Monday, September 8, 2008

யாரிடம் கடவுள் ?




கடவுள் என்று ஒருவர் இருக்கின்றாரா? அல்லது இல்லையா? என்ற வாதமும் அப்படி ஒருவர் இருந்தால் யார் உண்மையான கடவுள் என்ற வாதமும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறது. நான் அந்த வாதத்திற்குச் செல்ல விரும்பவில்லை. கடவுள் என்ற ஒருவர் இருந்தால் அவர் யாரிடம் இருப்பார்? அல்லது அவர் எப்படிப் பட்ட மனிதர்களின் மனதில் இருப்பார்? என்று நம் கண் முன்னால் நடக்கும் நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்ததில் கடவுள் யாரிடம் இருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நான் தொடர் வண்டியில் முன்பதிவு செய்யாத பெட்டியில் பயணம் செய்யும் பொழுது நான்கு பேர் இருக்கும் இடத்தில் இருவர் இருந்து கொண்டனர், இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள். சிறுது நேரத்தில் அவர்கள் இருவரும் யாருடைய கடவுள் உண்மையான கடவுள் என்ற வாதத்தைத் தொடங்கினார்கள், இருவரும் தங்களுடைய புனித நூல்களை எடுத்துக் கொண்டு அதனுள் இருக்கும் வாசகங்களை எடுத்துக்கொண்டு வாதிட்டனர், ஒவொருவரும் தங்களுடைய கடவுள் தான் உண்மையான கடவுள் என்று ஒருவர் மற்றொருவரைச் சம்மதிக்க வைக்க மிகவும் பாடு பட்டனர். பயணம் செய்த நாங்கள் எல்லோரும் இவர்கள் , தங்கள் கடவுளர் மீது எவ்வுளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தோம், சிறிது நேரத்தில் ஒருவர் உட்கார இடம் இல்லாத காரணத்தினால் அவர்கள் அருகில் சென்று அமர முயன்றார் அவர்களோ அவருக்கு இடம் தர மறுத்து விட்டனர். பக்கத்தில் இருத்த முதியவர் அவருடைய இருக்கையில் சிறிது இடத்தை அவருக்கு அமரக் கொடுத்தார், அவர்கள் இருவரும் அவர்களுடைய கடவுளைப் பற்றிப் பேசினார்களே தவிர , அவர்கள் மதம் போதிக்கும் ஒரு சிறிய நெறிமுறையக் கூடப் பின்பற்ற அவர்களுக்கு முடியவில்லை ,என்ன தான் அவர்கள் ,அவர்களுடைய கடவுளைப் பற்றிப் பெருமையாக பேசினாலும் , இந்த முதியவர்க்கு இருந்த நல்ல எண்ணம் அவர்களுக்கு இல்லை என்று பார்க்கும் போது இவர்கள் போலிகள் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

இப்படியாக ஒவ்வொரு சிறிய செயல்களைப் பார்க்கும் பொழுது இவர்கள் எதற்க்காக கடவுளை வழிபடுகிறார்கள், என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆலயத்துக்குச் செல்கிறார்கள் நன்றாக , மிக பக்தியாக வழிபடுகிறார்கள் ஆனால் வெளியே வந்தால் , தம்மால் முடிந்த உதவிகளைத் தங்களுடைய சொந்தங்களுக்கு செய்ய மறுக்கின்றார்கள்.மற்ற சாதியினரைக் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கிறார்கள்.தங்களுடைய வழிபாட்டுத் தலங்களுக்குப் பெண்கள் செல்ல அனுமதி மறுக்கிறார்கள் மதத்தைப் போதிக்கின்றார்கள் அவர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்திக்கொண்டு உயர் பதவி அடைவதற்கு மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். அவர்களிடம் சாதிய உணர்வைத் தூண்டிவிடுகிறார்கள். ஒரு சாதரண மனிதர்களுக்கு இருக்கும் நல்ல பண்புகள் கூட இவர்களிடம் இல்லை. ஆலயங்களுக்குள்ளே பதவிகளுக்காக அடித்துக் கொள்கிறார்கள்.

பொதுவாக எல்லா மதத்தின் அடிப்படையான கோட்பாடுகளைப் பார்த்தல் அன்பு,அமைதி , அடக்கம் போன்றவை தான் போதிக்கப்படுகிறது. ஆனால் அவற்றைப் போதிக்கின்றவர்களும் , அவற்றைப் பின்பற்றுபவர்களும் அவர்கள் மதம் போதிக்கின்ற நெறிமுறைகளைப் பின்பற்றுகின்றார்களா என்ற பார்த்தால் அது ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது. இப்பொழுது நம் கண் முன்னால் நடக்கும் அனைத்துத் தீவிரவாத செயல்களும் , வன்முறைச் செயல்களும் மதத்தை முன் வைத்த நடக்கின்றன. இப்படி நடப்பதன் மூலம் அவர்களே அவர்கள் மதத்தின் மீது உள்ள நல்ல எண்ணங்களைக் கெடுத்து விடுகிறார்கள்.

இப்படியான போலி மதவாதிகளும், மதத்தின் நல்ல கொள்கைகளை பின்பற்றாதவர்களும் இருக்கின்ற வரைக்கும் கடவுள் யாரிடம் இருக்க முடியும்?. தங்கள் மதங்களின் மீது பற்று இருக்க வேண்டுமே தவிர , வெறி இருந்தால் அது பிரச்சினைகளைத் தான் தூண்டி விடும்.

1 comment:

  1. கடவுள் என்பவர் வேறு யாரும் இல்லை .......நீங்களும் நானும் தான்....
    நாம் செல்ல வேண்டிய இடத்துக்கு கொண்டு சேர்க்கும் வரை , அந்த ஓட்டுனர் நமக்கு கடவுள் ......அவர் நினைத்தால் நம் வாழ்வை மாற்றலாம் ....அது போல மருத்துவர் ஒரு கடவுள் ......இது போல நிறைய கடவுள்கள் இருக்கிறார்கள் நம்மோடு ........


    மனிதன் என்ற ஒரு இனத்துக்கு எப்படி இத்தனை ஆயிரம் கடவுள்கள் இருக்க முடியும்?

    ReplyDelete