தளர்ச்சியை நாம் இரண்டுவகையில் உணரலாம் ஒன்று உடல் ரீதியான தளர்ச்சி மற்றொன்று மன ரீதியான தளர்ச்சி. உடல் ரீதியான தளர்ச்சியை மருத்துவ முறையில் சரி செய்து கொள்ளலாம். மனத் தளர்ச்சியை ஆற அமர்ந்து யோசித்து சரி செய்து கொள்ளலாம். நம் மனத் தளர்ச்சியால் உடலும் தளர்ச்சியுறும். எனவே மனத் தளர்ச்சியின் போது துவண்டு விடாமல் மனதை திடபப்டுத்திக்கொண்டு செயல்பட்டால் வெற்றி கனியை பறிக்கலாம். நம் முன்னால் தலை நிமிர்ந்து நிற்கும் தலைவர்கள் எல்லாம் தளர்ச்சியயை உடைத்து எறிந்து வந்தவர்கள்தான். எந்த ஒரு சிறு வெற்றியும் தளர்ச்சி இல்லாத உழைப்பால்தான் கிடைக்கும்.
நமக்குத் தளர்ச்சி என்பது எப்பொழுது வருகிறது என்று பார்த்தால் நாம் ஏதோ ஒன்றில் தோல்வியைத் தழுவும் போது அல்லது நாம் நினைத்துச் செயல் படும் காரியங்களில் ஏமாற்றம் ஏற்படும் பொழுது. தளர்ச்சி ஏற்ப்படும், மனது வருத்தப்படும் என்பது உண்மைதான். நாம் அந்த நேரத்தில் பலவாறு குழம்பிப் போய் இருக்கலாம். நாம் எடுத்த தவறான முடிவால்தான் இந்த நிலைமைக்குத் தள்ளப் பட்ட்டுவிட்டோமா அல்லது நாம் தேர்ந்து எடுத்த பாதை சரிதான என்று வருத்தப்படலாம் , இந்த நேரத்தில் மனம் பலகோணங்களில் யோசித்து, நம்மால் இந்த நிலைமையிலிருந்து மீள முடியுமா மீண்டும் நமது இலக்கை நோக்கிய பயணத்தைத் தொடர முடியுமா என்ற எண்ணங்கள் வரலாம். நாம் இந்த நேரத்தில் நம் தோல்வியை மட்டும் பாராமல் , அதற்கு முன் நாம் பெற்ற வெற்றிகளை நினைத்து பார்த்தல் நம்முடைய இந்த துயரத்தில் இருந்து வெளிவர அது உதவியாக இருக்கும்.
நாம் தோல்வியாளர்களா? இல்லை! நாம் எத்தனையோ முறை இதற்கு முன் வெற்றி பெற்றிருக்கிறோம். ஏதோ இந்தமுறை தோல்வியுற்றோம். நாம் எடுக்கும் முயற்ச்சியில் தோல்வி ஏற்ப்பட்டால் சோர்ந்து போகாமல் , நம்முடைய முயசியில் இருக்கும் எதோ ஒரு சிறிய தவறை அகற்றி , அடுத்து நாம் எடுத்து வைக்கும் முயற்சியைச் சரியான திட்டமிடுதலுடன் , மிக நேர்த்தியாகச் செயல்பட்டால் வெற்றி நம் பக்கம் தான்.
ஏமாற்றத்தால் வரும் தளர்ச்சியை எப்படி நிவர்த்தி செய்வது. நாம் எத்தனையோ பிரச்சனைகளைக் கடந்துதான் இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறோம். இதுவும் கடந்து போகும் என்று நினைத்து , நம்முடைய முயற்சியில் இருந்து விலகாமல் ஒரு புதிய உத்வேகத்தோடு செயல்பட்டால் நாம் இந்த தளர்ச்சியில் இருந்து மீண்டு வந்து விடலாம்.
