Showing posts with label dominic raja. Show all posts
Showing posts with label dominic raja. Show all posts

Friday, June 3, 2011

மூன்றுக்கு ஒரு சிறப்பு


மூன்றுக்கு ஒரு சிறப்பு உண்டு
இயல், இசை,நாடகம் என தமிழ் -மூன்று
தமிழ் வளர்த்த சங்கங்கள் -மூன்று
பகுத்தறிவு பாசறையில்
பெரியார் , அண்ணா, கலைஞர்
என்று வேந்தர்கள் - மூன்று
இவை அனைத்தும் ஒன்றாய்
கலைஞராய் பிறந்தது ஜூன் - மூன்று

எட்டு எட்டாக எடுத்து வைத்து
என்பத்தி எட்டை எட்டினாய் - நீ
உன் ஓயாத உழைப்பின் வேகம்
குறையவில்லை இன்றும்

தமிழுக்கும் அமுது என்று பெயர் - என்ற
பாவேந்தர் பாரதிதாசனின் வாக்கு
உன் மேடை பேச்சை கேட்ட்டுத்தான்
தமிழும் அமுது என்று அருந்தினோம்

சூரியன் மறைந்து விட்டது - என்று
சிலர் எள்ளி நகையாட - நாங்கள்
புரிந்து கொண்டோம் பூமிதான்
தன்னை மறைத்து கொண்டது
சற்று இளைப்பாற - சூரியன்
எப்பொழுதும் மறையாத ஒன்று

நெருக்கடி என்னும்
நெருப்பாற்றில் நீந்தியவன் -நீ
இப்பொழுது இருக்கிற இறுக்கமான சூழ்நிலை
என்ன செய்து விடும் - உன்னை

ரயிலடியில் உன்மீது பாய்ந்து வந்த
உளியை கண்டு அஞ்சாதவான் -நீ
வெட்டி வாய்பேச்சி வீரர்களின்
வார்த்தை உன்னை என்ன செய்து விடும்?
எதிரிக்கும் தெரியும் உன் ஆற்றல்.

பொதுவாழ்வில் உன்னைப்போல்
ரணங்களும்,அவமானங்களும்
பெற்றவர்கள் எவரும் இல்லை -ஆம்
ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் என்ன புதியதா?

எங்கள் உணர்வுகளுக்கு உரமூட்ட
உன் எழுத்து தேவை - தோல்வியால்
சோர்ந்திருக்கும் எங்களை கதகதபேற்ற
உன் பேச்சு தேவை சிங்கமென கிளம்பி -வா

நீ இருப்பது சிலருக்கு வெறுப்பு
அதுவே எங்களுக்கு சிறப்பு.

Thursday, September 25, 2008

உணர்வான உணர்ச்சி.

உணர்ச்சி என்பது என்ன?. வெளியில் இருந்து ஒன்று நம்மை எதாவது ஒரு விதத்தில் அதாவது தொடுதல் அல்லது நம் மனதைப் பாதிக்கும்படி நடக்கும் செயல் என்பது உணர்ச்சியாகும். உணர்ச்சி என்பது சில நொடிகள் , சில நிமிடங்கள் அல்லது சில மணித்துளிகள் தான் நீடிக்கும்.உணர்ச்சி என்பது உடலில் ஏற்படும் மாற்றம்.

உணர்வு என்பது ஓர் உணர்ச்சியை உள்வாங்கி கொண்டு அதை அறிவுப் பூர்வமாக சிந்தனை செய்து , நாம் கொடுக்கும் வெளிப்பாடு. உணர்வு நம் மனதில் எப்போதும் ஓடும் ஒரு நிகழ்வு. உணர்வு என்பது மனதில் ஏற்ப்படும் மாற்றம்.

உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவை விட, உணர்ந்து எடுக்கும் முடிவே சிறந்தது என்று ஒரு பொன்மொழி உண்டு.

