Show all posts

Monday, November 23, 2009

வழியைத் தாங்கியவர்களால் தான் வளமுடன் வாழ முடியும்.



ஒரு சிற்பி ஒரு மலையில் நடந்து செல்லும் பொழுது , ஒரு கல்லைப் பார்க்கின்றான் அது சிலை செய்வதற்கு ஏற்ற கல்லாக இருக்கிறது , உடனே அந்த கல்லிடம், சிற்பி கேட்கின்றான் நான் உன்னைச் சிலையாக செதுக்கட்டும என்று , அதற்கு அந்தக் கல் சொல்கிறது , நீ என்னைச் செதுக்கும் பொது உளி என் மேல் படும் அது எனக்கு வலிக்கும் வேண்டாம் போ என்றது , உடனே சிற்பி அருகில் இருந்த கல்லிடம் கேட்கின்றான் அது சிலை செதுக்குவதற்கு அவ்வுளவு உகந்த கல் இல்லை என்றாலும் கேட்கின்றான் , அது உடனே சமதித்தது , சிற்பி அந்தக் கல்லை அழகான சிலையாக வடிவமைக்கின்றான். அந்த வழியாக செல்பவர்கள் அதை வழிபடத் தொடங்குகிறார்கள், அப்பொழுது மக்கள் தேங்காய் உடைத்து வழிபட கல்லைத் தேடுகிறார்கள், அப்பொழுது முதலில் சிற்பியிடம் என்னைச் சிலையாக செதுக்காதே என்ற கல்லைப் பார்க்கிறார்கள் அதைத் தேங்காய் உடைக்க பயன் படுத்துகிறார்கள், ஒரு நாள் வலியை தாங்க மறுத்த கல் இப்பொழுது வாழ்க்கை முழுவதும் அடிபட்டுக் கொண்டு இருக்கிறது.




கடுமையாக உழைப்பவர்களால் கூட சில நேரங்களில் மகிழ்ச்சியாக வாழ இயலவில்லை ,
அவர்களும் சலித்துத் கொள்ளுகிறார்கள் என்ன கஷ்டப்பட்டு உழைத்து என்ன பயன் என்று.
நாம் சில இடங்களில் எடுக்கின்ற தவறான முடிவுகளால் வாழ்க்கை முழுவதும் அடி வாங்கி கொண்டு இருக்கின்றோம். அப்போதைக்குக் கிடைக்கின்ற சிறிய மகிழ்ச்சிக்காக , பின்னால் கிடைக்க போகின்ற பெரிய மகிழ்ச்சியான நிகழ்வுகளை இழக்கின்றோம்.

அடிப்பவர்களுக்கு வலி தெரியாது , அடி வாங்குபவர்களுக்குதான் வலியின் துயரம் தெரியும். வலி என்பது நம்மை ஒருவர் அடித்தால் ஏற்படுவது மட்டும் அல்ல. நாம் உழைக்கும் உழைப்பும் ஒரு வலிதான், வாழ்க்கையில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நாம் கடுமையாக உழைத்து இருந்தால் நாம் ஒரு வளமான இடத்திற்குச் சென்று விடலாம். வரும் பொழுது பார்த்து கொள்ளலாம் என்றால் நாம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியேதான் இருப்போம்.நாம் கடினப்பட்டு உழைக்கின்ற உழைப்பு நம்மைச் செதுக்கின்றது, நாம் நம்மை செதுக்கும் போது பக்குவம் அடைகின்றோம். அந்த பக்குவம்தான் எப்படி பட்ட மனிதருக்கும் வாழ்வின் அனுபவத்தைக் கற்றுக் கொடுக்கிறது.

நல்ல எண்ணத்துடன் கடுமையாக வலியைத் தாங்கி நல்ல செயல்களுக்காக முயற்சி செய்வோம். அடுத்தவர்களின் குறைகளையே பார்த்துக் கொண்டு , அவர்களை விட நாம் நன்றாக இருக்கின்றோம் என்று நாமே நம்மைப் பற்றிப் பெருமையாக பேசாமல் , அடுத்த படியான வெற்றிக்கு முயற்சிப்போம் , நமது வாழ்க்கையை வலிமையான வளமாக மாற்றுவோம்.

Monday, March 23, 2009

யார் குற்றவாளி?

