Wednesday, July 28, 2010

ஏமாற்றங்கள்



நம்முடைய வாழ்வில் நாம் அனைவரும் எல்லாச் சூழ்நிலையிலும், எல்லாப் பருவத்திலும் ஏமாற்றங்களை சந்தித்தும் , அந்த நிலையை கடந்தும் வந்திருப்போம். ஏமாற்றத்திற்கு என்று ஒரு வரைமுறையோ அல்லது ஒரு காரணமோ கிடையாது. அது எதாவது ஒரு சூழ்நிலையில் நம்முடைய வாழ்வில் ஒன்றாக கலந்து விடுகிறது. ஆனால் ஒவ்வொரு ஏமாற்றமும் நமக்கு எதாவது ஒரு படிப்பினையைக் கற்றுத் தருகிறது, அது என்ன என்று ஆராய்ந்து பார்த்து அறிந்து கொண்டால் வாழ்வில் சுலபமாக வெற்றி பெறலாம்.

பொதுவாக ஏமாற்றங்கள் மூன்று வகைகளில் நமக்கு ஏற்படுகிறது ஒன்று காலத்தால் மற்றொன்று அடுத்தவர்களால், மற்றொன்று நம் ஆசைகளை மிஞ்சும் போது. நாம் ஒவ்வொரு முறையும் ஏமாற்றங்களைச் சந்திக்கும் போது வாழ்வின் மீது வெறுப்பும் , மனத்துயரமும் மற்றும் தன்நம்பிக்கையும் இழந்து காணப்படுகின்றோம். நாம் சந்திக்கும் ஒவ்வொரு ஏமாற்றமும் நம்முடைய அடுத்த முயற்சிக்குத் தடைக்கல்லாகவே நினைக்கின்றோம். ஆனால், நாம் ஏமாற்றங்களை ஏற்றுக் கொண்டால்தான் நம்முடைய வாழ்வில் ஏற்றம் நிச்சயம் கிடைக்கும்.

காலத்தால் ஏற்படுகிற ஏமாற்றம் நாம் இயற்கையைச் சரியாக பேணிப் பாதுகாக்காததால் ஏற்படுகிறது. இதனால் முழு உலகமுமே பாதிக்கப் படுகிறது. அடுத்தவர்களால் ஏற்படுகிற ஏமாற்றம் நம்முடைய எதிர்பார்ப்புகளால் ஏற்படுகிறது. நாம் அடுத்தவர்களை எதிர்பார்ப்பதால் நாம் தன்நம்பிக்கை இல்லாதவர்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரத்தால் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். எதிர்பார்ப்பு எப்பொழுது அளவுக்கு அதிகமாக ஆகிறதோ அப்பொழுது மனபாதிப்புக்கு உள்ளாகிறோம். நம் ஆசைகளை மிஞ்சும் போது ஏற்ப்படுகிற ஏமாற்றம் நம்முடைய அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையும் நம்முடைய அறியாமையும் வெளிப்படுத்துகிறது. இதனால் நாம் நம்முடைய தன்னம்பிக்கையை இழக்கின்றோம்.

ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் சந்திக்கும் ஏமாற்றமும் நமக்கு ஏதோவொரு மாற்றத்திற்கான தொடக்கமும் ஊக்கமுமாகவே இருக்கிறது. வாழ்வில் ஏமாற்றங்களைச் சந்திக்கும் போது இந்த பாதை நமக்கு சரி இல்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது. எந்த ஒரு வகையான ஏமாற்றமும் நம்மைத் தாக்கும் போது நாம் சோர்வு அடையாமல், துவளாமல் , வீணாக புலம்பாமல் நம் மனதை திடப் படுத்தி நம்முடைய ஆளுமையை வளர்த்துக் கொண்டால் நாமே இவ்வுலகில் மிகச்சிறந்த வெற்றியாளர்.

1 comment: