Thursday, December 11, 2014

எங்கள் பாரதி



பயந்தவன் சொல்லுவான்
எல்லாம் கடவுள் செயல் - என்று
துணிந்தவன் சொல்லுவான்
பதில் சொல்லடி பராசக்தி...

கோழை  சொல்லுவான்
உடல் பலம் வேண்டுமென்று
புத்திசாலி சொல்லுவான்
மனதில் உறுதி வேண்டும்...

முட்டாள் சொல்லுவான்
மனிதத்தில் சாதி உண்டு - என்று
பகுத்தறிவுவாதி சொல்லுவான்
காக்கை குருவி எங்கள் சாதி....

அறியாதவன் சொல்லுவான்
அடிமைப்பெண் வேண்டும்  - என்று
அறிந்தவன் சொல்லுவான்
புதுமை படைக்கும் பெண் வேண்டும் .....


கோழை  சொல்லுவான்
நமக்கு ஏன் வம்பு - என்று
வீரன் சொல்லுவான்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்பது இல்லையே...
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்பது இல்லையே...

என்று சொல்லுவான் - அவன்தான்
எங்கள் பாரதி

Saturday, July 19, 2014

கல் மனம்


வீண் பழிகள் வீசப்படட்டும்
பொய் குற்றங்கள் சுமத்தபடட்டும்
தவறாக சித்தரித்து பேசட்டும்
இகழ்பவன் இகழட்டும்
மனதை கல்லாக்கி தாங்கிகொள்
எய்தவனுக்கு தெரியாது
இவையனைத்தும்  உன்னை
அழகிய சிற்பமாய் வடிவமைக்க
உன் மீது அடிக்கப்பட்ட உளிகள் - என்று

Monday, July 14, 2014

முதிர் கன்னி



இதுவரை 45 பேர்
இன்றுடன் 80 முறை - என்னை
உரசி சென்ற 50 வயதை கடந்த
முதிர் கன்னி - நான்

பங்குனி பணியிலும்
சித்திரை வெயிலிலும் - காய்ந்து
சிதைந்து இருக்கும் தேகத்தை
சீர் படுத்த ஒரு துணைக்காக
தவமிருக்கிறேன் நெடுநாளாய்

உள்ளூர் அரசியல்வாதிகளால் அவ்வப்போது தீண்டப்படும்
தீண்டத்தகாத பெண் - நான்

டெல்லி சந்தையில் விலை போகாத
அவலப்பெண் - நான்

நான் என்ன பாவம் செய்தேன்
தமிழ் பெண்ணாக பிறந்தது என் - தவறா

செங்கல்பட்டிலிருந்து கன்னியாகுமரி வரை
நீண்டு நெடுந்து வளைந்து நெளிந்து
தனியாக படுத்திருக்கின்றேன் -ஒரு வழிப்பாதையாக
என் முறை எப்போது வரும்மென்று!!

Note:
45 -Railway ministers
80 -Railway budget

Thursday, May 1, 2014

உழைப்பாளர் தினம்



அன்று உள் நாட்டு முதலாளிகளுக்கு
கொத்தடிமைகளாக
உடலை உருக்கி
உரிமைகளை இழந்து - உழைத்தோம்

காலம் மாறியது
கலாச்சாரம் மாறியது
உணவு பழக்கம் மாறியது
ஆடை மாறியது
ஆட்சி மாறியது  - ஆனால்
எங்கள் அடிமைத்தனம்
தொடர்கிறது - இன்றும்
பன்னாட்டு  முதலாளிகளுக்கு
கொத்தடிமைகளாக
உறவுகளை மறந்து
உணர்வுகளை மறந்து 
மனிதத்தை மறந்து -தினமும்
உழைத்துகொண்டு இருக்கின்றோம் - என்று 
மாறும் எங்கள் அடிமை வாழ்வு - எப்பொழுது
கிடைக்கும் உழைப்புக்கு இணையான தகுதி.

Saturday, March 29, 2014

என் மனைவி என் காதலி



பாசத்தை பொழியும்
பெற்றோராய் இருந்தாய்

தோல்வியில்  தோள்கொடுக்கும்
தோழனாய் வந்தாய்

சிறிய கூடாரத்தின்
சீமாட்டியாய் வலம் வந்தாய்

இல்லறம் என்னும் நல்லறம் அமைக்க - நம்
இருமனமும் சேர்த்தோம் ஓருடலாக

கெஞ்சுவதும் சிறு சண்டைகள் போடுவதும்
அழுவதும் அள்ளி அரவணைப்பதும்
கண்டிப்பதும் தெவிட்டாது அன்பு செய்வதும்
இன்பமாக இவ்வுலகை சுற்றிவந்தோம் - ஆனால்

இன்று  சிலகாலமாய்

உன்  கால்கொலுசு சப்தங்கள்
கேட்பதில்லை

உன் செல்ல கோபத்தை
பார்க்கவில்லை

தூக்க கலக்கத்தில் சூடான
தேநீர் கிடைக்கவில்லை

பிரிவு எனும் வலியில் தானே
நம் காதலின் இன்பம் தெரிகிறது

என் அருகில் எத்தனை பேர்  இருந்தாலும்
தனிமையை உணருகிறேன்
எத்தனை பொழுது போக்கு சாதனங்கள் இருந்தாலும்
ஒவ்வொரு இரவும் கொடுமையாக நகர்கிறது
என்னருகில் நீ இல்லாததால்

தற்காலிக பிரிவு என்றாலும்
மனது தவிக்கிறது - மீண்டும்
எப்போது சந்திப்போம் - மூவராக
நம் குழந்தையுடன் சேர்த்து

நீ கருவுற்று தாய் வீட்டுக்கு சென்றதால்
இதுவே என் கவிதைக்கு கருவானது

Monday, February 24, 2014

முதுமை


என் தாயும் தந்தையும்
குழந்தையாக மாறுகிறார்கள் - எனக்கு
குழந்தை பிறந்த பொழுது

Thursday, February 20, 2014

அண்ணா வா



உன் இளமை பருவம் சாகடிக்கப்பட்டது
சிறை கொட்டடியில்

உன் உணர்வு நசுக்கப்பட்டது
பொய்யான எழுத்தில் - ஆனால்

உன் திறமையை எல்லா பாதுகாப்புள்ள
சிறை மதில்களாலும் தடுக்க முடியவில்லை

உன் அறிவை எந்த காவல் படையினராலும்
முடக்க முடியவில்லை

நீ புற உலகத்தை பார்த்து
பல ஆண்டுகள் ஆகிறது

நீ சிறையில் இருந்து உலகத்தின்
வளர்ச்சிக்கு ஏற்ப உன்னை
தயார் செய்து கொண்டாய்

நீ கம்பிகளுக்கு இடையில் இருந்து - கற்றாய்
கணினி அறிவியலை

இரும்பு கோட்டையை உடைத்தாய்
உன் நன்னடத்தையால்

உன் அறிவோ, நடை பிணமாய்
இருக்கும் எங்களை விட மேலோங்கியுள்ளது - பேரறிவாய்

இதை முன்னனேற அறிந்து பெயர் சூட்டினரோ
உன் பெற்றோர் பேரறிவாளன் என்று

உனக்காக உண்மையில் உயிர் தியாகம்
செய்தவர்கள் உண்டு

உன்னை நினைத்து தினமும்
அழுதவர்கள் உண்டு

உன்னை வைத்து ஓட்டு அரசியல்
செய்தவர்களும் உண்டு

பொருத்திருந்தால் உலகத்தையும்
தன்வசபடுத்தலாம் என்ற வள்ளுவரின்
வார்த்தைக்கு ஏற்ப வாழ்ந்த
நம் தலைவர்கள் போல