ஒரு மனிதனுக்கு உணர்ச்சி வேண்டும் இல்லை என்றால் அவன் இறந்தவனுக்குச் சமம். ஆனால் அவன் உணர்ச்சியை வெளிப்படுத்தும் விதம் மற்றவர்களை பாதிக்காதவண்ணமும் , அவனைப் பாதிக்காதவண்ணமுமாக இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு நாம் உடனே எடுக்கும் முடிவு பல பின்விளைவுகளை உண்டாக்கும். அது அவர்களுக்கு மட்டும் பிரச்சனை அல்ல அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் சிரமத்தை உண்டாக்கும். நாம் உணர்ச்சிவசப்பட்டு பேசும் பேச்சு , செய்யும் செயல் மற்றும் எடுக்கும் முடிவு நாம் அதை செய்யும் நேரம் சரி என்று தெரியும் .உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவு மிகக்குறுகிய நேரத்தில் முடிந்து விடும். பின்னால் அந்த செயலை நினைத்துப் பார்த்தல் மிக கொடுமையான முடிவாக இருக்கும். இந்த சில மணித்துளிகள் ஏற்ப்படும் உணர்ச்சிகளால் சில நல்ல செயல்களும் நடைபெறும் , பல தவறான செயல்களும் நடைபெறும்.

உணர்வு என்பது மிக மிக முக்கியமான ஒன்று , எல்லா மனிதர்களுக்கும் உணர்வு இருக்கும் . நம்முடைய உணர்வை யார் மதிக்கின்றார்களோ அவர்கள் நமக்கு மிகப்பெரியவர்களாக தெரிவார்கள். நம்முடைய உணர்வை யாரும் அதாவது நமக்கு உரிமைப் பட்டவர்கள் கூட மதிக்கவில்லை என்றால் நமக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கும். நம் மனதில் தோன்றும் அனைத்துமே உணர்வுதான். நம்முடைய உண்ர்வு மிக மிகச்சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் நம் உணர்வு தெளிவாக, உண்மையாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக பசி என்பது கூட ஓர் உணர்வுதான் , அந்த நேரத்தில் நமக்கு யார் உணவு தர முன்வருகின்றார்களோ அவர்கள் அந்த நேரத்தில் அவர் நமக்குத் மிகப்பெரிய ஆளாக தெரிவார். ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவரும் நம் குடும்ப உறுப்பினர்களுடைய நல்ல ஆரோக்கியமான உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தால் குடும்பம் மிக அமைதியாகவும் , மகிழ்ச்சியாகவும் இருக்கும். ஒரு மனைவி அவள் கணவனுடைய உணர்வை மதிக்க வேண்டும். ஒரு கணவன் அவன் மனைவியுடைய உணர்வுகளை மதிக்க வேண்டும்.ஒருவர் தன்னை போல் மற்றவருக்கும் உணர்வு உண்டு என்பதை உணரவேண்டும். இதில் வீணான தலைக்கனம் காட்டத் தேவை இல்லை. அப்பொழுதான் இல்லறம் மகிழ்ச்சியாக இருக்கும்.

உணர்வும் , உணர்ச்சியும் தனித்தனியாக செயல்பட்டால் பிரச்சனை தான். நம்முடைய ஆரோக்கியமான உணர்வை வெளிப்படுத்த உணர்ச்சி தேவை. உணர்வு மட்டும் தனியாக இருந்ததால் பயனில்லை. உணர்ச்சியின் வெளிப்பாடு உணர்ந்து வெளிவந்தால் பயனுள்ளதாக இருக்கும். உணர்ச்சிவசப்பட்டு குறுகிய நேரத்தில் எடுக்கும் முடிவு , நாம் எடுக்கும் தைரியமான முடிவு என்று நினைத்தால் அது ஒரு முட்டாள்தனம் அதன் பின்விளைவுகள் மிக அதிகமாக இருக்கும் . உணர்ந்து எடுக்கும் முடிவு தாமதமாக இருந்ததாலும் அதன் வெளிப்பாடு சரியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் மக்களின் உணர்ச்சியுடன் கூடிய உணர்வான போராட்டம் பல வெற்றிகளை தந்திருக்கிறது. நம் குடும்பம் , நாடு , மொழி என்ற உணர்வு இருந்தால்தான் அதன் மேல் ஒரு பற்று வரும். நாம் சாதிக்க வேண்டும் , வாழ்வில் உயர வேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டால் மட்டும் போதாது .அதற்கான உணர்வுடன் திட்டமிட்டு செயல் பட்டால் மட்டுமே சாதிக்கலாம். எனவே உணர்வான உணர்ச்சியுடன் செயல்பட்டால் வாழ்வில் உயரலாம்.