உதாரணமாக தேயிலை செடியின் நுனியை வெட்டுவதும் , திராட்சைக் கொடியின் கிளைகளை வெட்டுவதும் அதன் வளர்ச்சியை தடுப்பதற்காக அல்ல , அடுத்து வரும் கொழுந்தும் , திராட்சை கனியும் இன்னும் தரமுடன் வருவதற்காகத்தான் அது போல நாமும் தளர்ச்சியை கண்டு சோர்ந்து போகாமல் , நம்முடைய தளர்ச்சியை எல்லாம் ஒன்று சேர்த்து முயற்சியுடன் செயல்பட்டால் முன்பை விட நிறைவான வெற்றியைப் பெறலாம்.நம்முடைய தளர்ச்சிக்குப் பிறகு முயற்ச்சியால் கிடைக்கும் வெற்றி மிகவும் மன நிறைவைத் தரும்.
Showing posts with label domi. Show all posts
Showing posts with label domi. Show all posts
Saturday, September 20, 2008
உறவுகளின் கதவுகள் திறக்கட்டும்.

இன்றைய சூழ்நிலையில் நாம் எந்த அளவிற்கு உறவுக்கு அல்லது உறவினர்களுக்கு மதிப்புக் கொடுக்கிறோம் என்று பார்த்தால் மிகவும் குறைவாகவே உள்ளது. அப்படி நாம் மதிப்பு கொடுக்கின்ற உறவுகளைப் பார்த்தால் எதாவது கைம்மாறு கருதியே கொடுக்கிறோம். நாம் பணத்திற்குக் கொடுக்கிற மதிப்பு நம்முடைய இரத்த உறவுகளுக்குக் கொடுப்பதில்லை. பணம் தேடி பல இடங்களுக்குச் செல்கிறோம் ஆனால் உறவைத் தேடி பக்கத்து வீட்டுக்குச் செல்ல யோசிக்கிறோம். எதனால் நாம் இந்த கொடுர சூழ்நிலைக்கு ஆளானோம்? அல்லது தள்ளப் பட்டோம்?. தினசரி செய்திகளில் பணத்தின் மதிப்பைப் பார்ப்பது போல உறவுகளின் நிலைமையும் ஏற்ற இறக்கங்களில் செல்கிறது.
முதலில் உறவுகள் மற்றும் உறவினர்கள் எதற்காக என்று பார்ப்போம். ஒருவர் மற்றொருவருக்கு ஆறுதலாக இருக்கத்தான். நம்முடைய இன்ப மற்றும் துன்ப நிகழ்வுகளில் அவர்களின் பங்கேற்பு அதிகமாக இருக்கும் மற்றும் நம்முடைய இன்ப , துன்பங்களை பரிமாறிக்கொள்ளலாம். உறவினர்கள் ஒர் இடத்தில் வசிக்கும்பொழுது , உறவினர்கள் குழுமி யாருக்காவது சிறு சிறு பிரச்சினைகள் அல்லது அவர்களுக்குத் தேவைகள் ஏற்படும் பொழுது இவர்களின் உறவு உதவியாக இருக்கும்.
நமக்கு என்ன என்ன உறவுகள் உள்ளன ?, அப்பா வழி உறவுகள் அம்மா வழி உறவுகள் , மற்றும் நம் உடன் பிறந்த அண்ணன் ,அக்கா ,தம்பி , தங்கை . நாம் இவர்களுடன் எந்த அளவில் உறவுடன் உள்ளோம் என்பதைப் பார்க்க வேண்டும்.
அதற்கு நம் பெற்றோர்கள் எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்.அவர்கள் அவர்களுடைய உடன் பிறந்தவர்களுடன் எந்த அளவிற்கு உறவு வைத்திருகின்றாகளோ அதே போலத் தான் இருப்பார்கள் அவர்களுடைய பிள்ளைகளும். பெற்றோர்கள் அவர்கள் உடன் பிறந்தவர்களுடன் நல்ல உறவு வைத்திருந்தார்கள் என்றால் அவர்களுடைய குழந்தைகளும் அவர்களுடைய உடன் பிறந்தவர்களிடம் நல்ல உறவு வைத்திருப்பர்.