கொள்ளை கூடாரத்தின் தலைநகரான
உருகுவே நாட்டின் அதிபர் ஜோஸ் முஜிகா
வறுமையில் வாடும் தன் மக்களுக்காக
17 வருடம் தனிமை சிறையில் கழித்தார்
வறுமையை போக்கினார்

கருப்பு சூரியன் கறுப்பின மக்களின்
வெண்மைக்காக வெள்ளை ஆதிக்கத்தை
எதிர்த்து போராடினார் நெல்சன் மண்டேலா
27 வருடம் தனிமை சிறையில் கழித்தார்
இருளை  ஒளியாக்கினர்

சர்வாதிகாரத்தில் இருந்து பர்மா
 மக்களை மீட்டெடுக்க ஆங்க் ஹான் சு கி
17 வருடம்  சிறையில் கழித்தார்
மக்கள் மன்றத்திற்கு வழிவகுத்தார்

மறுக்கபட்ட நீதிக்காக
மக்களின் வாழ்க்கைக்காக
உண்மைக்கு ஆதரவாக
செய்யாத பாவங்களுக்கு- செத்து மடியும் பாமரனுக்காக
நிதிக்காக விற்கப்படும் நீதிக்காக
மொத்தத்தில் சொன்னால்
மனித நேயத்திற்காக
23 வருடம் தனிமை சிறையை
கொடுமை வாழ்வை கழித்தாய் - எங்களுக்காக


உன் துன்பத்தில் மூலம் உணர்த்தினாய்
அறிவு பாடம்
உண்மை
மன உறுதி
நம்பிக்கை
எந்த கால நிலையிலும்
சோர்வடையாத மனம் என்ற குணத்தையும்

அண்ணா வா அரசியல்  அரியணை ஏற்க அல்ல !

எங்கள் மனதில் இருக்கும்
ஏற்ற தாழ்வு என்ற எண்ணத்தையும் !!

யார் பெரியவன் என்ற நிரந்தரம்
இல்லாத கவுரவுத்தையும் !!!

எங்கள் மனதில் ஆழமாக கரை படிந்திருக்கும்
சாதிய உணர்வையும்  !!!!

அடுத்தவர்களை பழிவாங்க
துடிக்கும் மனநிலையும் !!!!!

தமிழர்கள் நெஞ்சில்  பதிந்திருக்கும்
நச்சு என்ணத்தை போக்கும் மருந்தாக - வா
உலக நடை முறையை போதித்த வள்ளுவனாக - வா
வருங்காலத்தை எடுத்து உரைத்த பாரதியாக  - வா
தீண்டாமையை உடைத்தெறிந்த பெரியாராக  - வா
அன்பின் தீபமாக  - வா
அறிவின் இலக்கணமாக  - வா
தமிழர்களின்  மனதில் அரியணை ஏற  - வா
எங்கள் இதயம் கனிந்த அண்ணாவாக  - வா

உன்னை வரவேற்க காத்திருகின்றோம்
சிறைச்சாலை வாசலில்
விவேகானந்தர் இல்லாத இளைஞர்கள் போல- வா

உன் தம்பியாக உரிமையுடன்
அழைக்கின்றேன் - வா

வந்து எங்களின் உள்ளங்களில்
அறியாமை என்னும் இருள் அகற்றி
உண்மை என்னும் ஒளியேற்று !
தமிழர் என்னும்  உணர்வேற்று  !!

Thursday, February 13, 2014

காதல் ஒரு போதை



அமைதியாக பாயும்  நதி போல்
சென்ற  வாழ்க்கையில் - ஒரு
பெண்ணை சந்தித்ததும்
பள்ளம் நோக்கி போகும்
நதி போல சலனம்

பேதையை சீண்டியதும்
பெற்றோரை மறந்து
குடும்பத்தை மறந்து
லட்சியத்தை மறந்து
உழைப்பை மறந்து
கல்வியை மறந்து
தன்னிலை மறந்து 
நரகத்தையும் சொர்க்கமென  நினைக்கவைக்கும் போதை

போதையின் மயக்கத்தால்
பேதைக்காக உயிரையும் துறக்க தோன்றுகிறது
உயிரின் மதிப்பும் வாழ்க்கையின்
மறுபக்கமும் தெரியாமல்

மேதையாக உருவாக்க  பெற்றோர்கள் நினைத்தார்கள்
பேதையின் மீதுள்ள போதையால் மூடனானேன்

மது தரும் போதையை விட
மாது தரும் போதை கொடுமையானது

காதல் தரும் இன்பத்தை விட
காதல் தரும் வலி கொடுமையானது

காதல் கண்ணை மறைத்து - ஒரு
கற்பனையான உலகத்தில் மிதக்கவைக்கும் - போதை

Friday, January 31, 2014

பனை மரம்


இருந்தாலும் ஆயிரம் பொன்
செத்தாலும் ஆயிரம் பொன் - இது
யானைக்கும் மட்டும் அல்ல - எங்கள்
கருப்பு பனை மரத்துக்கும் சேர்த்துதான் !

Monday, January 27, 2014

பழமொழி

இயற்கையோடு வாழ்வு - நம்
இனத்தின் பழமொழி
இயந்திரத்தோடு வாழ்வு - நவீன
இணையத்தின் புதுமொழி!!

Monday, January 20, 2014

மனப்பான்மை

மனதில் விஷமும்
முகத்தில் பகட்டு சிரிப்பும் - இருந்தால்
தொழில் சார்ந்த மனப்பான்மை(professionalism)

மனதில் பகமையும்
முகத்தில் நமட்டு  சிரிப்பும் - இருந்தால்
சுயநலம் சார்ந்த மனப்பான்மை(Selfishness)

மனதில் உண்மையும்
முகத்தில் புன் சிரிப்பும் - இருந்தால்
அறியாமை சார்ந்த மனப்பான்மை(innocent)

Thursday, January 9, 2014

உறவு


உறவு என்பது எங்கே?

பணம் தரும் சுகத்திலா?
பதவி தரும் கவுரவத்திலா?
பயம் தரும்  பகட்டிலா?
அறிவு தரும் தலைகனத்திலா?
இல்லை இல்லை - நான்

காற்று  வீசும் திசையில்
சுய நலத்திற்க்காக  வளைந்து  கொடுக்கும்
நாணலாக இல்லை - நான்

இடத்திற்கு இடம்
தற்பாதுகாப்பிற்காக  நிறம்  மாறும்
பச்சையோந்தி இல்லை - நான்

எனக்கு மற்றவரை
ஏமாற்றும்  சூது தெரியாது
தற்பாதுகாத்து  கொள்ள  சுயம் தெரியாது
தவறான உள்நோக்கம்  தெரியாது

துன்ப படுவோரும்
துயர படுவோரும்
கஞ்சத்தனம் உள்ளோரும்
பயன் படுத்தும்
இலவச தொலைபேசி எண் - நான்

மற்றவர் ஒளி பெற
தன்னயே உருக்கி
உருகியவற்றை ஒன்று
சேர்த்தாலும் மீண்டும்
அடுத்தவர் வாழ்வில்
ஒளியேற்றும் மெழுகுவர்த்தி - நான்

மன நிறைவு தரும் சுகத்தில்
தன்னலமில்லா உழைப்பில்
உயிர் தரும் உணர்வில்
அன்பு மட்டும் தரும் மடமையில்
அனைத்தையும் இழந்து

தன்னையும் வெட்டுவோர்க்கு
இறுதி வரை மூச்சி காற்று கொடுக்கும்
மரம் போல  முட்டாள் தான்
உறவு என்னும் நான்!!