Saturday, September 20, 2008

உறவுகளின் கதவுகள் திறக்கட்டும்.




இன்றைய சூழ்நிலையில் நாம் எந்த அளவிற்கு உறவுக்கு அல்லது உறவினர்களுக்கு மதிப்புக் கொடுக்கிறோம் என்று பார்த்தால் மிகவும் குறைவாகவே உள்ளது. அப்படி நாம் மதிப்பு கொடுக்கின்ற உறவுகளைப் பார்த்தால் எதாவது கைம்மாறு கருதியே கொடுக்கிறோம். நாம் பணத்திற்குக் கொடுக்கிற மதிப்பு நம்முடைய இரத்த உறவுகளுக்குக் கொடுப்பதில்லை. பணம் தேடி பல இடங்களுக்குச் செல்கிறோம் ஆனால் உறவைத் தேடி பக்கத்து வீட்டுக்குச் செல்ல யோசிக்கிறோம். எதனால் நாம் இந்த கொடுர சூழ்நிலைக்கு ஆளானோம்? அல்லது தள்ளப் பட்டோம்?. தினசரி செய்திகளில் பணத்தின் மதிப்பைப் பார்ப்பது போல உறவுகளின் நிலைமையும் ஏற்ற இறக்கங்களில் செல்கிறது.

முதலில் உறவுகள் மற்றும் உறவினர்கள் எதற்காக என்று பார்ப்போம். ஒருவர் மற்றொருவருக்கு ஆறுதலாக இருக்கத்தான். நம்முடைய இன்ப மற்றும் துன்ப நிகழ்வுகளில் அவர்களின் பங்கேற்பு அதிகமாக இருக்கும் மற்றும் நம்முடைய இன்ப , துன்பங்களை பரிமாறிக்கொள்ளலாம். உறவினர்கள் ஒர் இடத்தில் வசிக்கும்பொழுது , உறவினர்கள் குழுமி யாருக்காவது சிறு சிறு பிரச்சினைகள் அல்லது அவர்களுக்குத் தேவைகள் ஏற்படும் பொழுது இவர்களின் உறவு உதவியாக இருக்கும்.

நமக்கு என்ன என்ன உறவுகள் உள்ளன ?, அப்பா வழி உறவுகள் அம்மா வழி உறவுகள் , மற்றும் நம் உடன் பிறந்த அண்ணன் ,அக்கா ,தம்பி , தங்கை . நாம் இவர்களுடன் எந்த அளவில் உறவுடன் உள்ளோம் என்பதைப் பார்க்க வேண்டும்.
அதற்கு நம் பெற்றோர்கள் எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்.அவர்கள் அவர்களுடைய உடன் பிறந்தவர்களுடன் எந்த அளவிற்கு உறவு வைத்திருகின்றாகளோ அதே போலத் தான் இருப்பார்கள் அவர்களுடைய பிள்ளைகளும். பெற்றோர்கள் அவர்கள் உடன் பிறந்தவர்களுடன் நல்ல உறவு வைத்திருந்தார்கள் என்றால் அவர்களுடைய குழந்தைகளும் அவர்களுடைய உடன் பிறந்தவர்களிடம் நல்ல உறவு வைத்திருப்பர்.