இக்காலச்சூழ்நிலையில் ஒவ்வொருவரும் வேலை மற்றும் தொழில் ரீதியாகவும் வெவ்வாறு இடத்தில் பிரிந்து இருக்க வேண்டிய கட்டாய நிலைமை உள்ளது . கணவன் ஒர் இடத்தில் மனைவி ஒர் இடத்தில் குழந்தைகள் ஒர் இடத்தில் இப்படியாக வாழ வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ளது. எல்லாம் வாழ்க்கையில் முன்னேற அல்லது நல்ல நிலைமையை அடையவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால். இவர்கள் தங்கள் குடும்ப்பத்தாரிடமும் , உறவினர்களிடம் எந்த அளவிற்கு உறவு வைத்திருப்பார்கள் என்றால் சற்றுக் குறைவாகத்தான் இருக்கும்.
இப்படிப்பட்ட குறைகளை நிறைவு செய்யத்தான் திருவிழாக்கள் , பண்டிகைகள் , சுப நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஏற்படுத்தி உறவினர்களை ஒன்று சேர்த்து மகிழ்வுடன் கொண்டாடினார்கள். இன்று நாம் எந்த அளவிற்கு நம்முடைய நிகழ்ச்சிகளுக்கு உறவினர்களை அழைக்கின்றோம்?. உறவு எந்த நிலைமையில் உள்ளது என்று பார்த்தால் நம்வீட்டில் உள்ள சுப நிகழ்ச்சியின் நன்கொடை ஏடுகளைப் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டிஉள்ளது.
ஏன் உறவுகளைப் பார்த்து கதவுகளை அடைக்கின்றோம்?. எதனால் நாம் சொந்தங்களை பார்த்து மனது வெம்புகிறோம்?. அவர்கள் வந்து உன்னிடம் எதாவது கேட்டு விடுவார்கள் என்றா?.
ஏன் உறவினர்கள்?, எதற்கு உறவுகள்?அவர்கள் எங்களை ஏமாற்றுகிறார்கள் ,
அவர்கள் எங்கள் சொத்தை அபகரிப்பதிலேயே இருக்கிறார்கள். எனவே உறவுகள் தேவை இல்லை. உறவுகளால் பிரச்சினைதான் என்று சொல்லுகிறார்கள்.
நாம் பணத்திற்கும் , சொத்திற்கும் கொடுக்கின்ற மதிப்பை அப்படியே கொஞ்சம் உறவினர்களிடம் கொடுத்துப் பார்த்தால் எந்தப் பிரச்சினைக்கும் வழி இல்லை . மனிதனின் சராசரி ஆயுள் காலம் அறுபது ஆண்டுதான். நமக்குள் இருக்கும் தேவை இல்லாத தலைக்கனங்களை,வீண் பிடிவாதங்கள் மற்றும் வறட்டு கவுரவங்களை விட்டு விட்டு ஒருவருக்கு ஒருவர் நல்ல உறவுடன் வாழும் இந்த குறுகிய காலத்தில் வாழ்ந்து மகிழ்வோம். நம்முடைய எல்லா நல்ல நிகழ்வுகளுக்கும் உறவினர்களை அழைத்து அவர்களுடன் நல்ல உறவுடன் உறவாடி , மகிழ்வுடன் மற்றும் ஆரோக்கியமான உறவுடன் வாழ்வோம். உறவுக்காக நம் கதவுகள் திறந்து இருக்கட்டும் நமது வாழ்க்கை செழுமையாகட்டும். உறவுகளைப் பலப்படுத்துவோம்.
Labels:
domi,
dominic,
dominic raja,
rajagopalaperi,
tamilnadu,
உறவினர்கள்,
உறவுகள்
Monday, September 8, 2008
யாரிடம் கடவுள் ?