Tuesday, December 10, 2013

கருப்பு வைரத்துக்கு கண்ணீர் அஞ்சலி


இருண்ட கண்டத்தில் உதித்த -உதய சூரியனே
இரும்புத்திரையை உடைத்தெழுந்த கதிரே!

பழங்குடி இனத்தில் பிறந்த -பகலவனே
பலமான நிற வெறியர்களை  சுட்டெரித்த சுடரே!

அடிமையின் இருளை அகற்ற வந்த-அகல் விளக்கே
அகங்கார வெள்ள இனத்தை கருக்கிய நெருப்பே

அறப் போராட்டத்தில்   தொடங்கி
ஆயுதப் போராட்டத் தலைவனாக நின்றவன் நீ!

தன்  இன மக்கள் விடுதலைக்காக - சிறையில்
தன்னையே உருக்கிகொண்ட மெழுகுவர்த்தி நீ!

மன்னிப்பை கேட்டு விடுதலை பெறுவதை விட
மரணமே போதும் என்ற மன உறுதியாளன்  நீ!

உலக தலைவர்களுக்கெல்லாம்
உன்னத தலைவன் நீ !

உலக  போராளிகளுக்கெல்லாம்
உதாரணம் நீ !

பூர்விக குடியின் புதல்வன் நீ !
பூலோகமே போற்றும் கருப்பு வைரம் நீ !

அமைதியின் வடிவம் நீ !
அன்பின் தோற்றம் நீ !

உன்னைக் கட்டித்தழுவத் துடிக்கின்றோம்.
என்ன செய்வது எங்களை விட்டு பிரிந்து விட்டாய்  நீ!

மேகங்களிடம் எங்கள் கண்ணீரை காணிக்கையாக
அனுப்பியுள்ளோம் பெற்றுக்கொள்!!.

Monday, December 9, 2013

டெல்லி மக்களுக்கு ஒரு சலாம்!


ஓட்டுக்கு பணம் இல்லை
மது விருந்து  இல்லை

அரசியல் பின்புலம் இல்லை
சினிமா மாயா கவர்ச்சி இல்லை

இலவசங்கள் இல்லை
பிரித்தாலும் சூழ்ச்சி இல்லை

சாதியம் இல்லை
மத வெறி இல்லை

ஊழலுக்கு எதிரான உணர்வு இருந்தது
உண்மை மீதான தாகம் இருந்தது

ஏழைகளின்  ஆதரவு இருந்தது
இளைஞர்களின்  உழைப்பு  இருந்தது

மாணவர்களிடம் எழுர்ச்சி இருந்தது
மக்களிடம் உணர்ச்சி இருந்தது

கையில் துடைப்பம் இருந்தது
அரசியல் குப்பைகளை துடைக்க

ஓட்டு  இயந்திரத்தில் துடைப்பம் இருந்தது
உணர்வாளர்களின் என்னத்தை வெளிப்படுத்த

உணர்வுக்கு உயிர் கொடுத்து
இந்திய மக்களுக்கு அறிவின்
எடுத்து காட்டாய் திகழ்ந்த
டெல்லி மக்களுக்கு நன்றி

இதற்க்கு ஆதாரமாய் விளங்கிய
அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஒரு சலாம்!

Thursday, November 21, 2013

ஒப்புக்கு ஒன்று


பல்லாயிர கணக்கான மரங்களை வெட்டி
விவசாய நிலங்களை அபகரித்து
அனைத்திற்கும் ஆதாரமான குளங்களை அழித்து
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைத்து
பன்னாட்டு நிறுவங்களை அனுமதித்தது - அரசு

"தாளை சேமியுங்கள் மரத்தை பாதுகாப்போம் "
அலுவலகம் முழுவதும் விளம்பர தாள் ஒட்டி
"Go GREEN SAVE PAPPER SAVE TREE" -என்று
அறிவு பூர்வமான புள்ளி விபரத்தோடு பேசுவோம்!
பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் – நாங்கள்

Saturday, November 16, 2013

கலவை


பல மென்மையான  இதழ்கள் ஒன்று சேர்ந்து
மணம்  உருவான கலவை ஒரு - பூ

பல மனமுடைய  பூக்கள் ஒன்று சேர்ந்து
வடிவம் உருவான கலவை ஒரு - செடி

பல வடிவமான  செடிகள்  ஒன்று சேர்ந்து
அழகு  உருவான கலவை ஒரு - தோட்டம்

பல அழகான  பண்புகள்   ஒன்று சேர்ந்து
அன்பே உருவான கலவை ஒரு - அம்மா 

Wednesday, November 6, 2013

ஆலயம்


விண்ணை முட்டும் கோபுரங்கள்
மனதில் வினைகள்

பக்தி ஊட்டும்  மறையுரைகள்
வெளியே பொய்யுரைகள்

பரவசம் மூட்டும் பாடல்கள்
கொடூர எண்ணங்கள்

சேவை பற்றி போதனைகள்
வியாபார நோக்கங்கள்

அன்பை வெளிபடுத்தும் வார்த்தைகள்
அருவருப்பான செயல்கள்

கடவுளே உன் ஆலயத்தின்
புனிதம் இதுதானா இன்னும்
நீ மௌனம் காப்பது ஏன்?

Wednesday, October 16, 2013

காரணம் - என்னவோ ?


உலக மக்கள் பேச தொடங்குவதற்கு முன்
மொழிக்கு இலக்கணம்  வகுத்த - தமிழ்
இன்று பொலிவிழந்து நிற்க காரணம் - என்னவோ ?

பொறியல் முன்னேற்றம் இல்லாத காலத்தில்
மிகப்பெரிய கல்லணை கட்டிய - இடத்தில்
அரசு கட்டடம் உடைந்து போக காரணம் - என்னவோ ?

கட்டட கலைக்கு சான்றாக  ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்  கட்டிய கோவில்கள் கம்பீரமாக நிற்க
எம் மக்கள்  குடிசையில் வாழும் காரணம் - என்னவோ ?

அறிவியல் அறிவு இல்லாத காலத்தில் நவ கிரகங்களை
கண்டுபிடித்த ஞானிகள் பிறந்த மண்ணில் -சுகாதார
சீர் கேடுகள் நிறைந்து கிடக்க காரணம் - என்னவோ ?

பசு கன்றுக்கு நீதி கிடைக்க தன மகனை கொன்ற
மன்னன் வாழ்ந்த நாட்டில் - அரசியல் வாதிகளுக்காக
நீதி விற்கப்பட காரணம் - என்னவோ ?

புலியை முறத்தால் அடித்து  விரட்டிய வீர மக்கள்
வாழும்  ஊரில் ஒலிம்பிக்கில் -ஒரு பதக்கத்திற்காக
ஏங்கி  நிற்கும் காரணம் - என்னவோ ?

போக்குவரத்து இல்லாத நேரத்தில் ரோமாபுரிக்கு
வணிகம் செய்தவர்கள் வாழ்ந்த நாட்டில் -அந்நிய
பொருள்களுக்கு அடிமைப்பட்டு கிடக்க காரணம் - என்னவோ ?