இக்காலச்சூழ்நிலையில் ஒவ்வொருவரும் வேலை மற்றும் தொழில் ரீதியாகவும் வெவ்வாறு இடத்தில் பிரிந்து இருக்க வேண்டிய கட்டாய நிலைமை உள்ளது . கணவன் ஒர் இடத்தில் மனைவி ஒர் இடத்தில் குழந்தைகள் ஒர் இடத்தில் இப்படியாக வாழ வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ளது. எல்லாம் வாழ்க்கையில் முன்னேற அல்லது நல்ல நிலைமையை அடையவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால். இவர்கள் தங்கள் குடும்ப்பத்தாரிடமும் , உறவினர்களிடம் எந்த அளவிற்கு உறவு வைத்திருப்பார்கள் என்றால் சற்றுக் குறைவாகத்தான் இருக்கும்.

இப்படிப்பட்ட குறைகளை நிறைவு செய்யத்தான் திருவிழாக்கள் , பண்டிகைகள் , சுப நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஏற்படுத்தி உறவினர்களை ஒன்று சேர்த்து மகிழ்வுடன் கொண்டாடினார்கள். இன்று நாம் எந்த அளவிற்கு நம்முடைய நிகழ்ச்சிகளுக்கு உறவினர்களை அழைக்கின்றோம்?. உறவு எந்த நிலைமையில் உள்ளது என்று பார்த்தால் நம்வீட்டில் உள்ள சுப நிகழ்ச்சியின் நன்கொடை ஏடுகளைப் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டிஉள்ளது.

ஏன் உறவுகளைப் பார்த்து கதவுகளை அடைக்கின்றோம்?. எதனால் நாம் சொந்தங்களை பார்த்து மனது வெம்புகிறோம்?. அவர்கள் வந்து உன்னிடம் எதாவது கேட்டு விடுவார்கள் என்றா?.

ஏன் உறவினர்கள்?, எதற்கு உறவுகள்?அவர்கள் எங்களை ஏமாற்றுகிறார்கள் ,
அவர்கள் எங்கள் சொத்தை அபகரிப்பதிலேயே இருக்கிறார்கள். எனவே உறவுகள் தேவை இல்லை. உறவுகளால் பிரச்சினைதான் என்று சொல்லுகிறார்கள்.

நாம் பணத்திற்கும் , சொத்திற்கும் கொடுக்கின்ற மதிப்பை அப்படியே கொஞ்சம் உறவினர்களிடம் கொடுத்துப் பார்த்தால் எந்தப் பிரச்சினைக்கும் வழி இல்லை . மனிதனின் சராசரி ஆயுள் காலம் அறுபது ஆண்டுதான். நமக்குள் இருக்கும் தேவை இல்லாத தலைக்கனங்களை,வீண் பிடிவாதங்கள் மற்றும் வறட்டு கவுரவங்களை விட்டு விட்டு ஒருவருக்கு ஒருவர் நல்ல உறவுடன் வாழும் இந்த குறுகிய காலத்தில் வாழ்ந்து மகிழ்வோம். நம்முடைய எல்லா நல்ல நிகழ்வுகளுக்கும் உறவினர்களை அழைத்து அவர்களுடன் நல்ல உறவுடன் உறவாடி , மகிழ்வுடன் மற்றும் ஆரோக்கியமான உறவுடன் வாழ்வோம். உறவுக்காக நம் கதவுகள் திறந்து இருக்கட்டும் நமது வாழ்க்கை செழுமையாகட்டும். உறவுகளைப் பலப்படுத்துவோம்.

Thursday, September 11, 2008

அறிவியல் கண்டுபிடிப்பைக் கொஞ்சம் நிறுத்துங்கள்




அறிவியல் மேதைகளே கொஞ்சம் உங்கள் புதிய கண்டு பிடிப்புகளை நிறுத்தி , ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்திரங்களோடு பேசியது போதும் , அவற்றோடு உறவாடியாது போதும்.அறிவியல் கூடத்தை விட்டு வெளியே வாருங்கள். கொஞ்சம் உங்கள் மனைவி , குழந்தைகள் , பெற்றோர்களுடன் உறவாடுங்கள் , இல்லை என்றால் நாங்கள் எல்லோரும் சிறிது காலம் கழித்து ரோபோக்கள் என்று சொல்லப்படும் கணினி எந்திரத்தோடு தொடர்பும் மற்றும் குடும்பம் நடத்த வேண்டிய கட்டாய நிலைமைக்குத் தள்ள பட்டு விடுவோம்.



மனிதன் எந்திரமாக உழைக்கின்றான் , என்ற நிலைமை மாறி,எந்திரம் மனிதனாக மாறி வேலை செய்ய ஆரம்பித்தால் நாம் என்ன செய்வது?, எந்திரம் நம் வேலையைச் செய்தால் நாம் வேற என்ன வேலை செய்வது?, நம் வேலையை எந்திரம் செய்ய ஆரம்பித்தால் , மனிதனின் வேலை வேறு விதமாகத்தான் மாறும் , இதனால் கலாச்சார சீரழிவுகள் தான் நடக்கும், அல்லது தேவை இல்லாத பல பிரச்சினைகள் பிறக்கும். மனிதன் இப்பொழுதே அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்த நாடுகளில் கிட்டதட்ட அறிவியல் கண்டுபிடிப்பு பொருள்களுடன்தான் வாழ்க்கையை நடத்துகிறான்.

குடும்ப உறுப்பினர்களிடம் பேசுவதை விட கணினி முன்பு உட்க்கார்ந்து முகம் தெரியாதவர்களிடம் பேசிப்பொழுதைக் கழிக்கின்றான், பக்கத்தில் இருக்கும் நண்பர்களிடம் பேசுவதை விட தொலைபேசியில் மணிக்கணக்கில் மற்றவர்களிடம் பேசி நேரத்தை வீணாக்குகிறார்கள்.பயணங்களின்போது அருகில் அல்லது உடன் பயணம் செய்பவர்களிடம் பரஸ்பரம் விசாரிப்பதைக் கூட விரும்பாமல் காதில் கருவியை மாட்டிக்கொண்டு தலையை மட்டும் ஆட்டுகிறார்கள், மற்றவர்களைப் பார்த்து புன்முறுவல் செய்யக் கூட மறுக்கின்றார்கள். எல்லா விதமான விளையாட்டுகளையும் கணினி கூடவே விளையாடி முடிக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மனிதனின் தொடர்பை இழந்து , எந்திரங்களோடு தொடர்பை அதிகப்படுத்துகின்றார்கள்.



இதே நிலைமை நீடித்தால் இன்னும் கொஞ்ச நாட்களில் , வீதிகளில் மனிதனுக்குப் பதிலாக ரோபோக்கள்தான் நடமாடும், மனிதன் ரோபோக்களை பயன்படுத்தி விளையாட ஆரம்பித்துவிட்டதால் ரோபோக்களுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டியது இருக்கும்.பல வனவிலங்குகளை ரோபோக்கள் மூலமாகத்தான் தெரிந்து கொள்ள வேண்டியது இருக்கும்.கல்வி அனைத்தும் கணினி மூலம் சொல்லி கொடுக்கப்படுவதால் அவனுக்கு எழுதுவதே மறந்து விடும் நிலைமை உள்ளது. இப்படியாக மனிதனின் வேலை அனைத்தும் சுலபமாக மாறியதால் அவனுடைய சிந்தனைகள் மாறி , அவன் தேவை இல்லாத பல செயல்களைச் செய்து கொண்டு இருக்கின்றான். மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்தையும் கணினிக்குள்ளே பதிவு செய்துவைதுள்ளதால் அவனால் குடும்பம் இல்லாமல் வாழமுடியும் கணினி இல்லாமல் வாழ முடியாது என்ற சூழ்நிலை ஏற்ப்படும்.

உங்களால் ஆணும் இல்லாமல் , பெண்ணும் இல்லாமல் ஒரு குழந்தையை உருவாக்க முடிகிறது , ஆனால் பந்த பாசங்களை உருவாக்க முடிகிறதா?. ஒரே உயிர் போல் மற்றொரு உயிரை உருவாக்க முடிகிறது.ஆனால், நீங்கள் கண்டுபிடித்த அணு ஆயுதங்களால் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அழிகிறதே அதை உங்களால் காப்பாற்ற முடிகிறதா?.நீங்கள் வாழ்வதற்கு உண்டான பொருள்களைக் கண்டு பிடிப்பதை விட அழிவிற்கு உண்டான பொருள்களையே அதிகமாக உருவாக்குகிறிர்கள் உருவாக்குதிர்கள். ஆனால் அதைப் பயன் படுத்தும் நாடுகள் தற்பாதுகாப்புக்கு என்று சொல்லிக்கொண்டு தங்களிடம் இருக்கும் பத்துப்பேரைப் பாதுகாப்பதாகக் கூறி பல லட்சம் உயிர்களை அழிக்கிறார்கள்.

