Showing posts with label raja. Show all posts
Showing posts with label raja. Show all posts

Thursday, September 25, 2008

உணர்வான உணர்ச்சி.

உணர்ச்சி என்பது என்ன?. வெளியில் இருந்து ஒன்று நம்மை எதாவது ஒரு விதத்தில் அதாவது தொடுதல் அல்லது நம் மனதைப் பாதிக்கும்படி நடக்கும் செயல் என்பது உணர்ச்சியாகும். உணர்ச்சி என்பது சில நொடிகள் , சில நிமிடங்கள் அல்லது சில மணித்துளிகள் தான் நீடிக்கும்.உணர்ச்சி என்பது உடலில் ஏற்படும் மாற்றம்.

உணர்வு என்பது ஓர் உணர்ச்சியை உள்வாங்கி கொண்டு அதை அறிவுப் பூர்வமாக சிந்தனை செய்து , நாம் கொடுக்கும் வெளிப்பாடு. உணர்வு நம் மனதில் எப்போதும் ஓடும் ஒரு நிகழ்வு. உணர்வு என்பது மனதில் ஏற்ப்படும் மாற்றம்.

உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவை விட, உணர்ந்து எடுக்கும் முடிவே சிறந்தது என்று ஒரு பொன்மொழி உண்டு.

ஒரு மனிதனுக்கு உணர்ச்சி வேண்டும் இல்லை என்றால் அவன் இறந்தவனுக்குச் சமம். ஆனால் அவன் உணர்ச்சியை வெளிப்படுத்தும் விதம் மற்றவர்களை பாதிக்காதவண்ணமும் , அவனைப் பாதிக்காதவண்ணமுமாக இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு நாம் உடனே எடுக்கும் முடிவு பல பின்விளைவுகளை உண்டாக்கும். அது அவர்களுக்கு மட்டும் பிரச்சனை அல்ல அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் சிரமத்தை உண்டாக்கும். நாம் உணர்ச்சிவசப்பட்டு பேசும் பேச்சு , செய்யும் செயல் மற்றும் எடுக்கும் முடிவு நாம் அதை செய்யும் நேரம் சரி என்று தெரியும் .உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவு மிகக்குறுகிய நேரத்தில் முடிந்து விடும். பின்னால் அந்த செயலை நினைத்துப் பார்த்தல் மிக கொடுமையான முடிவாக இருக்கும். இந்த சில மணித்துளிகள் ஏற்ப்படும் உணர்ச்சிகளால் சில நல்ல செயல்களும் நடைபெறும் , பல தவறான செயல்களும் நடைபெறும்.

உணர்வு என்பது மிக மிக முக்கியமான ஒன்று , எல்லா மனிதர்களுக்கும் உணர்வு இருக்கும் . நம்முடைய உணர்வை யார் மதிக்கின்றார்களோ அவர்கள் நமக்கு மிகப்பெரியவர்களாக தெரிவார்கள். நம்முடைய உணர்வை யாரும் அதாவது நமக்கு உரிமைப் பட்டவர்கள் கூட மதிக்கவில்லை என்றால் நமக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கும். நம் மனதில் தோன்றும் அனைத்துமே உணர்வுதான். நம்முடைய உண்ர்வு மிக மிகச்சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் நம் உணர்வு தெளிவாக, உண்மையாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக பசி என்பது கூட ஓர் உணர்வுதான் , அந்த நேரத்தில் நமக்கு யார் உணவு தர முன்வருகின்றார்களோ அவர்கள் அந்த நேரத்தில் அவர் நமக்குத் மிகப்பெரிய ஆளாக தெரிவார். ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவரும் நம் குடும்ப உறுப்பினர்களுடைய நல்ல ஆரோக்கியமான உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தால் குடும்பம் மிக அமைதியாகவும் , மகிழ்ச்சியாகவும் இருக்கும். ஒரு மனைவி அவள் கணவனுடைய உணர்வை மதிக்க வேண்டும். ஒரு கணவன் அவன் மனைவியுடைய உணர்வுகளை மதிக்க வேண்டும்.ஒருவர் தன்னை போல் மற்றவருக்கும் உணர்வு உண்டு என்பதை உணரவேண்டும். இதில் வீணான தலைக்கனம் காட்டத் தேவை இல்லை. அப்பொழுதான் இல்லறம் மகிழ்ச்சியாக இருக்கும்.