கடவுள் என்று ஒருவர் இருக்கின்றாரா? அல்லது இல்லையா? என்ற வாதமும் அப்படி ஒருவர் இருந்தால் யார் உண்மையான கடவுள் என்ற வாதமும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறது. நான் அந்த வாதத்திற்குச் செல்ல விரும்பவில்லை. கடவுள் என்ற ஒருவர் இருந்தால் அவர் யாரிடம் இருப்பார்? அல்லது அவர் எப்படிப் பட்ட மனிதர்களின் மனதில் இருப்பார்? என்று நம் கண் முன்னால் நடக்கும் நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்ததில் கடவுள் யாரிடம் இருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
நான் தொடர் வண்டியில் முன்பதிவு செய்யாத பெட்டியில் பயணம் செய்யும் பொழுது நான்கு பேர் இருக்கும் இடத்தில் இருவர் இருந்து கொண்டனர், இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள். சிறுது நேரத்தில் அவர்கள் இருவரும் யாருடைய கடவுள் உண்மையான கடவுள் என்ற வாதத்தைத் தொடங்கினார்கள், இருவரும் தங்களுடைய புனித நூல்களை எடுத்துக் கொண்டு அதனுள் இருக்கும் வாசகங்களை எடுத்துக்கொண்டு வாதிட்டனர், ஒவொருவரும் தங்களுடைய கடவுள் தான் உண்மையான கடவுள் என்று ஒருவர் மற்றொருவரைச் சம்மதிக்க வைக்க மிகவும் பாடு பட்டனர். பயணம் செய்த நாங்கள் எல்லோரும் இவர்கள் , தங்கள் கடவுளர் மீது எவ்வுளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தோம், சிறிது நேரத்தில் ஒருவர் உட்கார இடம் இல்லாத காரணத்தினால் அவர்கள் அருகில் சென்று அமர முயன்றார் அவர்களோ அவருக்கு இடம் தர மறுத்து விட்டனர். பக்கத்தில் இருத்த முதியவர் அவருடைய இருக்கையில் சிறிது இடத்தை அவருக்கு அமரக் கொடுத்தார், அவர்கள் இருவரும் அவர்களுடைய கடவுளைப் பற்றிப் பேசினார்களே தவிர , அவர்கள் மதம் போதிக்கும் ஒரு சிறிய நெறிமுறையக் கூடப் பின்பற்ற அவர்களுக்கு முடியவில்லை ,என்ன தான் அவர்கள் ,அவர்களுடைய கடவுளைப் பற்றிப் பெருமையாக பேசினாலும் , இந்த முதியவர்க்கு இருந்த நல்ல எண்ணம் அவர்களுக்கு இல்லை என்று பார்க்கும் போது இவர்கள் போலிகள் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.
இப்படியாக ஒவ்வொரு சிறிய செயல்களைப் பார்க்கும் பொழுது இவர்கள் எதற்க்காக கடவுளை வழிபடுகிறார்கள், என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆலயத்துக்குச் செல்கிறார்கள் நன்றாக , மிக பக்தியாக வழிபடுகிறார்கள் ஆனால் வெளியே வந்தால் , தம்மால் முடிந்த உதவிகளைத் தங்களுடைய சொந்தங்களுக்கு செய்ய மறுக்கின்றார்கள்.மற்ற சாதியினரைக் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கிறார்கள்.தங்களுடைய வழிபாட்டுத் தலங்களுக்குப் பெண்கள் செல்ல அனுமதி மறுக்கிறார்கள் மதத்தைப் போதிக்கின்றார்கள் அவர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்திக்கொண்டு உயர் பதவி அடைவதற்கு மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். அவர்களிடம் சாதிய உணர்வைத் தூண்டிவிடுகிறார்கள். ஒரு சாதரண மனிதர்களுக்கு இருக்கும் நல்ல பண்புகள் கூட இவர்களிடம் இல்லை. ஆலயங்களுக்குள்ளே பதவிகளுக்காக அடித்துக் கொள்கிறார்கள்.