கடல் கடந்து மலை கடந்து வெற்றி பெற்ற
 நாடுகளை வளைத்த வீர மறவர்கள் வாழ்ந்த - நாட்டில்
சொந்த மண்ணில் தோற்ற காரணம் - என்னவோ ?

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்த குடி – தமிழ் மொழியை
எம் மக்கள்  பேச மறுக்க காரணம் - என்னவோ ?

Wednesday, October 2, 2013

குறுகிய வாழ்க்கை


காலம் வேகமாக கடந்து செல்கிறது
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான
பயணத்தில் ஓடிக்கொண்டு  இருக்கின்றோம்
மரணம் எப்படியும் நேரிடலாம்

வறியவர்களிடம் வஞ்சகம் செய்யாதே
பாமரர்களிடம்  சுரண்டி தின்னாதே
எளியவரிடம்  கவுரவும் பார்க்காதே
பெண்களிடம் வன்கொடுமையில் ஈடுபடாதே

அன்பு என்னும் தேன் வேண்டுமா?
மகிழ்வு  என்னும்  கனி வேண்டுமா?
உறவு என்னும் பால் வேண்டுமா?
அனைத்தையும் அள்ளி பருகு

உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது
மரணம் நெருங்கி கொண்டிருக்கிறது
இடைக்காலத்தை போலியாக கழிக்காதே
மற்றவர்களை பற்றி புரணி பேசாதே

மனித நேய மான்பு செய்வோம்
பெருமை கொள்வோம்!
பொய்யர்களிடம் ஒதுங்கி நிற்ப்போம்
போலிகளை பொறமை கொள்ள வைப்போம்

அறம் செய்வோம், நாம் அனுபவிப்போம்!
உதவி செய்வோம், வாரி வழங்குவோம்!!
அடுத்தவர்களிடம் இருந்து உயர்ந்து இருப்போம் !!!
வாழ்வை மகிழ்வாக களிப்போம் !!!!

Friday, September 27, 2013

என் கணிதம்


கருணை  பொறுமை என்ற
நன்மைகளை - கூட்டினேன் (+)

பொறாமை  வஞ்சகம் என்ற
தீய பழக்கத்தை - கழித்தேன் (-)

கல்வி தொண்டு என்ற
இலட்சியங்களை    - பெருக்கினேன் (*)

பகிர்வு  நேர்மை என்ற
நல்லொழுக்கத்தை  - வகுத்தேன்(/)

வெற்றி  தோல்வி  என்ற
நிகழ்வுகளை ஏற்றுகொண்டேன்  - சமமாக(=)

வாழ்க்கை  கணக்கினை பிழையில்லாமல்  தீர்த்திட
அன்பு   என்னும் சூத்திரம் செய்து
கணக்கில்லா வளர்ச்சியை பெற்றிட்டேன்!

Thursday, September 19, 2013

கூட்டம்



மத தலைவர்களுக்காக கூடிய கூட்டம்
மக்களுக்காக கூடியிருந்தால் - இன்று
மனித நேயம் பிறந்திருக்கும்

கோவில்களுக்காக கூடிய கூட்டம்
கல்விக்காக கூடியிருந்தால் - இன்று
கருத்து பிறந்திருக்கும்

கடவுளுக்காக கூடிய கூட்டம்
காயபட்டவர்களுக்காக கூடியிருந்தால் - இன்று
கருணை பிறந்திருக்கும்

சாமியார்களுக்காக கூடிய கூட்டம்
சாமானிய மக்களுக்காக கூடியிருந்தால் - இன்று
சமதர்மம் பிறந்திருக்கும்

சாதி தலைவர்களுக்காக கூடிய கூட்டம்
சமூகத்திற்காக கூடியிருந்தால் - இன்று
சமத்துவம் பிறந்திருக்கும்

நடிகர்களுக்காக கூடிய கூட்டம்
நாட்டுக்காக கூடியிருந்தால் - இன்று
நன்மை பிறந்திருக்கும்

பணத்திற்காக கூடிய கூட்டம்
படிப்பதற்கு கூடியிருந்தால் - இன்று
பண்பு பிறந்திருக்கும்

சிலைகளுக்காக கூடிய கூட்டம்
சீரமைப்புகளுக்கு கூடியிருந்தால் - இன்று
சுத்தம் பிறந்திருக்கும்

கேளிக்கைகளுக்காக கூடிய கூட்டம்
கேள்வி கேட்ட்க கூடியிருந்தால் - இன்று
கடமை பிறந்திருக்கும்

அரசியல்வாதிகளுக்காக கூடிய கூட்டம்
அன்புக்கு கூடியிருந்தால் - இன்று
அமைதி பிறந்திருக்கும்

தலைவர்களுக்காக கூடிய கூட்டம்
தன்மானத்திற்காக கூடியிருந்தால் - இன்று
தமிழ் ஈழம் பிறந்திருக்கும்

காதல் பறவை

 
எங்கையோ பிறந்து வளர்ந்த பறவை
வந்து அமர்கிறது என் மனம் என்னும் -மரத்தில்

அங்கு உண்டு உரையாடி விளையாடி
அசுத்தம் செய்து பறக்கிறது அடுத்த மரத்த்தை - தேடி

என் மனம் என்னும் மரம் காத்து கொண்டு இருக்கிறது
என்னிடத்தில் கூடு கட்டி வாழும் பறைவைக்காக!

Wednesday, September 18, 2013

அன்னையிடம்


கற்றலில் கண்டேன் - அறிவை 
அறிவை கண்டேன் - தேடலில் 
தேடலில் கண்டேன் - உழைப்பை 
உழைப்பில் கண்டேன் - உயர்வை 
உயர்வில் கண்டேன் - மகிழ்வை 
மகிழ்வில் கண்டேன் - தொண்டை 
தொண்டில் கண்டேன் - அன்பை  
அன்பில் கண்டேன் - நிறைவை 
நிறைவில் கண்டேன் - உண்மையை 
உண்மையில் கண்டேன் - அமைதியை 
இவை அனைத்தையும் கண்டேன் - அன்னையிடம் !

Thursday, September 12, 2013

ஆள்பவர்கள்


சுதந்திரத்திற்கு முன்
வெள்ளைக்காரர்கள் - ஆண்டார்கள்
சுதந்திரத்திற்கு பின்
கொள்ளைக்காரர்கள் - ஆளுகிறார்கள்

Wednesday, September 4, 2013

ஆமென்


படிப்பது பைபிள்
போதிப்பது தேவ வார்த்தைகள்
தவறாமல் செல்வது
ஞாயிற்று கிழமை ஆராதனை
பாடுவது கீதங்களும் கீர்த்தனைகளும்
கட்டுவது வானுயர்ந்த கோபுரங்கள்

முக்கியத்துவம் கொடுப்பது
பதவிக்கும் பணத்திற்கும்
இருப்பது கோஷ்டி  பூசல்
செய்வது ஓட்டு  அரசியல்
விற்பது திருமண்டல சொத்தை
பேசுவது அடுத்தவர்களை இகழ்ந்து

எல்லாம் இறைவன் செயல்
அவனின்றி அணுவும் அசையாது
துதி கனம் மகிமை
அனைத்தும் இறைவனுக்கே  - ஆமென்

Monday, September 2, 2013

முகநூல்(Facebook)

முகநூலி(Facebook)ல் நண்பர்கள் - ஆயிரம்
முகம்(Face) பார்த்து பேச யாரும் இல்லை!

