Wednesday, September 29, 2010

மறந்து போன மனித நேயம்




மனிதன் என்ற படைப்பு இயற்கையின் புனிதமான படைப்பு ஆகும். இயற்கையின் ஒவ்வொரு படைப்பும் தனித்தனி

குணாதிசயங்களைக்கொண்டுள்ளது. மனிதனுக்கு இயற்கையின் மற்ற எல்லாப்படைப்புகளையும் விட அதிகமான அறிவும் தனித்தன்மையும் கொடுக்கப்பட்டுள்ளது. மனித படைப்புக்குக்கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகள் அதிகம் . இயற்கையின் படைப்புகளைப்பாதுகாப்பது மற்றும் மற்ற மனிதர்களிடமும் தன்னைப்போல் அவனும் ஒருமனிதன் அவர்களுக்கும் நம்மைப்போல் உணர்வுகளும் பொறுப்புகளும் உள்ளது என்று உணர்ந்து நடப்பது.

மனித நேயம் என்பது என்ன என்றால் மனிதத்தன்மையுடன் நடந்து கொள்வது. அப்படி என்ன தனித்தன்மை மனிதனுக்கு. மனிதனாய் வாழ்வதற்குச்சில கடமைகளையும், சில கட்டுப்பாடுகளையும் இயற்கை வழங்கியுள்ளது . அது நம் நலவாழ்வுக்காக தந்த விதி முறைகள். நம் ஆசைகளை, தேவைகளை அடைவதில் நேர்மையான வழிமுறைகளையும், மற்றவர்களைப்பாதிக்காத வண்ணம் நம்முடைய தேவைகளை பூர்த்திசெய்வது . இப்படி ஆராய்ந்து செயல்படுவதில்தான் நமக்கும் மிருகங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தெரியும். கடமையையும் மீறி மனம் போன போக்கில் நடக்கும் போது , தவறான முறையினால் நாம் நினைத்ததை அடையவேண்டியது உள்ளது. இந்த நேரத்தில் நாமும் கேட்டு மற்றவர்களையும் கெடுப்பதற்கு ஒரு காரணமாக இருக்கின்றோம். இந்தக்கட்டுப்பாட்டை இழந்த சூழ்நிலையில்தான் மனித நேயம் கொஞ்சம் கொஞ்சமாக மறையத்தொடங்குகிறது.

அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்திய நம் முன்னோர்கள் , பெரியோர்கள், ஞானிகள் வாழ்ந்த நம் சமுதாயத்தின் இன்றைய நிலையோ பரிதாபமாக உள்ளது. அரை அடி வாய்க்கால் வரப்பு பிரச்சனைக்காக தன் உடன் பிறப்புகளைக்கொலை செய்வது. இன்றைய நாளிதழ்களை புரட்டினாலே கொலைச்சம்பவங்கள் , நம்பிக்கை துரோகங்கள் , கள்ளத்தொடர்புகள் பற்றிதான் அதிகம் இருக்கின்றன. மனைவியை ஏமாற்றி தவறான தொடர்புகள் மூலம் குடும்பத்தை சீர்குலைப்பது . கணவனால் கைவிடப்படும் இளம்பெண்கள். கணவனின் நம்பிக்கையை மீறும் பெண்கள். சாலையில் விபத்து ஏற்ப்பட்டால் அடிபட்டவர்களுக்கு உதவ மறுக்கும் எண்ணம். பண வெறி , பதவி வெறி , புகழ்ச்சி வெறி, காம வெறி என மனித மனம் கல்லாக மாறி தவறான செயல்களைத்தயக்கம் இன்றிச்செய்கிறது.

மனிதர்கள் எப்படி மனிதத்தன்மையை இழந்து நிற்கின்றார்கள் என்பது புரிகின்றது.மனிதனை மனிதனாக மதிப்பதில்லை. ஒருவரை ஒருவர் நம்பும் சூழ்நிலை இல்லை. அன்பு, பாசம் போன்ற உணர்வுகள் மறக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகின்றன. மனித மனமானது அதிக வருமானம், கட்டுக்கட்டாய்ப் பணம், பேராசை, முறைகேடான உறவுமுறைகள், பதவி மோகம், காமம்,வன்முறை வெறியாட்டங்கள் , தீவிரவாதம் , கேளிக்கை விளையாட்டுகள் என ஒரு ஆடம்பரமான வாழ்க்கையைத் தேடி ஒரு வேட்டை நாயைப்போல அலைகிறது. ஆறறிவு படைத்த மனிதர்கள் உறவுகளை மறந்து, அன்பை மறந்து அரக்கத்தனமான வாழ்க்கைக்கு ஆயத்தமாகி விட்டனர்.பெரியோர்களை மதிக்கும் தன்மை அறவே இல்லை. மனித வாழ்க்கையின் பாதி நேரம் கம்ப்யூட்டர், தொலைக்காட்சி, சினிமா முன்னே கரைந்து போய்க்கொண்டிருக்கிறது.

நாமும் இன்றைய அன்றாட வாழ்வில் மனிதத்தன்மையற்ற செயல்களை நம்மை அறியாமல் செய்து கொண்டு இருக்கின்றோம். நமக்கு அது பழகிவிட்டது. சிறு சிறு உதவிகள் செய்யக்கூட மறுக்கின்றோம். கடமை , கண்ணியம் , கட்டுப்பாட்டை மீறி அடுத்தவர்களுக்கு இடையூறாக இருக்கின்றோம்.
"அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்,
தம்நோய்போல் போற்றாக் கடை''
என்பது வள்ளுவம்.
கல்வியறிவு, செல்வச் செழிப்பு, பட்டம், பதவி ஆகியவை பெருமளவில் ஒருவனுக்குக் கிடைத்திருந்தாலும், அவற்றுடன் மனித நேயம் என்பது அவனிடம் இல்லை என்றால், சேர்ந்துள்ள மற்ற வசதிகளால் அவனுக்கோ அவன் சார்ந்த சமுதாயத்துக்கோ எந்தப் பயனும் இல்லாமற் போய்விடும்!



எனவே நம்முடை சுயலாபத்திற்க்காக மனிதத்தன்மையை இழக்காமல், மனித நேயத்துடன் வாழ்ந்து , மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக , மனித நேயத்துடன் வாழ்ந்து , அன்பும் கருணையும் நிறைந்த புதிய உலகத்தைப்படைப்போம்.

No comments:

Post a Comment