உணர்வும் , உணர்ச்சியும் தனித்தனியாக செயல்பட்டால் பிரச்சனை தான். நம்முடைய ஆரோக்கியமான உணர்வை வெளிப்படுத்த உணர்ச்சி தேவை. உணர்வு மட்டும் தனியாக இருந்ததால் பயனில்லை. உணர்ச்சியின் வெளிப்பாடு உணர்ந்து வெளிவந்தால் பயனுள்ளதாக இருக்கும். உணர்ச்சிவசப்பட்டு குறுகிய நேரத்தில் எடுக்கும் முடிவு , நாம் எடுக்கும் தைரியமான முடிவு என்று நினைத்தால் அது ஒரு முட்டாள்தனம் அதன் பின்விளைவுகள் மிக அதிகமாக இருக்கும் . உணர்ந்து எடுக்கும் முடிவு தாமதமாக இருந்ததாலும் அதன் வெளிப்பாடு சரியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் மக்களின் உணர்ச்சியுடன் கூடிய உணர்வான போராட்டம் பல வெற்றிகளை தந்திருக்கிறது. நம் குடும்பம் , நாடு , மொழி என்ற உணர்வு இருந்தால்தான் அதன் மேல் ஒரு பற்று வரும். நாம் சாதிக்க வேண்டும் , வாழ்வில் உயர வேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டால் மட்டும் போதாது .அதற்கான உணர்வுடன் திட்டமிட்டு செயல் பட்டால் மட்டுமே சாதிக்கலாம். எனவே உணர்வான உணர்ச்சியுடன் செயல்பட்டால் வாழ்வில் உயரலாம்.

Friday, September 5, 2008

மதத்தால் மதம் பிடித்து அலையாதீர்.





உலகில் வேறு எந்த நாட்டிற்கும் கிடைக்காத வரப்பிரசாதம் நமது நாட்டிற்க்குக்கிடைத்துள்ளது. எல்லா மதத்தினரும் ஒன்றாகப்பழகும் வாய்ப்பு நமக்குக்கிடைத்துள்ளது.
பொதுவாக மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துவ மதம் அதிகமாக உள்ளது, அரபு நாடுகளில் இஸ்லாம் மதம் அதிகமாக உள்ளது. அவர்களுக்கு மற்ற மதத்தினருடன் அதிக மாக பழக வாய்ப்பு இல்லை. ஆனால் நம் நாட்டில், தோன்றின சைவம், வைணவம் , சீக்கியம், புத்தம் போன்ற மதத்தினருடனும் வெளிநாட்டில் இருந்து வந்து பரவின மதங்களான கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் போன்ற மதத்தினருடனும் பழகும் வாய்ப்பு கிடைத்திருப்பது நமக்குக் கிடைத்த வரமாகும்.

ஆனால் இன்றைய மதத்தலைவர்கள் மதம் என்னும் போர்வையில் தங்களை மூடிக்கொண்டு தங்களின் சுயலாபத்திற்க்காக மக்களைப்பயன் படுத்திக்கொள்கிறார்கள். பொதுவாக மதத்தலைவர்களாக தங்களைக்கூறுபவர்களின் செயல்பாடுகள் தங்கள் மதத்திற்கு எடுத்துக்காட்டாக இல்லை. கிறிஸ்தவர்கள் அதிக மாக உள்ள நாடுகளை கிறிஸ்தவ நாடுகள் என்றும் இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள நாடுகள் இஸ்லாமிய நாடுகள் என்றும் அறிவித்து உள்ளன. ஆனால் அவர்கள் நாட்டில் நடக்கும் வன்முறைகள் ,கலாச்சார சீரழிவுகள் மற்றும் செயல்பாடுகள் அவர்களின் மதத்தின் கோட்பாடுகளை பிரதிபலிக்கும் விதமாக இல்லை.


நம் நாட்டை மதச்சார்பற்ற நாடு என்று சொல்கிறோம். ஒர் ஆய்வின் அடிப்படையில் பார்த்தால் வருடத்திற்கு 10,000 பேர் மதக்கலவரங்களால் கொல்லப்படுகிறார்கள். மதத்தலைவர்கள் மக்களிடம் மத உணர்வைத்தூண்டிவிட்டு அதன் மூலம் அவர்கள் அரசியல் லாபம் அடையப்பார்க்கிறார்கள். எந்த மதக்கலவரத்திலும் எந்த மதத்தலைவரும் பலியானதாக தகவல்கள் இல்லை. அப்பாவி பொது மக்கள் தான் பலியாகிறார்கள். மதக்கலவரங்களால் இறந்து போகும் மக்களின் இரத்தத்தில் இவர்கள் தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். தங்களின் ஆதாயத்திற்காக எபேர்ப்பட்ட பொய்களையும் சொல்லி மத கலவரங்களைத்தூண்டி தங்களின் ஆசையை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.