தொலைத்தேன்

படித்தேன்
பணத்தை -தொலைத்தேன்

அயலூர் சென்றேன்
அன்பை -தொலைத்தேன்

வேலைக்கு சேர்ந்தேன்
வேண்டியவர்களை -தொலைத்தேன்

பணம் சம்பாதித்தேன்
பண்பை -தொலைத்தேன்

உண்மையை பேசினேன்
உயர்வை -தொலைத்தேன்

மேல் பதவி பெற்றேன்
மனிதத்தை -தொலைத்தேன்

அவளை கண்டேன்
அனைத்தையும் -தொலைத்தேன்

Monday, August 5, 2013

கெடுவதில்லை



கொடுப்பவன் கெடுவதில்லை - ஏமாற்றி 
வாங்குபவன்   வாழ்வதில்லை 

Saturday, August 3, 2013

விடியலைத்தேடி

ஊழல் மிகுந்த அரசியல்வாதிகள் 
பொறுபற்ற அரசு அதிகாரிகள் 
அடிமை படுத்தும் சாதித்தலைவர்கள் 
மடமை  படுத்தும்  மதத்தலைவர்கள் 
நீதியை விற்கும் நீதித்துறை 
கற்ப்பு இழந்த காவல்துறை 
இலாப நோக்கத்தில் கல்விநிறுவனங்கள் 
உணர்வை மதிக்காத தனியார்நிறுவனங்கள்
மனித நேயமற்ற சமுதாயம் 
சுயநலம்மிக்க  தனி மனிதர்கள் 
இந்த சீர்கேடு நிறைந்த 
அழுக்காற்றில் நீந்துகிறேன் விடியலைத்தேடி!

Wednesday, July 17, 2013

ஊதியம்


அம்மாவின் அன்பு 
அப்பாவின் அறிவுரை 
உடன் பிறந்தவர்களின் ஊக்கம் 
உறவினர்களின் உற்சாகம் 
நண்பர்களின் நம்பிக்கை 
துணைவியின் தூண்டுதல் 
குழந்தையின் குரல் - இதற்க்கு
எந்தவகையிலும் இணையில்லை
 மாதத்தின் முதல் நாள்
 ஊதியம் !!!!!!!!!!!!!

Wednesday, November 14, 2012

கடவுளுக்கு சிக்கல்



ஒரு தாய் கடவுளிடம் வேண்டினாள் 
என் பிள்ளைகள்  நோய் நொடி இல்லாமல் 
நூறாண்டு வாழ வேண்டுமென்று !

மற்றொரு தாய் கடவுளிடம்  வேண்டினாள் 
எனது மகன் தொடங்கியுள்ள மருத்துவமனையில் 
அநேக  வருமானம் வரவேண்டும்  என்று !!

யாருடைய  வேண்டுகோளை ஏற்க்க 
என்று வழி தெரியாமல் 
கடவுள் தவித்து நின்றார் !!!

Friday, November 9, 2012

மனிதத்தின் புனிதம்




கிழிக்கும் கடைக்காரர்களுக்கு  தெரிவதில்லை 
புத்தகம் எழுதியவரின் உனர்வு 

வெட்டும் கத்திகளுக்கு தெரிவதில்லை 
உயிரின் மதிப்பு 

விமர்சிக்கும் வாய்களுக்கு தெரிவதில்லை 
விமர்சிக்க பாடுபவரின் ஆற்றல் 

அரசியல்வாதிகளுக்கு தெரிவதில்லை 
தொண்டின்  இனிமை 

உயர்நிலையினருக்கு  தெரிவதில்லை 
பாமர மக்களின் கண்ணீர் 

மொத்தததில் நமக்கு தெரிவதில்லை 
மனிதத்தின்  புனிதம் 

Monday, January 23, 2012

கருவறை



கருவறையை வயிற்றில்
சுமக்கும் பெண்ணுக்கு - கோவில்
கருவறைக்கு செல்ல
அனுமதி இல்லை!

Monday, October 17, 2011

விபத்து



இறைவா!
பிறப்புக்கு மட்டும் -ஒரு
வழி வகுத்தாய்
ஏன் ?
இறப்புக்கு மட்டும் - பல
வழிகளை கொடுத்தாய்!

Sunday, October 9, 2011

சென்னை போக்குவரத்து சிக்கல்(சிக்னல்)



முதல் சிக்னலில் கால் இழந்த மாற்று திறனாளி - கேட்டார்
2 ரூபாய் கொடுத்தேன் - கருணையோடு

அடுத்த சிக்னலில் கண் பார்வை இழந்த சகோதரி - கேட்டாள்
5 ரூபாய் கொடுத்தேன் - அனுதாபத்தோடு

அடுத்த சிக்னலில் போக்குவரத்து காவலாளி - கேட்டார்
200௦௦ ரூபாய் கொடுத்தேன் - வேதனையோடு

Friday, June 3, 2011

மூன்றுக்கு ஒரு சிறப்பு


மூன்றுக்கு ஒரு சிறப்பு உண்டு
இயல், இசை,நாடகம் என தமிழ் -மூன்று
தமிழ் வளர்த்த சங்கங்கள் -மூன்று
பகுத்தறிவு பாசறையில்
பெரியார் , அண்ணா, கலைஞர்
என்று வேந்தர்கள் - மூன்று
இவை அனைத்தும் ஒன்றாய்
கலைஞராய் பிறந்தது ஜூன் - மூன்று

எட்டு எட்டாக எடுத்து வைத்து
என்பத்தி எட்டை எட்டினாய் - நீ
உன் ஓயாத உழைப்பின் வேகம்
குறையவில்லை இன்றும்

தமிழுக்கும் அமுது என்று பெயர் - என்ற
பாவேந்தர் பாரதிதாசனின் வாக்கு
உன் மேடை பேச்சை கேட்ட்டுத்தான்
தமிழும் அமுது என்று அருந்தினோம்

சூரியன் மறைந்து விட்டது - என்று
சிலர் எள்ளி நகையாட - நாங்கள்
புரிந்து கொண்டோம் பூமிதான்
தன்னை மறைத்து கொண்டது
சற்று இளைப்பாற - சூரியன்
எப்பொழுதும் மறையாத ஒன்று

நெருக்கடி என்னும்
நெருப்பாற்றில் நீந்தியவன் -நீ
இப்பொழுது இருக்கிற இறுக்கமான சூழ்நிலை
என்ன செய்து விடும் - உன்னை

ரயிலடியில் உன்மீது பாய்ந்து வந்த
உளியை கண்டு அஞ்சாதவான் -நீ
வெட்டி வாய்பேச்சி வீரர்களின்
வார்த்தை உன்னை என்ன செய்து விடும்?
எதிரிக்கும் தெரியும் உன் ஆற்றல்.

பொதுவாழ்வில் உன்னைப்போல்
ரணங்களும்,அவமானங்களும்
பெற்றவர்கள் எவரும் இல்லை -ஆம்
ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் என்ன புதியதா?

எங்கள் உணர்வுகளுக்கு உரமூட்ட
உன் எழுத்து தேவை - தோல்வியால்
சோர்ந்திருக்கும் எங்களை கதகதபேற்ற
உன் பேச்சு தேவை சிங்கமென கிளம்பி -வா

நீ இருப்பது சிலருக்கு வெறுப்பு
அதுவே எங்களுக்கு சிறப்பு.