பொதுவாக எல்லா மதத்தின் அடிப்படையான கோட்பாடுகளைப் பார்த்தல் அன்பு,அமைதி , அடக்கம் போன்றவை தான் போதிக்கப்படுகிறது. ஆனால் அவற்றைப் போதிக்கின்றவர்களும் , அவற்றைப் பின்பற்றுபவர்களும் அவர்கள் மதம் போதிக்கின்ற நெறிமுறைகளைப் பின்பற்றுகின்றார்களா என்ற பார்த்தால் அது ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது. இப்பொழுது நம் கண் முன்னால் நடக்கும் அனைத்துத் தீவிரவாத செயல்களும் , வன்முறைச் செயல்களும் மதத்தை முன் வைத்த நடக்கின்றன. இப்படி நடப்பதன் மூலம் அவர்களே அவர்கள் மதத்தின் மீது உள்ள நல்ல எண்ணங்களைக் கெடுத்து விடுகிறார்கள்.
இப்படியான போலி மதவாதிகளும், மதத்தின் நல்ல கொள்கைகளை பின்பற்றாதவர்களும் இருக்கின்ற வரைக்கும் கடவுள் யாரிடம் இருக்க முடியும்?. தங்கள் மதங்களின் மீது பற்று இருக்க வேண்டுமே தவிர , வெறி இருந்தால் அது பிரச்சினைகளைத் தான் தூண்டி விடும்.
Labels:
domi,
dominic,
dominic raja,
kadavul,
murugan,
rajagipalaperi.,
religion,
yaar
Tuesday, July 8, 2008
திண்ணை
திண்ணை என்பது என்ன என்று கேட்டால் இன்றைய சமூகத்தில் பல பேருக்கு த்தெரிவதில்லை. திண்ணை என்பது என்ன ? அதன் பயன் என்ன ! அதனுடைய சமுக பயன்பாடுகள் பற்றிப் பார்ப்போம்.
அமைப்பு:
திண்ணை என்பது ஒரு திண்டு போன்ற அமைப்பு. இது வீட்டின் முன் பகுதியில் பிரதான வாயில் அல்லது தலைவாசல் பகுதியில் உள்ள ஒரு திறந்த வெளி அமைப்பாகும். இது காலைத் தொங்கவிட்டு அமர்வதற்கு வசதியாக இருக்கும்.இன்னொருபுறம் சுவரில் சாய்ந்து இருப்பதற்கு வசதியாக இருக்கும். திண்ணையில் இருக்கும் தூண்கள் வீட்டின் கூரையைத் தாங்கி பிடிப்பதற்கு உதவியாக இருக்கும்.

பயன்:
பழங்காலத்தில் போக்குவரத்து இல்லாத காலகட்டத்தில் மக்கள் கால்நடையாக ஒர் இடத்தில் இருந்து வேறு இடங்களுக்குச் செல்வது வழக்கம்.அந்த நேரங்களில் மக்கள் தங்களைக் கொஞ்சம் இளைப்பாற்றிக் கொள்ள வீதி ஓரங்களில் இருக்கும் எதாவது ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து செல்வார்கள். அல்லது வீட்ற்கு நெருக்கம் இல்லாத நபர்களை உபசரிபதற்க்கும் பயன்படுத்துவார்கள்.
காலையில் வேலைக்குச் செல்லும் மக்கள் மாலையில் தங்களை இளைப்பாற்றி கொள்ளவும் தங்கள் உறவினர்களோடு பேசி மகிழவும் திண்ணையை பயன்ப் படுத்துவார்கள்.
சமுகப்பயன்பாடுகள்:
பழங்காலத்தில் திண்ணையில் பள்ளிக் கூடங்களை நடத்தினார்கள்.ஊரில் உள்ள சிறார்கள் எதாவது ஒர் வீட்டின் திண்ணையில் கூடி குரு அதாவது ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கும் பாடங்களை படிப்பார்கள். இதைத் திண்ணைப் பள்ளிக்கூடம் என்பார்கள்.
ஊரில் எதாவது முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டும் என்றாலும் அல்லது குடும்பங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளை ஊரில் உள்ள ஒரு பெரியவரின் வீட்டுத் திண்ணையில் ஒன்று கூடி முடிவு எடுப்பார்கள்.