அறிவியல் அறிஞர்களே ,அறிவியல் மேதைகளே , அறிவியல் விஞ்ஞானிகளே, நீங்கள் கண்டு பிடித்த பல பயனுள்ள கண்டு பிடிப்புகளால்தான் நாங்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாகச் செல்ல முடிகிறது, ஒருவர் மற்றொருவரை எளிதாக தொடர்பு கொள்ள முடிகிறது.நீங்கள் கண்டு பிடித்த பல கண்டுபிடிப்புகள் எங்களுக்குப் பயனுள்ளதாகவும் , பல உண்மைகளைத் தெளிவுபடுத்துவதாகவும் இருந்தது, இருந்தாலும் கண்டுபிடிப்புகள் ஆபத்தானவையாகவே எங்களுக்குத் தெரிகிறது. நீங்கள் தானே சொன்னீர்கள் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று. அந்த இயற்கையான செயலே நின்று விட்டது , இன்னும் குரங்கிலிருந்து மனிதன் தோன்றிக்கொண்டே இருந்தால் , மனிதன் இவ்வுலகில் வாழ முடியுமா?.நீங்கள் செய்வதெல்லாம் செயற்கை தானே , அந்த இயற்க்கை செயலே நின்று விட்டது போல நீங்களும் சிறிது காலம் நிறுத்தி , இயற்கையான செயல்களுக்கு மதிப்பு கொடுங்கள் , அறிவியலைப் பயன்படுத்தி இயற்கையை அழிப்பதை நிறுத்தி கொஞ்சம் வெளிஉலகத்தையும் பாருங்கள்.



முற்காலத்தில் மனிதன் காடுகளில் வனவிலங்குகளோடு வாழ்ந்தான் என்று படித்திருக்கின்றோம், உங்களின் முயற்சியால் இப்பொழுதுதான் மனிதர்களோடு வாழ்கிறோம். உங்களின் முயற்சியை இதோடு நிறுத்திகொள்ளுங்கள் எங்களை எந்திரங்களோடு வாழ விட்டுவிடாதீர்கள்.

Monday, September 8, 2008

யாரிடம் கடவுள் ?