Thursday, May 5, 2011

அட்சய திருதியை




சிறுக சிறுக பணம் சேர்த்து

வட்டிக்கு சிறிது பணம்வாங்கி



அட்சய திருதியை என்றால்

குண்டுமணி அளவாது தங்கம்

வாங்க வேண்டும் என்ற - நம்

மூதாதையர்களின் முடநம்பிக்கையை - தொடர



கடைத்தெருவுக்கு சென்று

கூட்ட நெரிசலில் சிக்கி திணறி

ஒருகிராம் தங்கம் வாங்கி

மகிழ்ச்சியாய் வீடு திரும்பினேன்

கழுத்தில் கிடந்த ஒரு பவுண்

தங்க சங்கிலி களவு போனது தெரியாமல்.

Friday, February 11, 2011

IVR



அவர் கேட்க , நான் விழிக்க
சந்தேகத்தை போக்க - நான்
நாடினேன், தேடினேன் , ஓடினேன்

அருகில் இருக்கும்
நண்பர்களை விட்விட்டு
அடிக்கடி உபயோகபடுத்தும்
"google search" ஐ விட்விட்டு
எட்டுத்திசையும் துலாவினேன்

இறுதியில் என்னுடய கைபேசியை
எடுத்து வாடிக்கையாளர் சேவையை
தொடர்பு கொண்டேன்

உங்கள் விருப்பமான
மொழியை தேர்வு செய்ய
எண் 1 ஐ டயல் செய்யவும்
நானும் அவ்வாறு செய்தேன்

வாடிக்கையாளர் சேவை
அதிகாரியை தொடர்புகொள்ள
எண் 9 ஐ டயல் செய்யவும்
நானும் அவ்வாறு செய்தேன்

என்னுடைய வினாவை
அவரிடம் தொடுத்தேன்
அவர் நகைத்தார்
நீங்கள் இப்போது
பயன் படுத்தியதே
"IVR" தான் என்று சொல்ல
அப்பொழுதுதான் நான்
விழித்தது கொண்டேன்.

"IVR" என்பது ஒரு
தானியங்கி அமைப்பு
நம்முடைய உள்ளீடை உள்வாங்கி
உள்ளீடுக்கு ஏற்றவாறு
நமக்கு பதில் கொடுக்கும் - ஒரு
தானியங்கி இயந்திர அமைப்பு
என்று புரிந்து கொண்டேன்

Tuesday, December 14, 2010

சாதி தீ மறையட்டும்.

புயல் என்பது இயற்கையின் கிளர்ச்சி
புரட்சி என்பது உணர்வின் கிளர்ச்சி

புரட்ச்சி என்பது எரிமலைப் போன்றது. அது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உறங்கி கொண்டிருகிறது. அது எப்பொழுதும் வெடிப்பதில்லை. திடீரென ஒருநாள் வெடித்துச் சிதறுகிறது. பல்வேறு நாடுகளில் புரட்சியால் , எரிமலை போல வெடித்துச் சிதறிய நாட்கள் வரலாற்றின் பக்கங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

புரட்சிக்கான காரணமும் , யாரிடமிருந்து யாருக்கு விடுதலை தேவை என்பதும் நாட்டிற்க்கு நாடு, இனத்திற்கு இனம் வேறு படுகிறது. தற்போது தமிழ் மக்களாகிய நாம் சாதி , மத , இன , மூடநம்பிக்கைகளையும் ஒழிக்க ஒரு புரட்சியில் ஈடு படவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்த புரட்சியில் ஈடுபடத்தவறினால் வந்தாரை வாழவைக்கும் தமிழினம் அழிந்து போகும் அபாயம் ஏற்ப்படும்.

கள்ளம் கபடமற்ற குழந்தையிடம் முதன்முதலில் சாதியை புகுத்துவது பள்ளிகூடமாகவே உள்ளது. நீ எந்த சாதியை சார்ந்தவன்? என்று கேட்டு அந்த குழந்தையின் மனதில் சாதித்தீயை பற்ற வைக்கிறார்கள். அறியாமை இருளை அகற்றவேண்டிய கல்விக் கூடங்களே சாதியை நன்கு அறிமுகப்படுத்துகிறது.

பாம்பு புற்றை விட
சாதி சங்கங்களைப் பார்க்கும் போது தான்
பயம் அதிகரிக்கின்றது

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் சங்கம் வைத்து தமிழை வளர்த்துள்ளார்கள். அனால் இருபதாம் நூற்றாண்டு தமிழர்களோ சங்கம் வைத்து சாதியை வளர்க்கிறார்கள். இன்றைய அரசியலோ சாதியை நம்பிதான் உள்ளது. தேர்தலின் வெற்றித் தோல்விகளும் சாதியை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன. சாதிகளை ஒழிக்கப் பாடுபடவேண்டிய அரசியல் வாதிகள் மக்களிடயே சாதி உணர்வை ஊக்குவித்து தங்களுடைய பதவி ஆசைகளை நிறைவேற்றி கொள்கின்றனர்.

கூண்டுக் கிளியின் விடுதலைக்காக
பூனை கிளர்ச்சி செய்ததது - அது
கிளியின் விடுதலைக்கு அல்ல
தன் பசியை நீக்க (கலைஞர்)

இது போல தான் இன்றைய சாதித் தலைவர்கள் . சாதிப் பெயர் கொண்ட சங்கங்கள் அமைப்பதும் , சாதி மக்களுக்காக நன்மை செய்வது போல் நடிப்பதும், அதனை அரசியல் கட்சியாக மாற்றிக் கொள்வதும் , அதனை பயன்படுத்தி பதவிகளை கைப்பற்ற முயற்சிப்பதும் தலைக்குனிய வைக்கும் செயல்களாகும்.

சாதிகள் அன்று முதல் இன்று வரை சமுதாயத்தை அலைக்கழித்து வருகின்றது. சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட பலர் சாதியை எதிர்த்து குரல் எழுப்பி கொண்டே இருக்கிறார்கள் எனினும் சாதி ஒழிந்த பாடில்லை.

சாதிகள் சட்டமயமாக்கப்படிருக்கும் இந்த நாட்டில் ஒரு மனிதன் தன்னை எவ்வாறு அறிமுகப் படுத்தி கொள்வான்?
தான் இந்த சாதியை சார்ந்தவன் என்றா?
தான் இந்த இனத்தை சார்ந்தவன் என்றா?
தான் இந்த மதத்தை சார்ந்தவன் என்றா?

இளைய சமுதாயமே! தமிழ்த்தாயின் வீரப்புதல்வர்களின் விலைமதிப்பற்ற இரத்தம் தேய்ந்து புனிதமடைந்திருக்கும் தமிழ் மண்ணில் இருந்து கொண்டு ஏளனத்திற்குரிய கீழ்த்தரமான வாழ்கை வாழ வெட்கமாக இல்லையா? இன்றைய தலை முறையை எண்ணி புரட்சி பாதையில் நடைபோட உங்கள் மனம் விரும்பவில்லையா? இதையெல்லாம் மறந்தவிட்டு இன்றைய இளைய சமுதாயம் தான் தலைவியாக நினைக்கும் சினிமா நடிகர்களின் பிறந்த நாளுக்கு சுவரொட்டி ஓட்ட விரைந்து கொண்டிருக்கிறது.