தங்களைக்கிறிஸ்தவ நாடுகள் என்று அறிவித்துள்ள நாடுகள், பிற நாட்டில் உள்ள எண்ணெய் வளத்திற்காக அல்லது தங்களின் மேலாதிக்கத்திற்காக பிற நாடுகள் மீது போர் தொடுத்து பல லட்சக்கணக்கான உயிர்களைக்கொல்கிறார்கள். அவர்கள் நாட்டில் உள்ள ஆலயங்களில் "உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக" என்ற வார்த்தைகள் ஒலிக்கத்தான் செய்கின்றன.
தங்களை இஸ்லாமிய நாடுகள் என்று அறிவித்துள்ள நாடுகள் புனிதப்போர் என்ற என்று சொல்லிக்கொண்டு தங்கள் மதத்திற்குள்ளேயே இன ரீதியான தாக்குதலை நடத்தி பல்லாயிரகணக்கான உயிர்களைப்பழிவாங்குகிறார்கள் , "இஸ்லாம் இனிய மார்க்கம்" என்று தங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கான சுதந்திரத்தைக்கொடுக்க மறுக்கிறார்கள்.
ஒரு "சிறு உயிருக்குக் கூட துன்பம் விளைவிக்கக் கூடாது " என்று கூறிய புத்தரைப் பின் பற்றித்தங்களைத் துறவிகள் என்று கூறுபவர்கள் , பிற இனத்தின் மீதும் , அவர்களின் புனிதத் தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தி பல உயிர்களை எடுக்கிறார்கள்.
தங்களை இந்து மத சாதுக்கள் என்று கூறுபவர்கள் கையில் வேலோடும் , சூலாயுதங்க டும் இருக்கிறார்கள், தங்களின் பல பெரிய பழைய கோவில்கள் பராமரிப்பு அற்ற நிலையில் இருக்கும் போது , புதிய கோவில் கட்டுவதற்காக மற்ற மதத்தவர்களின் புனித தலங்களை இடிக்கிறார்கள். தங்கள் மதத்திற்குள்ளே இனப் பிரிவை ஏற்படுத்தி இன ரீதியான பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறார்கள்.

எல்லா மதங்களும் இந்த இரத்த வெறியைத்தான் விரும்புகிறதா !
ஒரு சிறிய செயல்களையும் , மத உணர்வைப் பயன்படுத்தி மிகப் பெரியதாக மாற்றி பல உயிர்களைப் பலிவாங்குவதைத்தான் எல்லா மத நம்பிக்கை உடையவர்களும் விரும்புகிறார்களா , எப்படி இந்தக் கொலைவெறியை மனதில் வைத்து கொண்டு இவர்கள் கடவுளை வழிபடுகிறார்கள்.

எல்லா மதமும் அன்பைப் போதிக்கிறது என்று சொல்லிக்கொண்டு அதைப் பின்பற்றுபவர்கள் ஏன் பழிக்குப் பலியை விரும்புகிறார்கள்.

மதத்தால் மதம் பிடித்து அலையாமல் நமது சுய சிந்தனையுடன் , மற்றவர்களையும் நம்மை போல் நினைத்து மகிழ்வுடன் வாழ்வோம்.

Tuesday, July 8, 2008

திண்ணை


திண்ணை என்பது என்ன என்று கேட்டால் இன்றைய சமூகத்தில் பல பேருக்கு த்தெரிவதில்லை. திண்ணை என்பது என்ன ? அதன் பயன் என்ன ! அதனுடைய சமுக பயன்பாடுகள் பற்றிப் பார்ப்போம்.

அமைப்பு:
திண்ணை என்பது ஒரு திண்டு போன்ற அமைப்பு. இது வீட்டின் முன் பகுதியில் பிரதான வாயில் அல்லது தலைவாசல் பகுதியில் உள்ள ஒரு திறந்த வெளி அமைப்பாகும். இது காலைத் தொங்கவிட்டு அமர்வதற்கு வசதியாக இருக்கும்.இன்னொருபுறம் சுவரில் சாய்ந்து இருப்பதற்கு வசதியாக இருக்கும். திண்ணையில் இருக்கும் தூண்கள் வீட்டின் கூரையைத் தாங்கி பிடிப்பதற்கு உதவியாக இருக்கும்.





பயன்:
பழங்காலத்தில் போக்குவரத்து இல்லாத காலகட்டத்தில் மக்கள் கால்நடையாக ஒர் இடத்தில் இருந்து வேறு இடங்களுக்குச் செல்வது வழக்கம்.அந்த நேரங்களில் மக்கள் தங்களைக் கொஞ்சம் இளைப்பாற்றிக் கொள்ள வீதி ஓரங்களில் இருக்கும் எதாவது ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து செல்வார்கள். அல்லது வீட்ற்கு நெருக்கம் இல்லாத நபர்களை உபசரிபதற்க்கும் பயன்படுத்துவார்கள்.
காலையில் வேலைக்குச் செல்லும் மக்கள் மாலையில் தங்களை இளைப்பாற்றி கொள்ளவும் தங்கள் உறவினர்களோடு பேசி மகிழவும் திண்ணையை பயன்ப் படுத்துவார்கள்.