பொதுவாக நமக்கு ஓர் எண்ணம் சிறையில் இருப்பவர்கள் அல்லது சிறை சென்றுவந்தவர்கள் எல்லோரும் தவறானவர்கள் , குற்றவாளிகள் என்று நாம் நினைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்தால் சற்று விலகி நிற்கின்றோம். நமக்கு அந்த எண்ணம் வரக்காரணம் குற்றவாளிகளையும் , நீதிக்காக அல்லது உரிமைக்காகப் போராடுபவர்களையும் ஒரே சிறையில் வைத்து இருப்பதால்.

நாம் நம்மை நினைத்துப் பெருமைப் பட்டுக் கொள்கிறோம் நான் காவல் நிலையம் சென்றதில்லை, சிறைச்சாலை சென்றதில்லை என்று, அது நம்முடைய தவறான எண்ணம் உண்மையிலே நாம் தான் இந்த சமுதாயத்தில் பெரிய குற்றவாளிகள்.

நாம் கொஞ்சம் உணர்வு உள்ளவர்களாக அல்லது சமுதாயத்தில் தவறுகளைத் தட்டிக் கேட்க்கும் திராணி உள்ளவர்களாக இருந்து இருந்து இருந்தால் நாம் ஒருமுறையாவது நீதிமன்றம் , காவல் நிலையம் அல்லது சிறைச்சாலை சென்று வந்து இருப்போம்.

இப்படி இருக்கும் பட்சத்தில் நாம் அனைவரும் சமரசத்துக்கு உட்பட்டவர்கள். நாம் இந்த பிரச்சனை நம்மை விட்டு விலகிப் போனால் போதும் வேறு யாரவது பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்து நம் கண் முன்னால் நடக்கும் தவறுகளையும் , சமுக விரோதச் செயல்களையும் கண்டும் காணமல் விட்டு விடுகிறோம். நமக்கு ஏன் வீண் வம்பு என்று ஒதுங்கிச் செல்கிறோம். அல்லது அந்த பிரச்சனைக்குரியவர்களுடன் சமரசத்துக்குச் செல்கின்றோம். இதற்கு என்ன காரணம் , பொதுவாக சமுதாய பிரச்சனைகளுக்கு நாம் செல்லும் பொது குடும்பத்தினரின் ஆதரவு கிடைப்பதில்லை, சமுதாயம் நமக்கு ஒத்துழைப்பதில்லை எனவே நாம் பொதுவான பிரச்சனைகளில் இருந்து விலகி நின்று நமக்கு வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து நமது மனதைத் தேற்றி கொள்கின்றோம்.

ஆனால் நம்முடைய உறவினர்களுடைய அல்லது உடன்பிறந்தவர்களின் சொத்துகளை அவர்களை உரிமைகளை அபகரிப்பதற்கு நாம் எங்கு செல்ல வேண்டுமானாலும் தயாராக இருக்கின்றோம். இதில் இருக்கும் முனைப்பை எதாவது ஒரு நல்ல செயலில் காட்டியிருத்தால் நாம் இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல இடத்தில் இருந்திருப்போம்.

ஆனால் நாம் ஒன்றை மறந்து விடுகிறோம் , சமுதாயத்தில் நம்முடைய வழிகாட்டிகளாகவும், நாம் மிகவும் போற்றும் தலைவர்கள் , நம்மை ஆளுகின்ற தலைவர்கள் அனைவரும் மக்களுக்காகவும் , உரிமைகளுக்காகவும் பல முறை சிறை சென்று வந்தவர்கள்தான். இன்று உலகம் பின் பற்றும் போராளிகள் அனைவருக்கும் முதலில் அவர்களின் முயற்சிக்கும், அவர்களின் உறுதியான செயல்பாடுகளுக்கும் போதிய ஆதரவு இல்லாமல் இருந்து இருக்கும் அவர்கள் சளைக்காமல் திரும்பத் திரும்ப போராடித்தான் இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறார்கள்.

எனவே நாம் சமுதாயத்தில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் நம் கண் முன்னால் நடக்கும் தவறுகளுக்கு ஆதரவு தராமலும் , நாமும் தவறுகள் செய்யாமலும் தவறுகளைத் தட்டிக் கேட்கும் போராட்ட குணம் உள்ளவர்களாக இருப்போம். எப்பொழுதும் தவறான சமரசத்துக்கு உட்படாமல் இருப்போம். நேர்மயையான , வலிமையான சமுதாயத்தைப் படைப்போம்