இளைய சமுதாயத்தின் சாதிப் பெயரால் தாழிடப்பட்டுள்ள தமிழர்களின் இதயக்கதவுகள் உடைந்து நொறுங்கட்டும். தமிழர்களின் பாமரத்தன்மையும் , அப்பாவித் தனமும் அழியட்டும் , நம் பெயருக்கு பின்னால் உள்ள சாதித்தீ மறையட்டும் , மனித நேயம் வளரட்டும். தமிழினம் செழிக்கட்டும்.

இளைஞனே!
நீ முடங்கி கிடந்தால்
சிலந்தியும் சிறைபிடிக்கும்

நீ பொங்கி எழுந்தால்
எரிமலையும் துணைநிற்கும்

உன்னால் பூமியை
புரட்டவும் முடியும்

உன் எலும்புகள்
தீண்டாமையை உடைக்கட்டும்

உன் பார்வை வீச்சு
மூட நம்பிக்கையை எரிக்கட்டும்

உன் பேச்சால்
தமிழன் சிந்திக்கட்டும்

சீரழிந்த சமுக்கதத்தை சீர்படுத்த
சாவின் விழிம்புவரை தொடரட்டும்
உன் போராட்டம்(கவிதாசன்)

Monday, December 13, 2010

ஒற்றுமை


எங்கள் வலிமை புரியாமல்
நீண்ட நாள் பிரிந்து இருந்தோம்
காலத்தின் கடமை தெரியாமல்
காலம் கடத்தி வந்தோம்

மற்றவர்களின் துன்பத்தை
இன்பமாய் ரசித்து வந்தோம்

நல்லவேளை நமக்குப் பிரச்சினை இல்லை
என்று நீண்ட நாள் ஒதுங்கி இருந்தோம்

நமக்கு ஏன் தேவை இல்லாத வேலை
உண்டு உறங்கி வந்தோம் மிருகங்கள் போல

நாட்டைக் கரையான் அரிக்கிறதா
ஊரை அட்டைப் பூச்சி உறிஞ்சிகிறதா
நமக்கென்ன உணவு கிடைக்கிறதா என்றிருந்தோம்

சேவல் கூவினாலும் கூவாவிட்டாலும்
பொழுது விடிந்துவிடும் என்று
இன்னும் தூங்கிக்கொண்டு இருக்கின்றோம்

ஒர் உயிர் துடித்தது இந்த
இந்த மானிடத்தின் நிலை நினைத்து
ஊழலின் அகாங்காரத்தைப் பார்த்து

தன உயிரை மாய்த்து மக்களுக்கு
உணர்த்தியது உணர்வோடு இருங்கள்
ஒற்றுமையாய் இருங்கள் என்று.

தமிழின் இனிமை !

தமிழ் அமிழ்தினும் அமிழ்து!
தமிழ் ஓசை கேட்பது
மழலையினும் இனிமை!

தமிழ் பேசுவது
தாய்மையுடனும் இனிது!!

தமிழ்த் தாய் இலக்கணத்துடன்
இலட்சியமாய் வாழ்கின்றவள்
இதனால்தான்

எங்கள் தாய் மொழியாகி,
தனிமொழியாகி, தலைமொழியாகி,
பின் செம்மொழியானாய்

தமிழ் தேனினும் இனிமை
தமிழை வியாபார
மொழியாகப் பார்க்காவிடில்

Thursday, December 9, 2010

மொட்டிலே கருகிப்போன மலர்களுக்கு!

குறிப்பு :- கும்பகோணம் குழைந்தைகள் தீயில் பலியான நினைவு நாளில் எழுதியது




நெருப்பே !
உனக்குள் உயிர் இல்லாததால் - இந்த
பிஞ்சுகளின் உயிரை கரியக்கிவிட்டயா
உனக்குத்தான் அறிவில்லையே
நீ என்ன செய்வாய் - அதற்கு
நாங்கள் என்ன செய்வது?

உனக்கு உலகத்தில் -இந்த
குழந்தகைள் தான் கிடைத்தா?

பிஞ்சுகளின் உழைப்பில் வாழும்
பித்தலாட்டகாரர்களை விட்டுவிட்டு
ஏன் இந்த சிறு குஞ்சுகளை எரித்தாய்?

மொட்டுகளே!
மகாமகத்தில் நாங்கள் கரைத்த
எங்கள் பாவங்கள் எல்லாம்
உங்கள் மீது படிந்து விட்டதோ அய்யகோ!

மரணமே!
நாட்டில் அடுத்தவர்கள் உழைப்பை
சுரண்டிவாழும் கயவஞ்சவர்களை
விட்டுவிட்டு உஎன் இந்த
துள்ளி விளையாடும்
துளிர்களை சுட்டெரித்தாய்

கடவுளே!
இந்த அரும்புகள் கதறியது -உன்
காதில் விழவில்லையா?
மலர்களின் மரண ஓலம் -உன்
மனதை கரைக்கவில்லையா?
உனக்கு அழிக்கவும் தெரியும்
என்று அழித்துவிட்டாய - இல்லை
நீ பிறந்தது என்ன இலங்கையா?

Tuesday, December 7, 2010

தலைவர் வாழ்த்து! தமிழ் வாழ்த்து!!




நெல் ஆடிய காவிரிகரையில்
வில் ஆடிய களத்தில்
சொல் ஆடிய சோழ மண்டலத்தில்
வீர குழந்தை பிறந்தது - அது
தாய் மொழிக்கே பெயர் சூட்டும்
தாயக பிறந்தது -தேனினும் இனிய
தமிழாக பிறந்தது - தாழ்த்த பட்டவர்களுக்கு
தந்தையாக பிறந்தது - தமிழினத்தின்
தலைமகனாக பிறந்தது - சூத்திரனுக்கு
சூத்திரமாக பிறந்தது - தமிழுக்கு
தொண்டனாக பிறந்தது - உழைப்புக்கு
ஊற்றாக பிறந்தது- திராவிடத்தின்
திரவியமாக பிறந்தது - பகுத்தறிவின்
பாலமாக பிறந்தது - பெரியாரின்
பொறியாக பிறந்தது - அண்ணாவின்
அன்பாக பிறந்தது - வள்ளுவனின்
வடிவமாக பிறந்தது - பாரதிதாசனின்
பாடலாக பிறந்தது - கண்ணதாசனின்
கவிதையாக பிறந்தது - கழகத்தின்
சூரியனாக பிறந்தது - உடன்பிறப்புகளுக்கு
உயிராக பிறந்தது!

பலகலைகழகம் சென்று படித்தவன் இல்லை -நீ
பலகலைகழகங்கள் உன்னை இன்று படிக்கின்றன


காமராஜர் ஏற்றிய கல்வி ஒளியை
கடுகளவும் குறையாவிடாமல்
காத்த பணியாளன் -நீ


தண்ணீருக்கே தாகமா என்று
வியக்கும் அளவுக்கு செந்தமிழை
ரசிக்கும் தமிழ்த்தேனி -நீ

வரலாறு தெரியாத காகங்கள்
கரையும் பொழுது கனிவுடன்
வரலாறு கூறி திருத்தும் பண்பாளன் -நீ

இக்கட்டான சூழ்நிலையிலும்
நகைச்சுவை புரியும்
சமையோதின நாயகன் -நீ

தமிழ் படங்கள் ஆரியத்தில்
தத்தளிக்கும்போது பராசக்தியாக
நெருப்பூட்டிய புதுமைபித்தன் - நீ