சமுகப்பயன்பாடுகள்:
பழங்காலத்தில் திண்ணையில் பள்ளிக் கூடங்களை நடத்தினார்கள்.ஊரில் உள்ள சிறார்கள் எதாவது ஒர் வீட்டின் திண்ணையில் கூடி குரு அதாவது ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கும் பாடங்களை படிப்பார்கள். இதைத் திண்ணைப் பள்ளிக்கூடம் என்பார்கள்.
ஊரில் எதாவது முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டும் என்றாலும் அல்லது குடும்பங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளை ஊரில் உள்ள ஒரு பெரியவரின் வீட்டுத் திண்ணையில் ஒன்று கூடி முடிவு எடுப்பார்கள்.

இன்றைய மக்களின் மனநிலையும் திண்ணை காலத்து மக்களின் மனநிலையும்:
இன்றையகாலத்து மக்கள் படிக்கிறார்கள் அறிவு வளர்கிறது நல்லதுதான் ஆனால் அவர்கள் மனநிலை சுருங்குகிறது. அவர்கள் மனநிலை நான்,என் மனைவி குழந்தைகள் என ஒரு குறுகிய வட்டத்துக்குள் வந்து விடுகிறது.அவர்கள் தங்கள் கட்டும் வீடுகளுக்குச் சுற்றுச் சுவர் போடுகிறார்கள் கேட்டால் பாதுகாப்பாக இருக்கும் என்பார்கள் நல்லதுதான்.சுற்றுச் சுவர் போட்டாலே என் அனுமதி இன்றி உள்ள வராதே என்று சொல்லாமல் சொல்வதுதான் பொருள்.இப்பொழுது எந்த வீட்டிலும் திண்ணை வைத்துக் கட்டுவதில்லை கேட்டால் பழங்காலத்தில் போக்குவரத்து இல்லை இப்பொழுதுதான் எல்லாம் இருக்கிறதே வழிபோக்கர்கள் இல்லையே என்று சொல்வார்கள். அல்லது திண்ணை இருந்தால் யாராவது வந்து வெட்டியாகப் பேசிக்கொண்டு இருப்பார்கள் என்பார்கள். ஆனால் அவர்கள் வீட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து நேரத்தை வீணடித்துக் கொண்டு இருப்பார்கள். தங்கள் உறவினர்களிடம் பேசுவதை விடத் தொலைபேசியில் வேறு யாரிடமாவது கதையடித்து கொண்டிருப்பார்கள். வெளியே சென்று பேசினால் யாரும் உதவி கேட்டுவிடுவார்களோ என்று பயப்படுகிறார்கள்.

ஆனால் திண்ணை வீட்டுக் காலத்து தங்கள் கட்டியிருக்கும் வீடு சிறிது என்றாலும் அதில் ஒரு பகுதியை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள திண்ணை வைத்து வீடு கட்டும் பெரிய மனதுக்காரர்களாக இருந்தார்கள்.திண்ணையில் கூடி வெட்டியாகப் பேசிப் பிரச்சனைகளை இழுப்பார்கள் என்று ஒரு வாதம் இருந்தாலும், பொதுவாக திண்ணை என்பது உறவினர்கள் நண்பர்கள் ஒன்று கூடி பேசி மகிழ்ந்து தங்கள் துன்பங்களையும்,பிரச்சினைகளயும் தங்கள் மகிழ்ச்சிகளையும் அனுபவங்களயும் பகிர்ந்து கொள்ளும் உறவின் பாலமாகவே இருந்துள்ளது. இன்று கண்டு பிடிக்கப்படும் புதிய சிந்தனையும், புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளும் திண்ணை காலத்து ஞானிகளின் வாதங்களையும் அவர்களின் சிந்தனையும் மேற்கோள் காட்டியே கண்டுபிடிகபட்டது.திண்ணை காலத்து மக்களிடம் மூடநம்பிக்கை உண்டு என்னும் வாதம் இருந்தாலும் அவர்களின் உண்மையான அன்பான உபசரிப்பாலும் எதையும் எதிர்பார்க்காமல் செய்யும் உதவியினாலும் மூடநம்பிக்கை மறைந்துவிடுகிறது.
பொதுவாக திண்ணை என்பது உறவின் பாலமாகவும், அறிவின் பல்கலைக்கழகமாகவும் இருந்துள்ளது.

குழந்தை மனம் போல் இருக்க வேண்டும் என்றால் குழந்தை போல் நாம் ஆக வேண்டும் என்பது பொருள் அல்ல. அது போல நாம் திண்ணை வீடு கட்டவேண்டும் என்று கட்டாயம் இல்லை அந்தச் சாத்தியக்கூறுகளும் இல்லை. ஆனால் நமது மனநிலையை மாற்றிகொள்வோம். நமது குழந்தைகளையும் அதன்படி வளர்ப்போம்.