கடவுள் என்று ஒருவர் இருக்கின்றாரா? அல்லது இல்லையா? என்ற வாதமும் அப்படி ஒருவர் இருந்தால் யார் உண்மையான கடவுள் என்ற வாதமும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறது. நான் அந்த வாதத்திற்குச் செல்ல விரும்பவில்லை. கடவுள் என்ற ஒருவர் இருந்தால் அவர் யாரிடம் இருப்பார்? அல்லது அவர் எப்படிப் பட்ட மனிதர்களின் மனதில் இருப்பார்? என்று நம் கண் முன்னால் நடக்கும் நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்ததில் கடவுள் யாரிடம் இருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நான் தொடர் வண்டியில் முன்பதிவு செய்யாத பெட்டியில் பயணம் செய்யும் பொழுது நான்கு பேர் இருக்கும் இடத்தில் இருவர் இருந்து கொண்டனர், இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள். சிறுது நேரத்தில் அவர்கள் இருவரும் யாருடைய கடவுள் உண்மையான கடவுள் என்ற வாதத்தைத் தொடங்கினார்கள், இருவரும் தங்களுடைய புனித நூல்களை எடுத்துக் கொண்டு அதனுள் இருக்கும் வாசகங்களை எடுத்துக்கொண்டு வாதிட்டனர், ஒவொருவரும் தங்களுடைய கடவுள் தான் உண்மையான கடவுள் என்று ஒருவர் மற்றொருவரைச் சம்மதிக்க வைக்க மிகவும் பாடு பட்டனர். பயணம் செய்த நாங்கள் எல்லோரும் இவர்கள் , தங்கள் கடவுளர் மீது எவ்வுளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தோம், சிறிது நேரத்தில் ஒருவர் உட்கார இடம் இல்லாத காரணத்தினால் அவர்கள் அருகில் சென்று அமர முயன்றார் அவர்களோ அவருக்கு இடம் தர மறுத்து விட்டனர். பக்கத்தில் இருத்த முதியவர் அவருடைய இருக்கையில் சிறிது இடத்தை அவருக்கு அமரக் கொடுத்தார், அவர்கள் இருவரும் அவர்களுடைய கடவுளைப் பற்றிப் பேசினார்களே தவிர , அவர்கள் மதம் போதிக்கும் ஒரு சிறிய நெறிமுறையக் கூடப் பின்பற்ற அவர்களுக்கு முடியவில்லை ,என்ன தான் அவர்கள் ,அவர்களுடைய கடவுளைப் பற்றிப் பெருமையாக பேசினாலும் , இந்த முதியவர்க்கு இருந்த நல்ல எண்ணம் அவர்களுக்கு இல்லை என்று பார்க்கும் போது இவர்கள் போலிகள் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

இப்படியாக ஒவ்வொரு சிறிய செயல்களைப் பார்க்கும் பொழுது இவர்கள் எதற்க்காக கடவுளை வழிபடுகிறார்கள், என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆலயத்துக்குச் செல்கிறார்கள் நன்றாக , மிக பக்தியாக வழிபடுகிறார்கள் ஆனால் வெளியே வந்தால் , தம்மால் முடிந்த உதவிகளைத் தங்களுடைய சொந்தங்களுக்கு செய்ய மறுக்கின்றார்கள்.மற்ற சாதியினரைக் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கிறார்கள்.தங்களுடைய வழிபாட்டுத் தலங்களுக்குப் பெண்கள் செல்ல அனுமதி மறுக்கிறார்கள் மதத்தைப் போதிக்கின்றார்கள் அவர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்திக்கொண்டு உயர் பதவி அடைவதற்கு மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். அவர்களிடம் சாதிய உணர்வைத் தூண்டிவிடுகிறார்கள். ஒரு சாதரண மனிதர்களுக்கு இருக்கும் நல்ல பண்புகள் கூட இவர்களிடம் இல்லை. ஆலயங்களுக்குள்ளே பதவிகளுக்காக அடித்துக் கொள்கிறார்கள்.

பொதுவாக எல்லா மதத்தின் அடிப்படையான கோட்பாடுகளைப் பார்த்தல் அன்பு,அமைதி , அடக்கம் போன்றவை தான் போதிக்கப்படுகிறது. ஆனால் அவற்றைப் போதிக்கின்றவர்களும் , அவற்றைப் பின்பற்றுபவர்களும் அவர்கள் மதம் போதிக்கின்ற நெறிமுறைகளைப் பின்பற்றுகின்றார்களா என்ற பார்த்தால் அது ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது. இப்பொழுது நம் கண் முன்னால் நடக்கும் அனைத்துத் தீவிரவாத செயல்களும் , வன்முறைச் செயல்களும் மதத்தை முன் வைத்த நடக்கின்றன. இப்படி நடப்பதன் மூலம் அவர்களே அவர்கள் மதத்தின் மீது உள்ள நல்ல எண்ணங்களைக் கெடுத்து விடுகிறார்கள்.

இப்படியான போலி மதவாதிகளும், மதத்தின் நல்ல கொள்கைகளை பின்பற்றாதவர்களும் இருக்கின்ற வரைக்கும் கடவுள் யாரிடம் இருக்க முடியும்?. தங்கள் மதங்களின் மீது பற்று இருக்க வேண்டுமே தவிர , வெறி இருந்தால் அது பிரச்சினைகளைத் தான் தூண்டி விடும்.