கழகத்தில் சிறு கழகங்கள்
ஏற்ப்படும் பொழுத்து கனிவுடன்
கையாளும் குயவன் - நீ


தமிழனத்திற்க்கு ஒன்றென்றால்
தன்னையே கொடுக்க வரும்
முதல்வன் -நீ


குறளை கடைந்தெடுத்த
கயவன் -நீ


கவிதை ஊற்றென பொழியும்
கற்பனையாளன் -நீ


கர கர குரலினால் இளையோரை
ஈர்த்த கள்வன் -நீ


முத்தமிழின் இனிமையை
உணர்த்திய இனியவன் -நீ


தீந்தமிழ் மீது
தீராத பற்றுகொண்ட காதலன் -நீ


மூத்தகுடி தமிழ் குடியின்
முதியவன் -நீ

சிந்தனையாளர்களின் தலைவன்- நீ

உழைப்பினால் ஓய்வுக்கு ஓய்வு
கொடுக்கும் இளைஞன் -நீ


அறுபது ஆண்டுகளுக்கும்
மேலாக தமிழகத்தின்
தலைப்புசெய்தி -நீ

ஆளும்கட்சியாக இருந்தாலும்
எதிர்கட்சியாக இருந்தாலும்
வில்லாக அம்பாக வரும்
விமர்சனங்களை தாங்கிய பீமன் -நீ

தமிழகத்தில் இரண்டே நிலைதான்
உன்னை கண்மூடித்தனமாக - எதிர்ப்பவர்கள்
உன்னை கண்மூடித்தனமாக - ஆதரிப்பவர்கள்

பல பத்திரிக்கைகள் உன்னால்தான்
பிழைப்பு நடத்துகின்றன


உன் துண்டு நிறம் மாறினும்
உன் தொண்டின் நிறம் மாறவில்லை


உன் கால்கள் தளர்ந்தாலும்
உன் தடம் மாறவில்லை


உன் பெருமை பற்றி பாட
உன்னருகில் கவிஞர்கள் இருக்கலாம்
உன் அருமை சொல்ல
உன்னருகில் அறிஞர்கள் இருக்கலாம்

ஆனால்
என்னை போன்ற உடன் பிறப்புகள்
உனக்கு காட்டிய நன்றி என்ன?

கழகத்தை ஐந்து முறை
ஆட்சியில் அமர்த்தியதும்
தோல்வியை உன்னை நெருங்க
விடாமல் துரத்தியதும்

என் தாத்தா காலத்திலும் முதலமைச்சர் -நீ
என் காலத்திலும் முதலமைச்சர் -நீ
என் பேரன் காலத்திலும்
முதல்வராய் வாழி நீ பல்லாண்டு !


Thursday, October 14, 2010

கனவுகளின் கதாநாயகன் அப்துல்கலாம்




சீர்திருத்தத்தின் சிற்பியே
சிந்தனைகளின் சிகரமே
எளிமையின் ஏற்றமே
அறிவின் அரசரே

ராக்கெட் மட்டுல்ல ஏற்றியது - நீ
பாரதத்தின் புகழையும் எங்கள் இலட்சியத்தையும்.

பறைசாற்றி கொள்ளாத பகுத்தறிவுவாதி -நீ
ஏனென்றால் அறிவியல் தமிழன் நீ.

கனவு காணுங்கள் , இலட்சியத்தோடு இருங்கள் என்று
ஈரடிகளால் எங்களை வளைத்த வள்ளுவன் - நீ

முறையான சமுதாயம் அமைய
பள்ளி சிறார்களிடம் சீர்திருத்த கருத்துக்கள்
மூலம் மின்சாரம் பாய்ச்சிய ஐன்ஸ்டின் -நீ

கனவு காணுங்கள் வல்லரசாக மாற்றலாம்
இளஞ்சர்களின் பொறுப்பை உணர்த்தி
வாருங்கள் என்றழைத்த விவேகானந்தர்- நீ

மனித வளம் உள்ள நம் நாட்டின்
மக்கள் சக்தியைச்சீர்படுத்தவேண்டும் என்று
தத்துவங்கள் பொழிந்த சாக்ரடீஸ் - நீ

இயற்கையிடமும் , உன்னை நாடி வருபவர்களிடமும்
கடிதம் எழுதுபவர்களிடமும் அன்பு காட்டும் மனித நேயன் - நீ

நீ எழுதிய அக்னிச் சிறகுகள்
எங்கள் அறியாமையை எரித்தது

நீ எழுதிய எழுச்சித் தீபங்கள்
எங்கள் இலட்சிய திரியைப்பற்றவைத்தது

மன்னர்களும் , பிரபுக்களும் நிர்வாகம் செய்த
குடியரசுத்தலைவர் மாளிகை உன்னால்தான்
மக்கள் மன்றம் ஆனது.

பாராளுமன்றத்தில் நீ எடுத்துக்காட்டிய
மக்கள் நல திட்டங்கள் - அவர்களின்
சுயலாப செயல்பாடுகளால் எடுபடவில்லை.

நீ மாற்ற வேண்டும் என்று நினைத்தாய்
பாரதத்தை வல்லரசாக அமைதிப்பூங்காவாக
ஆனால் சுயலாப அரசியல்வாதிகளால்
உன் முயற்சிக்கு பலன் அளிக்கவில்லை

ஒரு நாள் விடியும் அது உன்னால் முடியும்
என்றழைத்த உன் இளைஞ்ர் கூட்டம் எங்கே?
இதோ மதுக்கடை வாயிலிலும்,வீணான கேளிக்கையிலும்
நடிகர்களின் மாயத்தோற்றத்தில் மயங்கியும் கிடக்கிறது

முடியும் வரை போராடு
உன்னால் முடியும் வரையல்ல
உன் இலட்சியம் நிறைவேறும் வரை -என்று
எங்களின் உணர்வுக்கு உயிர் கொடுத்த கலாமே
உங்களுக்கு எங்களின் சலாம்

நாங்கள் கனவு கண்டால்
நீதான் கனவில் - ஏனென்றால்
அறிவுசார் கருத்து பெட்டகம் நீ
இலட்சிய கோட்பாடுகள் கொண்ட மாமேதை நீ
எங்கள் கனவுகளின் கதாநாயகன் நீ

Tuesday, October 12, 2010

சிறகைவிரிக்கும் நினைவுகள்



எனக்குச்சிறு காயம் பட்டால்
தனக்கு வலி ஏற்ப்பட்டது போல் பதறும் அம்மா

எனக்கு உடல்நிலை சரியில்லைஎன்றால்
தன் தூக்கத்தை தியாகம் செய்யும் அப்பா

தங்களை விட என்னை அதிகமாக
நேசித்த அத்தை மாமா

நான் அடம்பிடிப்பேன் என்பதற்காக
தன் புதுச்சட்டையைத்தரும் அண்ணன்

நான் அழுவேன் என்பதற்காக
தன் திண்பண்டங்களை தரும் அக்கா

எனது வால்தனத்தை ருசித்த பாட்டி
எனது விளையாட்டை ரசித்த தாத்தா

எனது சிறு வயது குரும்புதனத்தில்
கவலைகளை மறந்து மகிழ்ச்சியடையும் உறவினர்கள்

எந்தக்கவலையும் இல்லாமல்
நண்பர்களுடன் விளையாட்டு.

நான் இங்கு கணினியோடு முட்டிமோதிகொண்டு
மூளை சிறுத்துக்கொண்டு போகும்போது
இந்த நினைவுகள் மனதில் சிறகடித்து பறக்கின்றது
இதயத்திற்கு இதமாக இருக்கின்றது.

நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்
நீங்கள் செய்த தியாகத்திற்கு?