இன்றைய மக்களின் மனநிலையும் திண்ணை காலத்து மக்களின் மனநிலையும்:
இன்றையகாலத்து மக்கள் படிக்கிறார்கள் அறிவு வளர்கிறது நல்லதுதான் ஆனால் அவர்கள் மனநிலை சுருங்குகிறது. அவர்கள் மனநிலை நான்,என் மனைவி குழந்தைகள் என ஒரு குறுகிய வட்டத்துக்குள் வந்து விடுகிறது.அவர்கள் தங்கள் கட்டும் வீடுகளுக்குச் சுற்றுச் சுவர் போடுகிறார்கள் கேட்டால் பாதுகாப்பாக இருக்கும் என்பார்கள் நல்லதுதான்.சுற்றுச் சுவர் போட்டாலே என் அனுமதி இன்றி உள்ள வராதே என்று சொல்லாமல் சொல்வதுதான் பொருள்.இப்பொழுது எந்த வீட்டிலும் திண்ணை வைத்துக் கட்டுவதில்லை கேட்டால் பழங்காலத்தில் போக்குவரத்து இல்லை இப்பொழுதுதான் எல்லாம் இருக்கிறதே வழிபோக்கர்கள் இல்லையே என்று சொல்வார்கள். அல்லது திண்ணை இருந்தால் யாராவது வந்து வெட்டியாகப் பேசிக்கொண்டு இருப்பார்கள் என்பார்கள். ஆனால் அவர்கள் வீட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து நேரத்தை வீணடித்துக் கொண்டு இருப்பார்கள். தங்கள் உறவினர்களிடம் பேசுவதை விடத் தொலைபேசியில் வேறு யாரிடமாவது கதையடித்து கொண்டிருப்பார்கள். வெளியே சென்று பேசினால் யாரும் உதவி கேட்டுவிடுவார்களோ என்று பயப்படுகிறார்கள்.
ஆனால் திண்ணை வீட்டுக் காலத்து தங்கள் கட்டியிருக்கும் வீடு சிறிது என்றாலும் அதில் ஒரு பகுதியை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள திண்ணை வைத்து வீடு கட்டும் பெரிய மனதுக்காரர்களாக இருந்தார்கள்.திண்ணையில் கூடி வெட்டியாகப் பேசிப் பிரச்சனைகளை இழுப்பார்கள் என்று ஒரு வாதம் இருந்தாலும், பொதுவாக திண்ணை என்பது உறவினர்கள் நண்பர்கள் ஒன்று கூடி பேசி மகிழ்ந்து தங்கள் துன்பங்களையும்,பிரச்சினைகளயும் தங்கள் மகிழ்ச்சிகளையும் அனுபவங்களயும் பகிர்ந்து கொள்ளும் உறவின் பாலமாகவே இருந்துள்ளது. இன்று கண்டு பிடிக்கப்படும் புதிய சிந்தனையும், புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளும் திண்ணை காலத்து ஞானிகளின் வாதங்களையும் அவர்களின் சிந்தனையும் மேற்கோள் காட்டியே கண்டுபிடிகபட்டது.திண்ணை காலத்து மக்களிடம் மூடநம்பிக்கை உண்டு என்னும் வாதம் இருந்தாலும் அவர்களின் உண்மையான அன்பான உபசரிப்பாலும் எதையும் எதிர்பார்க்காமல் செய்யும் உதவியினாலும் மூடநம்பிக்கை மறைந்துவிடுகிறது.
பொதுவாக திண்ணை என்பது உறவின் பாலமாகவும், அறிவின் பல்கலைக்கழகமாகவும் இருந்துள்ளது.
குழந்தை மனம் போல் இருக்க வேண்டும் என்றால் குழந்தை போல் நாம் ஆக வேண்டும் என்பது பொருள் அல்ல. அது போல நாம் திண்ணை வீடு கட்டவேண்டும் என்று கட்டாயம் இல்லை அந்தச் சாத்தியக்கூறுகளும் இல்லை. ஆனால் நமது மனநிலையை மாற்றிகொள்வோம். நமது குழந்தைகளையும் அதன்படி வளர்ப்போம்.
Labels:
domi,
dominic,
raja,
rajagopalaperi,
thinnai,
tirunellveli,
திண்ணை
Subscribe to:
Posts (Atom)